மண்டேலாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள்!



செய்யும் விஷயத்தில் அர்ப்பணிப்பும் வேட்கையும் இருந்தால், சூழ்நிலை தரும் நெருக்கடிகளிலிருந்து மீண்டு யாரும் உயரத்துக்குப் போகலாம். சக மனிதர்கள் மீதான அக்கறையும் அதற்கு வேண்டும். உங்கள் திறமைக்கும் உழைப்புக்கும் அடைய வேண்டிய உயரங்களைத் தொடாமல், ஒரு சராசரி வாழ்க்கையில் ஏன் நிறைவு கொள்கிறீர்கள்?’’
- மறைந்த நெல்சன் மண்டேலாவின் புகழ்மிக்க வார்த்தைகள் இவை. வார்த்தைகளாலும் வாழ்க்கையாலும் அவர் நமக்குத் தந்திருக்கும் பாடங்கள் இங்கே...

சமநிலை தேடு!

நல்ல மனமும் திறமையான மூளையும் இணைவதே சிறந்தது. இன்று உலகம் இரண்டு விதமான மனிதர்களால் நிரம்பியிருக்கிறது. ஒரு பிரிவினர் மனம் சொல்வதைக் கேட்கின்றனர்; இன்னொரு தரப்பினர் எதைப் பற்றியும் கவலைப்படாமல், அறிவுக்கு எது சரி என படுகிறதோ அந்த முடிவை இயந்திரத்தனமாக எடுக்கின்றனர். இதயமும் மூளையும் இணைந்து எடுக்கும் முடிவே நம்மையும் வாழ வைத்து, உலகையும் செழிக்கச் செய்யும்.

கசப்பை மற!

தனிப்பட்ட ஈகோவை விட சமூகம் முக்கியம். நினைத்துப் பாருங்கள்... 27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்ட ஒருவருக்கு எவ்வளவு பழிவாங்கும் உணர்வு எழுந்திருக்க வேண்டும்? அதற்கான வாய்ப்பும் அதிகாரமும் கிடைத்தபோது, தன் எதிரிகளோடு அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டு பெருந்தன்மை காட்டினார் அவர். அதனால் கிடைத்த அமைதி பெரியது.

நேற்றை விட்டுவிடு!

நேற்றைய நினைவுகளில் வாழ்வது காரணமே இல்லாமல் ஒருவரை வேதனைப்படுத்தும். முயற்சி செய்தால், சிறந்த எதிர்காலத்தை நம்மால் அமைத்துக்கொள்ள முடியும் என்கிறபோது, ஏன் நேற்றைய கசப்பை சுவைக்க வேண்டும்? பழைய சிதைவுகளின்மீது நிகழ்காலத்தில் புதிய பாதையை உருவாக்கி, அதில் எதிர்கால வெளிச்சம் படரச் செய்யலாம்.

கனவை நேசி!

சக மனிதர்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு கனவை மண்டேலா கண்டார். அந்தக் கனவை சாத்தியமாக்கும் நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதனால், இடையில் அவருக்கு விடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை அழைப்புகளை அவர் ஏற்கவில்லை. அப்படி பேசப் போனால், தான் கனவு கண்டதற்கும் குறைவான ஒரு விஷயத்தில் திருப்தி அடைந்துவிடுவோமோ என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. நம் கனவு சாத்தியமானால், நமக்கும் நம்மை நம்பியிருப்பவர்களுக்கும் பிரகாசமான எதிர்காலம் அமையும் என்கிறபோது, அதற்கும் குறைவான ஒரு விஷயத்தை ஏற்கக்கூடாது.

செயலில் காட்டு!

‘‘மகத்தான சாதனைகள் பலவும், அதற்கு முன்புவரை சாத்தியமில்லாத விஷயங்களாகவே கருதப்பட்டவை’’ என்பது மண்டேலாவின் புகழ்மிக்க பொன்மொழி. கனவு, அவரது வெற்றியின் ஒரு அங்கம்தான். அதை நிறைவேற்றுவதற்கான திட்டங்களையும், செயல் வடிவங்களையும் அவர் வைத்திருந்தார். அவரது சாதனைக்கு அதுவே காரணமானது. ஒரு கனவு, அதற்கான திட்டம், பாதையில் தெளிவாக இருப்பது, அதே சிந்தனை கொண்ட மனிதர்களை அருகே வைத்திருப்பது... வெற்றி பெற்ற மனிதர்களின் ஃபார்முலா இதுதான்!.

இமேஜ் முக்கியம்!

வெற்றி, விடுதலை - இரண்டின் அடையாளமாகவும் மண்டேலா இருந்தார்; இருக்கிறார். ஆயுதம் ஏந்தியும், ஆயுதம் துறந்தும் அவர் நிகழ்த்திய போர் மிகக் கடினமானது. ஆனாலும் புன்சிரிப்பில்லாத மண்டேலா முகத்தை நீங்கள் பார்த்திருக்க முடியாது. புன்னகை, சிறந்த ஆடை, கனிவு, கல்வியின் உயர்வால் கிடைத்த பண்பு... இவைதான் அந்தத் தலைவனின் அடையாளம். ஒரு தலைவனின் இமேஜ், மரியாதை, பண்புகள்... இவையும் அவரது சாதனைக்கு பெரிதும் உதவுகின்றன என்பதை மண்டேலா வாழ்ந்து உணர்த்தியிருக்கிறார்.

எதிரிகளைப் படி! 

இதற்கு அர்த்தம், எதிரிகள் என்னென்ன ரகசியத் திட்டங்களும் தந்திரங்களும் வைத்திருக்கிறார்கள் என்பதை உளவு பார்த்துத் தெரிந்துகொள்வதல்ல! போர், அரசியல், பிசினஸ் எல்லாமே மனங்களின் விளையாட்டுகளாகி வெகு காலம் ஆகிறது. எதிரி என்ன செய்கிறான் என்பதைப் பொறுத்தே உங்கள் வெற்றி இருக்கிறது என்றால், எதிரியின் மனதை அறிந்துகொள்வது முக்கியம்.

அன்பாக இரு! 
மண்டேலா தன் எதிரிகளுக்கும் பிறந்த நாள், திருமண நாள் அன்பளிப்புகளை தவறாமல் அனுப்பி வைப்பார்.விருந்துக்கு அழைத்து அவர்களோடு பேசுவார்; ஆலோசனைகள் கேட்பார். எதிரிகளை எப்போதும் அவர் நம்பியதில்லை; அவர்களைச் சார்ந்து இருந்ததும் இல்லை. ஆனாலும் இந்த தந்திரச் செயல்கள், அவரை எல்லோருக்கும் பிடித்த மனிதராக மாற்றின. எதிரிகளுக்கே உங்களைப் பிடித்துவிட்டால், உங்களைச் சார்ந்தவர்களுக்கு நீங்கள் ஒரு காந்தம் மாதிரியான ஈர்ப்பு சக்தியாக இருப்பீர்கள்.

அதிகாரம் கொடு! 

மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுப்பதில் மண்டேலா தீர்மானமாக இருந்தார். போராட்டத்திலும் அதிகாரத்திலும் அவர்களை முன்னிறுத்தி, தான் பின்னால் இருந்தார். தன் கனவுகளுக்கு மற்றவர்களை செயல்வடிவம் கொடுக்க வைத்தார்; அது அவர்களின் கனவு என மற்றவர்களையும் நம்ப வைத்தார். நீங்கள் நினைக்கும் ஒரு வேலையை மற்றவர்களை முழுமையாகச் செய்ய வைப்பதில்தான் வெற்றி இருக்கிறது.

உறுதி கொள்!

சிறை தண்டனைக் காலத்தில் மண்டேலாவுக்கு வேலை, சுண்ணாம்புப் பாறைகளை உடைப்பது. கண்கூசும் வெளிச்சத்தில் வெள்ளைப் பாறைகளை உடைத்ததால் கண் பார்வை பாதிக்கப்பட்டது; காசநோயும் அவரைத் தாக்கியது. தனிமைச் சிறைவாசம் மனநிலையை பாதித்துவிடும் பயங்கரமான விஷயம். இத்தனை கடினங்களையும் சமாளிக்கும் மன உறுதி அவருக்குள் இருந்தது. ‘ஒரு சிகரத்தை அடைந்தவன் அதோடு ஓய்ந்துவிட முடியாது; அடுத்தடுத்த சிகரங்கள் காத்திருக்கின்றன’ என்ற மனநிலை அவருக்குள் இருந்தது.

-அகஸ்டஸ்