வேலைக்குப் போகாதீர்கள்!



என்னுடைய வேலை என்னிடம் இருந்திருக்கா விட்டால், எனக்கு வாழ்க்கை என ஒன்று இருந்திருக்காது! டெம்பில் கிராண்டின் முதலில் சில கேள்விகளுக்கு பதில் தேவை. 

1) மனிதன் ஆதிகாலத்தில் மிருகங்களைப் போல் காடுகளில் வாழ்ந்தான். அவன் தனது தேவைகளுக்காக இயற்கைச் சீற்றம், கொடூர மிருகங்கள் ஆகியவற்றோடு மட்டுமின்றி, தன்னைப் போன்ற மனிதர்களுடனும் போராட வேண்டியிருந்தது. போராட்டங்களுக்கு மத்தியில்தான் அவன் வாழ்ந்து முன்னேறினான். ஒப்புக் கொள்கிறீர்களா?

2) ‘இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து...’ என்ற திருக்குறளை அறிந்திருப்பீர்கள். ‘ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்ய வேண்டுமென்றால், யார் யாரால் என்னென்ன செய்ய முடியுமோ, அதனை ஆராய்ந்து அவரவர் சக்திக்கேற்ப வேலைகளைக் கொடுக்க வேண்டும்’ என்கிறார் வள்ளுவர். இது சரிதான், நானும் ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும்தான் சமாளித்துவருகிறேன் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?
3) ஒரு நண்பர் உங்களிடம் கடன் கேட்க வருகிறார் என உணர்கிறீர்கள். அவரது நாணயத்தில் உங்களுக்கு நம்பிக்கை கிடையாது. உடனே என்ன செய்வீர்கள்? ‘‘எங்கிட்டயே பணம் இல்லப்பா’’, ‘‘நானே உங்கிட்ட கேட்கலாம்னு நினைச்சேன்...’’ என ஏதேதோ சொல்லி நிலைமையை சமாளிக்கப் பார்ப்பீர்கள். ஒப்புக்கொள்
கிறீர்களா?

4) உங்கள் தெருவில் ஒரு வி.ஐ.பி இருக்கிறார். அவரும், ஒரு பிச்சைக்காரரும் உங்கள் வீட்டு வாசலுக்கு வரும்போது, இருவருக்கும் ஒரே விதமான வரவேற்பை அளிப்பீர்களா? வி.ஐ.பிக்கு பிரத்யேக வரவேற்பைத்தானே அளிப்பீர்கள்... பிச்சைக்காரரை விரட்டுவதில்தானே குறியாக இருப்பீர்கள். ஒப்புக்கொள்கிறீர்களா?
இவ்வளவையும் நீங்கள் ஒப்புக்கொண்டால் நீங்களும் ஒரு அரசியல்வாதி என்றுதான் அர்த்தம். நீங்களும் அரசியல் செய்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். பிறகு ஏன், ‘‘எங்கள் பணி இடத்தில் பாலிடிக்ஸ் ஜாஸ்தி?’’ என்று புலம்புகிறீர்கள்?

பெரும்பாலும் பணி இடங்களில் உள்ள பிரச்னை இது. ‘‘யாரையும் நம்ப முடியவில்லை...’’, ‘‘நல்லவர்கள் மாதிரி நடிக்கிறார்கள்...’’, ‘‘நம்பி சொன்னேன்... போட்டுக் கொடுத்து விட்டான்...’’, ‘‘என் முன்னேற்றத்தைக் கெடுத்ததே இவர்கள்தான்...’’, ‘‘இங்கே இருக்கற மாதிரி ஆபீஸ் பாலிடிக்ஸ் வேற எங்கேயும் இருக்காது!’’
உண்மையைச் சொல்லப் போனால் அலுவலக அரசியல் இல்லாத இடமே இதுவரை இருந்ததில்லை; இனியும் இருக்கப் போவதில்லை. காரணம், மனிதன் உயிர் வாழ்ந்தாக வேண்டும் என்றால்... அவனது இருப்பைத் தக்க வைக்க வேண்டும் என்றால்... அவன் போராடித்தான் தீர வேண்டும். போராட்டம் இல்லை என்றால், எந்த உயிரும் இல்லை. சூழலுக்குத் தகுந்தபடி மாறவில்லை என்றால் மனிதன் செத்தே போவான்.

இன்று யாரும் காடுகளில் கல்லெறிந்து போராடவில்லைதான். அனைவரின் பாதுகாப்புக்காகவும் அமைதிக்காகவும் சட்டப் புத்தகங்களும், விதிகளும் இருக்கின்றனதான். ஆனால் நாம் அமைதியாகவோ, நிம்மதியாகவோ, போராடாமலே இருக்கிறோமா? இன்றைய நமது வாழ்வியல் போராட்டங்கள் தங்கள் களத்தையும், முறைகளையும் மாற்றிக் கொண்டு விட்டன. எனவே, போராட்டம் என்பதன் மென்மையூட்டப்பட்ட, நவீனப்படுத்தப்பட்ட இன்றைய வார்த்தைதான் ‘அரசியல்’!

அரசியலில் வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொள்ளப்படும். மனிதனின் இயல்பையும், கடந்த கால வரலாற்றையும் ஆழ்ந்து கவனித்த பிறகுதான் ‘யுத்தத்திலும், காதலிலும் வெற்றி பெறக் கையாளப்படும் எந்த வழியும் சரியானதே’ (ணிஸ்மீக்ஷீஹ்tலீவீஸீரீ வீs யீணீவீக்ஷீ வீஸீ றீஷீஸ்மீ ணீஸீபீ ஷ்ணீக்ஷீ) என்ற வார்த்தைகள் பிறந்திருக்க வேண்டும். மனிதன் இருக்கும்வரை போராட்டம் இருந்தே தீரும். இன்றைய மொழியில் சொன்னால், அரசியல் இருந்தே தீரும்!

‘‘அரசியல் என்பது பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் உண்மையில் அலுவலக, கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனிதக் குழு அமைப்புகளிலும் காணப்படுகிறது’’ என்று அரசியலுக்கு விளக்கம் தருகிறது விக்கிப்பீடியா.  ‘‘அவன் பொய் சொல்றான். அவன்தான் என்னை முதல்ல தள்ளி விட்டான் மிஸ்’’ என்று ஒரு எல்.கே.ஜி குழந்தை சமாளிக்கிற காலத்திலிருந்தே துவங்கி விடுகிறது அரசியல்.

மனிதர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் போராட்டம் இருந்தே தீரும். போராட்டம் என்றால் எப்போதுமே வெற்றியையும், முன்னேற்றத்தையும், தனது மேலாண்மையையும் நிலை நிறுத்த மட்டுமே என்று நினைத்து விடக்கூடாது. அமைதியாக வாழவே போராட்டம் அல்லது அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது.
நம் குடும்பங்களிலும் இதைப் பார்க்கலாம். விட்டுக் கொடுத்தல், பின்வாங்குதல், இடித்துக் காட்டுதல், எதிர்பாராத நேரத்தில் தாக்குதல், கோமாளி போல் நடத்தல், பாசாங்கு செய்தல், கோழை போல் நடித்தல், வீரனாய் மாறுதல்... என்று பல குணச்சித்திர நடிப்புகளை அந்தக் குடும்பத் தலைவனோ, தலைவியோ செய்தே தீர வேண்டும். அவற்றின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? உடனடி அமைதி, கொஞ்சம் தொலைநோக்குப் பார்வை, ஒட்டுமொத்த குடும்ப நலன்... இதுதானே அரசியல்?

இந்தப் பண்புகள் அலுவலகத்திலும் எதிரொலித்தே தீரும். இதன் அர்த்தம், ‘நீங்களும் போய் அரசியல் செய்யுங்கள்’ என்று உசுப்பேத்தி விடுவதல்ல. ஏற்கனவே நீங்கள் உங்களையும் அறியாமல் அதைச் செய்துகொண்டுதான் இருப்பீர்கள். ‘‘நான் பாட்டுக்கு அமைதியா வாழ்ந்துட்டிருக்கேன், யார் வம்புக்கும் போறதில்ல... என்னைப் போய்...’’ என்று ஒருவர் மென்மையான குரலில் புலம்பினால் கூட அதுவும் அரசியலே. தன்னை அமைதியானவராகவும், வம்பு தும்புகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவராகவும் நிறுவிக்கொள்வது கூட ஓர் அரசியல் உத்தியே! இது தற்காப்பு ஆட்டம். பதுங்குதல் மூலம் வாழ்தல். எனவே, பாலிடிக்ஸ் இல்லாத இடமே இல்லை என்பதைப் புரிந்துகொண்டு அமைதி பெறுங்கள். இல்லையென்றால், போராட்டமோ,

அரசியலோ இல்லாத இடத்தைக் காட்டுங்கள்.  என்றைக்கு நீங்கள் ஆளுக்குத் தகுந்த மாதிரி பேசுகிறீர்களோ, சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி நடந்து கொள்கிறீர்களோ அன்றே நீங்களும் அரசியல் செய்வதாகத்தான் அர்த்தம். யாரை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று வள்ளுவரின் குறள்படி யோசிக்கத் துவங்கிவிட்டீர்கள் என்றால், நீங்களும் அரசியல் செய்கிறீர்கள் என்றுதான் பொருள்.  அரசியலை தொழிலாகக் கொண்டவர்கள் அவர்களின் வெற்றிக்காக, அதிகாரத்தைக் கைப்பற்றுதலுக்காக அரசியல் செய்கிறார்கள். நீங்கள் உங்களின் தொழிலுக்கேற்ப அரசியல் செய்கிறீர்கள். அரசியல் இன்றி அணுவும் இல்லை. 

எனவே, அரசியல் அதிகம் என்று வெறுத்து பணி இடத்தை கசப்புடன் நோக்குவதை விட, நீங்களும் அரசியல் செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொண்டு நிம்மதி பெறுங்கள். இதில் வென்றவர்கள், ‘‘எப்படி சாதிச்சுட்டேன் பார்த்தாயா? அததுக்கு ஒரு வழி இருக்கு..’’ என்று தம்பட்டம் அடிப்பார்கள். தோற்றவர்கள் ‘‘பாலிடிக்ஸ் தாங்க முடியல...’’ என்று புலம்புவார்கள். 
இன்று நீங்கள் இருக்கும் நிலையை எண்ணிப் பார்த்து, நீங்கள் சூழலுக்குத் தகுந்தபடி எப்படியெல்லாம் சமாளித்திருக்கிறீர்கள் என்ற பழைய விஷயங்களை அசை போட்டுப் பாருங்கள். நன்மைகளை எவ்வாறு அடைந்திருக்கிறீர்கள் என்று யோசியுங்கள்..! இங்கே எல்லோரும் சகுனிகள் என்று சொல்லும் முன், நம்முள்ளும் சகுனி வெளிப்படுவதைக் கவனியுங்கள்..! நீங்கள் உருப்படியாக செய்வதாக இருந்தால், ஆரோக்கியமான அரசியல் செய்யுங்கள். தரம் தாழ்ந்து சுய மதிப்பை இழக்காதீர்கள். குறைந்தபட்ச நேர்மையுடன் இருங்கள்.
(வேலை வரும்...)

ஷங்கர்பாபு


உங்களைத் தேடி வேலை வரும்