நிழல்களோடு பேசுவோம்



சென்னை புத்தகக்  கண்காட்சியில்  என்ன செய்ய வேண்டும்? வரும் ஜனவரி 10ம் தேதி 37வது சென்னை புத்தகக் கண்காட்சி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பொங்கல் விடுமுறைக்கு ஊருக்குப் போக வேண்டுமே என்று வாசகர்கள் பலர் இப்போதே கவலைப் படுகிறார்கள். புத்தகங்களில் ருசி உள்ள யாருக்கும் புத்தகக் கண்காட்சியை விட்டுவிட்டு செல்ல மனமிருப்பதில்லை. அந்த நாட்களில் வெளியூரில் இருக்கும் வாசகர்கள் பலர், கண்காட்சிக்கு வரமுடியாத ஏக்கத்தை போனில் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்படி என்ன இருக்கிறது சென்னை புத்தகக் கண்காட்சியில்? புத்தகக் கண்காட்சிகள் எல்லா ஊர்களிலும் இப்போது நடக்கின்றன. எல்லா புத்தகங்களும் எல்லா ஊர்களிலும் கிடைக்கின்றன.

ஆனால் சென்னை புத்தகக் கண்காட்சி தமிழகத்தில் எங்கோ இருக்கும் வாசகர்களை அழைத்துக்கொண்டே இருக்கிறது. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் பலர், ‘எவ்வளவு லக்கேஜ் கொண்டு போக முடியும்?’ என்ற கவலையுடன் கண்காட்சியில் அலைந்து கொண்டிருப்பதைக் காணலாம். ஆன்லைனில் புத்தகம் வாங்க அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் கண்காட்சிக்கு கடல் கடந்து வருவார்கள். இதுதான் நேசிக்கும் ஒன்றோடு தன்னை ஒரு பொதுவெளியில் இணைத்துக்கொள்ளும் இயல்பு. தீவிர விருப்பம் எல்லோருக்கும் இருப்பது போல வாசகனுக்கும் இருக்காதா?

சாமி எல்லா இடத்திலும் இருக்கிறது என்று தெரிந்தும் கோயிலுக்கு வருபவர்கள் போல! தினமும் டி.வி.யில் பேசும் தலைவர்கள் பொதுக் கூட்டம் பேசும்போது அதைக் காண நெரிசலில் முண்டியடிப்பது போல! இந்தக் கலாசார உணர்வுதான் இந்தத் தொழில்நுட்பப் புரட்சி உருவாக்கியிருக்கும் தனிமைக்கு நடுவே நாம் ஒரு ஜன சமூகம் என்ற உணர்வை இன்னும் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

‘கண்காட்சியில் அப்பளக் கடையில்தான் கூட்டம்’ என்று கிண்டலடிப்பவர்களை நான் ஏற்பதில்லை. அப்பளம் எல்லா இடத்திலும் கிடைக்கிறது. அதை புத்தகக் கண்காட்சியில் மெனக்கெட்டு வந்து சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை. லட்சக்கணக்கான புத்தகங்களுக்கு நடுவே கூட்டமாக மனிதர்கள் நடந்து செல்வதில் ஒரு போதை இருக்கிறது. அந்த போதைதான் ஒரு எழுத்தாளனாக, வாசகனாக, பதிப்பாளனாக என்னை 13 ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சிகளை நோக்கி ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.

சென்னை புத்தகக் கண்காட்சி இந்த 37 ஆண்டுகளில் சிறுகச் சிறுக வளர்ந்து வந்திருக்கிறது. 2000க்குப் பிறகுதான் அது ஒரு திருவிழாவாக மாறியது. 2006-2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தின் ஆதரவுடன் புத்தகக் கண்காட்சிகள் பெரும் உற்சாகம் பெற்றன. கடந்த 5 ஆண்டுகளாக தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் சென்னை புத்தகக் காட்சியை முழுமையாக தத்தெடுத்துக்கொண்டன. கண்காட்சியை சென்னையின் மிகப்பெரிய நிகழ்வாக மாற்றியதில் ஊடகங்களின் பங்கே பிரதானமானது. சன் டி.வி. சென்ற ஆண்டு தினமும் அரை மணி நேரம் எஸ்.ராமகிருஷ்ணனை வைத்து 10 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியது.

புத்தகங்களை விற்கும் இடம் என்பதைத் தாண்டி இந்தக் கண்காட்சி ஒரு கலாசார நிகழ்வாக மாற்றப்பட வேண்டும் என்பதும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பதும் நீண்ட நாள் கோரிக்கைகள். ஏதோ ஒரு காரணத்தால் அவை முழுமையாகச் செயல்படுத்தப்படாமல் இருக்கின்றன. ‘புத்தகக் கண்காட்சியில் என்னென்ன சீர்திருத்தங்கள் தேவை’ என்று ஃபேஸ்புக்கில் கேட்டிருந்தேன். பலரும் பல விஷயங்களை சுட்டிக் காட்டியிருந்தார்கள்.

கண்காட்சி பேச்சரங்குகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். பழைய காலி டப்பாக்களை தவிர்த்து எழுத்தாளர்களுக்கு இடம் தர வேண்டும். செறிவான பேச்சுகளுக்கும் அர்த்தமுள்ள விவாதங்களுக்கும் ஏற்ப அந்த மேடை மாற்றியமைக்கப்பட வேண்டும். இது தவிர நூல் வெளியீட்டு விழாக்களுக்கு என்று சுமார் 150 பேர் அமரக்கூடிய சிற்றரங்கு ஒன்று அவசியம். அதைக் குறைந்த வாடகைக்குத் தரலாம். 90 நிமிட ஸ்லாட்டுகளாக அவற்றைத் தந்தால் சிறு பதிப்பாளர்களுக்கு உதவும். நாள் முழுக்க ஏராளமான நூல் வெளியீடுகள் நடந்து, கண்காட்சி களை கட்டும்! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எழுத்தாளர் - வாசகர் சந்திப்பிற்கான அரங்கை மறுபடி உருவாக்க வேண்டும். எழுத்தாளர்கள் நிற்க இடமில்லாமல் கண்காட்சியில் வெறுமனே அலைந்துகொண்டிருக்கும் காட்சி ஏற்புடையதல்ல.

இலக்கிய இதழ்கள், சிற்றிதழ்களுக்கென்று தனியாக ஒரு அரங்கை ஒதுக்கலாம். ஒரே இடத்தில் இதழ்களுக்கான சந்தா பெறவும், பழைய இதழ்களை வாங்கவும் அது வசதியாக இருக்கும். பொன்னியின் செல்வன், ஜோசியம், சமையல், வாழ்க்கை வரலாறுகள், உபதேசங்கள், டிக்ஷனரிகளுக்கு நடுவே புதிய நூல்களைக் கண்டறிய, தேவைப்படும் புத்தகம் எந்தப் பதிப்பகத்தில் அல்லது ஸ்டாலில் கிடைக்கும் என்பதை அறிய தேடல் வசதியுடன் கூடிய ஒரு மின்னணு கேட்லாக்கை கண்காட்சியில் ஆங்காங்கே வைக்கலாம். நல்ல கழிப்பறை என்பது புத்தகக் கண்காட்சியின் நீண்ட நாள் கோரிக்கை. குறைந்த விலையில் நல்ல உணவு கிடைக்க செய்யலாம்.

புத்தகக் கண்காட்சியில் நல்ல ஆரோக்கியம் உள்ளவரே ஒரு நாளில் முழுமையாகச் சுற்றிப் பார்ப்பது கடினம். 600க்கும் மேற்பட்ட கடைகள். பல நீண்ட வரிசைகள். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தளர்ந்து ஆங்காங்கே நடைபாதைகளில் உட்கார்ந்திருக்கும் காட்சி வேதனைக்குரியது. கண்காட்சிக்குள் ஒவ்வொரு வழியின் இரு பக்கங்களிலும் உட்கார, இளைப்பார நிறைய நாற்காலிகள் போட்டு வைக்கலாம். எல்லாக் கடைகளிலும் கிரெடிட் கார்டு வசதி இருப்பதில்லை. அதற்கான வசதிகளை பபாசி இன்னும் அதிகமாக அளிக்கலாம். மக்களுக்கு ஆங்காங்கே குடிநீர் வசதிகள் செய்து தரலாம். உள்ளே நுழைகையிலேயே ஸ்வைப் செய்து ஐந்நூறு, ஆயிரம், இரண்டாயிரம் போன்ற தொகைக்கு பபாசி கார்டுகளை வழங்கலாம்.

உள்ளே எந்தக் கடையாக இருந்தாலும் செல்லுபடியாகத்தக்க வகையில் அவற்றைப் பயன்படுத்த இயலும். ஏ.டி.எம் வசதிகளை செய்யலாம். யாராவது வங்கிகள் முன்வந்தால், தவணை முறை கடன் வசதியும் அளிக்கலாம். கண்காட்சி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு மாறிய பிறகு, நுழைவாயிலிலிருந்து உள்ளே நிறைய தூரம் நடந்து கண்காட்சிக்கு வரவேண்டியிருக்கிறது. பெரும்பாலானோர் நடந்து வரும்போதே சோர்ந்து போகின்றனர். கண்காட்சியைச் சுற்றிப் பார்த்துவிட்டு புத்தகங்களையும் சுமந்துகொண்டு மக்கள் தடுமாறி நடந்துசெல்லும் காட்சி துயரமானது. நுழைவாசல் முதல் கண்காட்சி வரை சில ஷேர் ஆட்டோக்கள் வைத்தால் எல்லோருக்கும் வசதியாக இருக்கும். குழந்தைகள் விளையாட சிறியதோர் திடல் வைக்கலாம்.

பத்து சதவீதம் மட்டுமே கழிவு தர வேண்டும் என்பதை பபாசி மறுபரிசீலனை செய்ய வேண்டும். முந்தைய ஆண்டுகளில் வெளிவந்த நிறைய நல்ல புத்தகங்கள் ஒவ்வொரு பதிப்பாளரிடமும் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை விற்பது அவர்களின் உரிமை. வாசகர்களுக்குக் கூடுதல் கழிவு தருவது இன்னும் பலரையும் கண்காட்சியை நோக்கி ஈர்க்கும். நிறைய சிறிய பதிப்பாளர்கள் குறைந்தபட்ச விற்பனையாவது செய்ய இது உதவும்.

பழைய புத்தகங்களை விற்கும் கடைகளை அனுமதிக்கலாம். பைரேட்டட் புத்தகங்களைக் காரணம் காட்டி இதை மறுக்கிறார்கள். பைரஸி ஆங்கில நூல்களில்தான் இருக்கிறது. பழைய தமிழ்ப் புத்தகங்களை விற்க அனுமதிக்கலாமே! போதிய விளம்பரங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எல்லா புத்தகக் கண்காட்சியிலும் இருக்கிறது. மக்களைச் சென்றடையக்கூடிய விலை குறைந்த விளம்பர முறைகளை நாடலாம். ஆட்டோ விளம்பரங்கள் நல்ல பலன் தரும். மக்கள் கூடும் இடங்களில் கண்காட்சிக்கு முந்தைய தினங்களில் துண்டுப் பிரசுரங்களை பெரிய அளவிற்கு வினியோகிக்கலாம்.

முக்கிய பதிப்பகங்களிலிருந்து இதற்கான ஸ்பான்சர்களை பெறலாம். உதாரணமாக, ஒரு பதிப்பகம் கண்காட்சி குறித்து ஒரு சிறிய துண்டுப் பிரசுரத்தில் பத்தாயிரம் பிரதிகள் அச்சிட்டுத் தரலாம். அதன் ஒரு பக்கம் கண்காட்சி குறித்த விளம்பரமும், மறுபக்கம் அந்தப் பதிப்பகத்தின் விளம்பரமும் இருக்கலாம். 50 பெரிய பதிப்பகங்கள் இணைந்தால் 5 லட்சம் துண்டுப் பிரசுரங்கள். அதை விநியோகிக்க பதிப்பகங்களிலிருந்து சில தினங்களுக்கு ஊழியர்களைத் தரும்படி கேட்கலாம். இதையெல்லாம் செய்வார்கள் என்று நம்பித்தான் இந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பபாஸி குழுவினருக்கு வாக்களித்தேன். பார்க்கலாம்...

டப்பிங் படங்களின் வரவு இந்த ஆண்டு சரிந்துவிட்டதாமே?
மு.மதிவாணன், அரூர்.
டப்பிங்குகளுக்குப் பதிலாக இப்போதுதான் நேரடியாக அந்தப் படங்கள் இயக்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கின்றனவே...

வாழ்வில் எந்தப் பருவத்தில் பொறுமை அவசியம்?
- வண்ணை கணேசன், சென்னை-110.
ஒரு பெண்ணிற்குக் காத்திருக்கும் பருவத்தில்; பிறகு மரணத்திற்குக் காத்திருக்கும் பருவத்தில்!

மறைந்த மண்டேலா பற்றி?
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.
போராட்டத்தின், விடுதலையின் இலக்கணம்!

‘டெண்டுல்கர் புகழ் பாடுவதை பாகிஸ்தான் ஊடகங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று தாலிபன் அமைப்பு எச்சரிகை விடுத்துள்ளது பற்றி?
- பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
கிரிக்கெட் தீவிரவாதம் தாலிபன் தீவிரவாத்தைவிட தீவிரமானது என்று அவர்களுக்குத் தெரியாது.

மரபுக்கவிதை, புதுக்கவிதை - இரண்டில் நீங்கள் ரசிப்பது எது?
- எல்.ஆர்.கணபதி, சென்னை-91.
இரண்டிலும் ஒளிந்திருக்கும் உண்மையான கவிதைகளை.


(சமூகம், இலக்கியம், சினிமா, அரசியல்... எதைப்பற்றியும் கேளுங்கள் மனுஷ்யபுத்திரனிடம். உங்கள் கேள்விகளை ‘மனுஷ்யபுத்திரன் பதில்கள், குங்குமம், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை -600004’ என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.email: editor@kungumam.co.in)
நெஞ்சில் நின்ற வரிகள்

அழியும் கூத்துக்கலைஞனின் வாழ்வை உக்கிரமாகச் சொன்ன படம் ‘அவதாரம்’. அதில் இடம்பெற்ற இந்தப் பாடல், ஒரு பார்வையற்ற பெண்ணின் புகைமூட்டமான உணர்ச்சிகளை அவ்வளவு அழகாக எழுதிச் செல்கிறது. பாடலின் இசை, பாடப்பட்ட விதம், காட்சிப்படுத்தப்பட்ட விதம்... எல்லாமே மனதில் நுட்பமான உணர்ச்சிகளை அலை அலையாக எழுப்புகிறது.
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புலே பார்வையற்ற பெண்ணிடம் பாடல் முழுக்க வண்ணங்கள் பற்றி பேசப்படுகின்றன. கேட்கக் கேட்க மனம் கரைகிறது. எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையிலே உள்ளது என்ன என்ன?
இளையராஜாவும் எஸ்.ஜானகியும் அவ்வளவு அந்தரங்கமான உணர்வை இந்தப் பாடலில் ஏற்படுத்துகின்றனர்.

எழுதிச் செல்லும் இணையத்தின் கைகள்

சிறந்ததைக் கண்டடைந்து பகிர்ந்துகொள்ளும் சரண்யா சச்சிதானந்தத்தின் பதிவு இது: ‘‘நினைவிடங்களைச் சென்று பார்ப்பதில் நம்மில் பலருக்கு பாரபட்சம் ஏன்... பதின்மூன்று பிரசவங்களுக்குப் பின் இறந்த ஒரே ஒரு பெண்ணின் நினைவிடமான தாஜ்மஹாலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் பலரை கொன்றழித்த ‘ஜாலியன் வாலாபாக்’ நினைவிடத்திற்குக் கொடுக்கப்படுவதில்லை. ஜாலியன் வாலாபாக்கில் இறந்தவர்களின் உண்மை எண்ணிக்கைக்கு இன்றுவரை கணக்கு கிடையாது. இறந்ததாக கணக்கு காட்டப்பட்ட அனைத்து அப்பாவிகளின் பெயரையும் அங்கே வாழும் சீக்கியர்கள் அத்தனை பேரும் மனப்பாடமாக நினைவில் வைத்திருக்கின்றனர்.

நான் அங்கு சென்றிருந்தபோது, ‘அவர்கள் அனைவரும் எங்கள் ரத்தத்தில் ஏதோ ஒரு விதத்தில் கலந்திருக்கிறார்கள். அவர்கள் உயிர் கொடுத்தே இந்த தேசம் சுதந்திரம் பெற்றது. அதனால் நாங்கள் சுதந்திர நாளை மிட்டாய் கொடுத்தெல்லாம் கொண்டாடுவதில்லை. அது எங்களுக்கு உணர்ச்சிபூர்வமான நாள்...’ என்று அங்கிருந்த ஒரு டிரக் டிரைவர் கூறக் கேட்டேன். அங்கே சென்று உங்கள் பெயர் ‘உத்தம்சிங்’ எனக் கூறிப் பாருங்கள். அப்பெயர் யாருக்கிருந்தாலும் சீக்கியர்கள் சல்யூட் வைப்பார்கள்! ஏனெனில், ஜாலியன் வாலாபாக் கொலையாளி ஜெனரல் ஓ.டயரை சுட்டு வீழ்த்திய உத்தமர் பெயரே ‘உத்தம்சிங்’ என்பதாகும்...’’- ‘களம்’ மற்றும் ‘உயிர்மை’ இணைந்து திருச்சியில் நடத்திய எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தக வெளியீட்டு விழாவில் எஸ்.ராவின் ஏற்புரையிலிருந்து...

https://www.facebook.com/saranya.satchidanandam


(பேசலாம்...)