நயம்பட பேசு





சாம்பியன்ஸ் லீக்கில் காயம் காரணமாக சென்னை அணியில் விளையாட முடியாத மேற்கிந்திய தீவு அணியின் பிராவோ, தோனிக்கு எழுதிய கடிதத்தின் நகல்...
ர(வி)ன்னடிக்காத தோனிக்கு, நண்பா! கேப்டன் என்றாலே காலைத் தூக்கி அடிக்கும் விஜயகாந்த் என்றே நினைத்திருந்தேன், கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பிறகுதான் புரிந்தது அது Ballä தூக்கி  அடிக்கும் நீதான் என்று. அப்படிப்பட்ட உன் கேப்டன் பதவியே இப்பொழுது கர்நாடகா முதல்வர் பதவி போல ஊசலாடுவதைப் பார்த்தால் எனக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது.

எங்கள் மேற்கிந்தியத் தீவு அணி, உலகக் கோப்பையை வென்றதன் ரகசியத்தைக் கூறுகிறேன். அதைப் பயன்படுத்தி இந்த சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றவும்.

*  முதலில், ‘கங்னம்’ டான்ஸ் ஆடக் கற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே இந்த டான்ஸ்தான். பேட்டிங் பிராக்டீஸ், பவுலிங் பிராக்டீஸ் மட்டும் இல்லாமல் தினம் மூன்று மணி நேரம் டான்ஸ் பிராக்டீசும் செய்ய வேண்டும். நம்ம சென்னை அணி பவுலர்கள் பவுலிங் போடுவதே டான்ஸ் போல இருந்தாலும், இந்தத் தனி டான்ஸும் அவசியம். ஒவ்வொரு ஓவர் பவுலிங் போட வரும்போதும், முடிந்தால் ஒவ்வொரு பந்துக்கு இடையிலும் ஒரு குத்து டான்ஸ் போடலாம்.

*  இரண்டாவது விஷயம்... மேற்கிந்திய அணியில் குட்டையானவரே கெயில்தான்! ஆனால் உங்க அணியில் பல வீரர்கள் ஐந்தடிக்கும் குறைவாக உள்ளார்கள். இதனால் எதிர் அணிகள் சென்னை அணியை எலிமெண்டரி ஸ்கூல் அணிபோல நினைத்து விடுகிறார்கள். அதனால் ஐந்தடிக்கும் குறைவான வீரர்கள், இரண்டடியில் ஒரு நாற்காலி செய்து, அதனை காலில் கட்டிக்கொண்டு விளையாடலாம். ஆனால் காலுக்கு அடியில் ஸ்டூல் தெரியாத மாதிரி பேன்ட்டை நீளமாகத் தைத்துக்கொள்ள வேண்டும்.

*  மூன்றாவதும் முக்கியமானதுமான மேட்டர், எங்கள் அணியின் கேப்டன் பேரே டேரன் ‘சாமி’தான். அதனால் சென்னை அணி வீரர்களின் பெயர்களை லேசாகப் பட்டி தட்டி, தோனி சாமி, பத்ரிநாத் பகவான், ஹஸ்சி விநாயகர், மோர்கல் முனியப்பன் என பெயர் மாற்றம் செய்தால் ஏமாற்றம் கிடைக்காது.

*  நான்காவது, அஷ்வின் நன்றாக பவுலிங் செய்தாலும் ரன் கொடுத்து விடுகிறார். அதனால் எங்கள் அணி நரேன் போல, அணில் வாலை தலையில் வைத்த மாதிரி வாஸ்து ஹேர்ஸ்டைலுக்கு மாற்றி விடுங்கள்.

*  ஐந்தாவது, எங்கள் முன்னாள் வீரர் சந்தர்பால் கற்றுக்கொடுத்தது போல ஸ்டெம்ப்ஸ் பெயில்சை எடுத்து பேட்டிங் கிரீசில் ஆரம்பித்து, அப்படியே பிட்ச்சில் குத்திக் குத்தி பவுலிங் கிரீஸ் வரை போய்விட வேண்டும். இப்படி ஆங்காங்கு பிட்ச்சை ஓட்டை போட்டு வைத்தால், எதிரணி வீசும் பந்துகள் வேகம் குறைந்து வரும். நாமளும் இளிச்சவாயர்கள் கிடைத்த தமிழக போலீஸ் போல நாலு சாத்து சாத்தலாம். இப்படிக்கு, விசில் போட்டுக்கொண்டே விடைபெறும் பிராவோ!