தம்பி கார்த்திக்கு ரொமான்ஸ்... அண்ணன் சூர்யாவுக்கு மாஸ்!



மங்காத்தா’வுக்குப் பிறகு ‘பிரியாணி’ எதிர்பார்ப்பு ஜுரம் கோலிவுட்டை கொதிக்க வைக்க, படு ரிலாக்ஸில் இருக்கிறார் வெங்கட் பிரபு. கார்த்திக்கு ‘பிரியாணி’ முடித்த கையோடு, அண்ணன் சூர்யாவுக்காக அடுத்த படத்திற்கும் ரெடி! ஒளி குறைந்து, குளிர் கூடியிருந்த காபி ஹவுசில் கூடினோம்... ‘‘நிஜமாவே ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும், ‘மக்களுக்கு என்ன பிடிக்கும், எப்படிச் சொல்லணும்’னு ஒரு சின்ன தயக்கத்திற்குப் பிறகுதான் தொடங்குவோம். படத்தோட வெற்றி நிச்சயம் நம் கைகளில் இல்லை.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. உண்மையில், நடிக்கத்தான் இங்க வந்தேன். டப்பிங் ஆர்ட்டிஸ்டா இருந்திருக்கேன். கச்சேரியில பாடியிருக்கேன். என் நண்பன் சரண் கொடுத்த பரிசுதான் ‘சென்னை-28’. அப்புறம் திரும்பிப் பார்க்கலை. என்னைப் பொறுத்தவரை எனது வெற்றிகள் எல்லாம் அதிர்ஷ்டம்தான். சென்னை வீதிகளில் என்னை விட விபரமான இயக்குநர்கள் உலவிக்கிட்டே இருக்காங்க. நல்லவேளை... அவங்க இன்னும் உள்ளே வரலை!’’

‘‘ ‘பிரியாணி’ டேஸ்ட் பண்ண கொஞ்சம் சாம்பிள் தர முடியுமா?’’ ‘‘முக்கியமான விஷயம்... ‘பிரியாணி’ என்னோட முந்தைய படங்கள் மாதிரி இல்லை. நல்ல வேகம் பிடிக்கிற சினிமா. Race against time சொல்வாங்க... அதுதான். எனக்கு கார்த்தியை ரொம்பப் பிடிக்கும். இப்ப அவர் பண்ற படங்களிலிருந்து வேற வடிவத்திற்கு மாற்றினேன். சாயல், பேச்சு, நடை, உடை, பாவனை எல்லாத் திலும் வித்தியாசப்படுத்த முடிஞ்சது. சரசம்னு சொல்வாங்க இல்ல...

அதுல கார்த்தியை வல்லவராக்கி கேரக்டர் செய்தோம். ‘அய்யய்யோ...’ன்னு கண்ணை மூடிக்கிற விஷயம் இல்லை. ‘அட, நல்லாயிருக்கு இல்ல’ன்னு எல்லார்கிட்டையும் இருக்கிற ரொமான்ஸை கொஞ்சம் புரிய வைக்கிற இடங்கள் இதில் இருக்கு. எல்லாம் முடிச்சு பார்த்தால், இன்னும் பெரிய படமா வந்திருக்கு. இன்னிக்கு வரைக்கும் கார்த்தி-சந்தானம் கூட்டணிதான் தெரியும். இதில் கார்த்தி-பிரேம்ஜி கூட்டணியும் அதே மேஜிக் செய்திருக்கு. முதல் அரை மணி படம் எந்த திசையில் போகும்னு உங்களுக்குத் தெரியாது... எனக்கும் தெரியாது. அதற்குப் பிறகுதான் ‘அடடா... பசங்க மாட்டிக்கிட்டாங்க’ன்னு தோணும். அதுக்குப் பிறகு படம் முடிக்கிறவரை உங்களை சீட் நுனியில் உட்கார வைக்கக்கூடிய தைரியம் எனக்கு இருக்கு!’’
‘‘முதல் தடவையா ஹன்சிகா வேற...’’

‘‘பின்னியிருக்காங்க. நான் அவங்களை டைரக்ட் பண்ணதில்லை. ஆனா, எங்க கேங்கில் சிம்புவும் இருக்கிறதால் அவங்களை நல்லாத் தெரியும். நல்ல ஃப்ரண்ட். அருமையாக நடிப்பு. எல்லாருக்கும் இன்னும் அதிகமா பிடிக்கும். இந்த வகை படங்கள் இங்கே அதிகம் வந்தது கிடையாது. அதுவே புதுசுதான். பதறியடிக்கிற ஆக்ஷன்னா எப்படி இருக்கும்னு தெரியும்ல...

அதுக்கும் மேல இருக்கிறதுதான் ‘பிரியாணி’. கார்த்திகிட்ட இதுவரை பார்க்காத ரொமான்ஸ் ரொம்ப அழகு. பொதுவா ஒரு படத்தை விக்கிறதுக்கு நல்ல நல்ல சீன்களா பொறுக்கி எடுத்து, வாங்குறவங்களுக்குப் போட்டுக் காட்டுவாங்க. ஆனா, எனக்கு இரண்டரை மணி நேரம் ஓடுற முழுப்படமே அது மாதிரி இருக்கு. ‘என்னைத் திருப்திப்படுத்த வேண்டாம். உங்க ரசனைக்கு படம் பண்ணுங்க. எல்லாத்தையும் நீங்கதான் முடிவு பண்ணணும். நான் குறுக்கிட மாட்டேன்’னு சொல்லி தன்னை ஒப்படைச்சார் கார்த்தி. அக்கறையா, நேர்த்தியா உருவாக்கி இருக்கோம்!’’
‘‘யுவன்ஷங்கருக்கு இது நூறாவது படம் இல்லையா?’’

‘‘ஆமாம். என் செல்லத்தம்பி. ‘நூறாவது படம்’னு சொல்லிச் சொல்லி அவனை அலைக்கழிச்சு மிக நல்ல பாடல்கள் வாங்கியிருக்கேன். பதிவு பண்ணின பாட்டைக்கூட நிராகரிச்சிருக்கேன். தடதடன்னு உள்ளே போய் இசையில் புரண்டு எழுந்து அவன் டியூன்களை அள்ளித் தந்ததே பெரிய அனுபவம். இதில் வாலி என் அன்புக்காக எழுதின பாடல்கள் இருக்கு. மதன்கார்க்கி முதல் தடவையா யுவனின் மியூசிக்கில் வந்தார். ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, இமான், தமன், யுவனோடு சேர்ந்து பாடினாங்க. அந்தப் பாட்டை எங்க அப்பாவே எழுதினார். இதில் எவ்வளவோ நிகழ்ந்தது. எல்லாமே நல்ல நினைவுகள். உனக்கும் கிடைக்க வேண்டிய கௌரவத்திற்காக உன்னை கஷ்டப்படுத்திட்டேன் தம்பி, மன்னிச்சுக்க!’’
‘‘நீங்க அஜித் படம் பண்ணினது கூட எல்லோருக்கும் ஆச்சரியம்...’’

‘‘கொஞ்சம் நாள் முன்னாடி வரைக்கும் பசங்களை வச்சுத்தான் படம் செய்துக்கிட்டு இருந்தேன். அதுக்கு மேல முடியலை. திடீர்னு பார்த்தா, கௌதம் மேனன் பண்ண வேண்டிய கால்ஷீட்டை என்கிட்டே கொடுக்கிறார் அஜித். நம்பவே முடியலை! ‘என்னாச்சு உங்க ளுக்கு?’ன்னு அஜித்கிட்ட கேட்டவங்க நிறைய. ‘இவனுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?’ன்னு பொங்கினவங்க அனேகம். அவர் மாதிரி ஒரு மனிதர் என்னை அங்கீகரித்த பின்னாடிதான் எல்லோரும் என்கிட்ட வந்தாங்க. நம்பிக்கை வந்தது. நல்லவேளை அவர் மரியாதைக்கு ‘மங்காத்தா’ன்னு பெரிய ஹிட் கொடுத்தேன். என் வாழ்நாளிலேயே ‘மங்காத்தா’தான் பெரிய ரிஸ்க். அவருக்கு 50வது படம் வேற. தப்பு பண்ணியிருந்தா அஜித் ரசிகர்கள் என்னை ஊரை விட்டு துரத்தியிருப்பாங்க. ஆனால், அதிர்ஷ்டம் என் பக்கம்தான் இருந்தது. அதாங்க, முன்னாடி சொன்னேனே... அந்த அதிர்ஷ்டம்!’’

‘‘அடுத்து சூர்யா படம் வேறே... இதுவும் கௌதம் செய்ய வேண்டிய படம்!’’ ‘‘முதலில் சொன்னதுதான்... அதிர்ஷ்டம்தான் காரணம்! ‘நல்ல படம், வித்தியாசமா இருக்கணும்’னு கூப்பிட்டார். ஒன்லைன் சொன்னேன். ரொம்பப் பிடிச்சது. அருமையான கமர்ஷியல். ஆனால், குழந்தைகளுக்கும் பிடிக்கும். மாஸ் படம்தான். சந்தேகமே இல்லை. ‘சூர்யா அண்ணா, கவலைப்படாதீங்க... நிச்சயம் நல்லதா பண்ணுவேன்’னு வணங்கிட்டு வந்தேன். இப்ப படத்தைப் பற்றி இன்னும் சொல்றது ரொம்ப அதிகம்!’’

- நா.கதிர்வேலன்