போட்டோ




‘‘பொண்ணு பார்க்க போறதுக்கு முன்னால நான் எல்லாத்தையும் விசாரிச்சுக்கறேன். பொண்ணு பேர் ரம்யா. ஐ.டி கம்பெனியில வேலை பார்க்கறா. அப்புறம் நான் கேட்டிருந்த போட்டோ வேணுமே. தரகர்கிட்ட கேட்டீங்களா?’’ என்றான் கிஷோர்.
‘‘என்னடி இவன்... இப்படி கேட்கறான். நாம போட்டோ கேட்டதும் தரகர் ஒரு மாதிரி பார்த்தாரு. இவன் அடங்க மாட்டான் போலிருக்கே’’ - பதறினார் அப்பா.
‘‘விடுங்க... அவன் ஏதாவது லாஜிக் வச்சிருப்பான்’’ என்றாள் அம்மா.
இரவு உற்சாகமாக வந்தான் கிஷோர்.
‘‘என்னடா ஆச்சு?’’

‘‘நான் போய் பேசிட்டேன். போட்டோவுல பார்த்தபடியே பொண்ணோட அம்மா இளமையா, ஹெல்த்தியா இருந்தாங்க. அவங்க கவர்ன்மென்ட் வேலையில இருக்கறது ஒரு கூடுதல் தகுதி!’’
‘‘அதெல்லாம் கிடக்கட்டும். எதுக்காக பொண்ணோட அம்மா போட்டோவை காலையில கேட்டே?’’
‘‘அப்பா... இப்ப அழகா இருக்கற ரம்யா, நாளைக்கு குண்டாகி அவ அம்மா மாதிரி ஆகிட்டா எப்படி இருப்பாள்னு தெரிஞ்சுக்க வேணாமா? தவிர, அவ அம்மாவுக்கு சுகர், ஹார்ட் பிராப்ளம்னு இருந்தா, இவளுக்கும் வருமே. அவங்க வசதியாவும் ஹெல்த்தியாவும் இருந்தாதானே காலாகாலத்துக்கும் எங்களுக்கு எல்லாம் செய்துகிட்டு இருக்க முடியும். என்ன நான் சொல்றது?’’
தொலைபேசி ஒலித்தது.
‘‘என்னங்க... அந்தப் பொண்ணு ரம்யா உங்களோட போட்டோ கேட்கறா. நான் என்ன பதில் சொல்றது?’’
இப்போது கிஷோர் விழிக்க ஆரம்பித்தான்.               

சூர்யகுமாரன்