நன்றி





‘‘ராகவா, நான் சொல்றனேன்னு தப்பா நினைக்காதே... நீயும் உன் மனைவியும் உங்க பிடிவாதத்தை விட்டுட்டு மருமகள் சாந்தியை உடனே வீட்டுக்கு அழச்சிட்டு வர்ற வழியைப் பாருங்க. ஏன்னா, வரவர உம் மகன் பார்த்திபன் போக்கு சரியில்ல. பொண்ணுங்களோட அவன் பைக்ல சுத்திக்கிட்டுத் திரியறதை நானே பலமுறை பார்த்துட்டேன். அவனைச் சொல்லிக் குத்தமில்ல. கல்யாணம் கட்டி அவன் என்ன சுகத்தைக் கண்டான்?’’ - ராகவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது நண்பர் கோவிந்தனின் பேச்சு.

அடுத்த வாரமே ஒரு நல்ல நாளாகப் பார்த்து ராகவன், மனைவி சகிதம் சம்பந்தி வீடு போய் மருமகளைக் கையோடு அழைத்து வந்துவிட்டார். கூடாத சகவாசத்தால் ஒரே மகன் வழி தவறிப் போய்விடக் கூடாதே என்ற பயத்திற்கு முன்னால் நகை, சீர், வரதட்சணை பாக்கி வசூல் என்கிற அவர்களின் வறட்டுப் பிடிவாதம் பஞ்சாய்ப் பறந்துவிட்டது.

‘‘ஷீலா, சரளா, நான்சி! உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்! உங்க ஃப்யூச்சரைப் பத்தி கூட யோசிக்காம, நானும் என் மனைவியும் சேரணும்கிறதுக்காக, என் கூட பைக்ல வந்து கோவிந்தன் அங்கிளை ஏமாத்தினது சூப்பரா வொர்க் அவுட் ஆயிடுச்சி!’’ - தன் அலுவலகத் தோழிகளுக்கு, மனமார நன்றி சொன்னான் பார்த்திபன்.