+2 கணிதம் சென்டம் வாங்க டிப்ஸ்!



கடந்த இதழில் ‘பார்ட் ஏ’ பகுதியிலுள்ள ஒரு மதிப்பெண் கேள்விகளில் முழு மதிப்பெண்களை அள்ளுவது பற்றிப் பார்த்தோம். இந்த வாரம், ‘பார்ட் பி’யில் உள்ள ஆறு மதிப்பெண் கேள்விகளில் அறுபது மதிப்பெண்களையும் எளிதாக அள்ளுவதற்கான டிப்ஸ்களை தருகிறார் விருத்தாசலம் அருகேயுள்ள எருமனு£ர் வி.இ.டி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மயில்வாகனன்.

* ஆறு மார்க் கேள்விகள் மொத்தம் 15. பத்துக்கு பதில் தர வேண்டும். இறுதிக் கேள்வி மட்டும் ‘அல்லது’ வடிவ சாய்ஸில் கேட்கப்படும். பெரும்பாலும் பயன்பாட்டுக் கணக்காக வரும் இந்தக் கேள்வி சில நேரம் சென்டம் கனவைத் தகர்த்திருக்கிறது. அதனால், தொடர் பயிற்சி அவசியம்.
* புத்தகத்தில் இருக்கும் எடுத்துக்காட்டு கணக்குகளிலிருந்து 7 கேள்விகள் நிச்சயம் வரும். பின்புறம் உள்ள பயிற்சி கணக்கிலும் 8 கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒரு கேள்வி மட்டும் புத்தகத்தின் வெளியில் இருந்து கேட்கப்படும். வெளியில் இருந்து என்றால் தெரியாத கேள்வி என்று பயப்பட தேவையில்லை. எண்களை மட்டும் மாற்றி இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. அவ்வளவுதான். ஆக, எடுத்துக்காட்டு கணக்குகளையும், பயிற்சி கணக்குகளையும் போட்டுப் பார்த்தாலே எளிதாக அறுபது மார்க் அள்ளலாம்.

* 1,2,3,9,10 ஆகிய ஐந்து அத்தியாயங்களிலிருந்து தலா இரண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆக, இந்தப் பகுதிகளிலிருந்து பத்து கேள்விகள் வரும். இந்தப் பகுதிகளில் உள்ள ஆறு மதிப்பெண் கேள்விகளும் குறைவுதான். 224 கேள்விகள் மட்டுமே உள்ளன. இவற்றை தெளிவாகப் புரிந்து படித்து விட்டாலே எளிதாக அறுபதையும் அள்ளிவிடலாம்.

* அத்தியாயம் 4 - பகுமுறை வடிவ கணிதம். இதில் 101 ஆறு மார்க் கேள்விகள் உள்ளன. ஆனால் இதிலிருந்து ஒரே ஒரு கேள்விதான் கேட்கப்படுகிறது. எனவே இதை சாய்ஸில் விடலாம். அதே
நேரத்தில் இதிலிருந்து பத்து மதிப்பெண் கேள்விகள் 3 கேட்கப்படுகிறது. எனவே எளிதான கேள்வி, நன்றாகத் தெரியும் என்றால் மட்டுமே இதில் வரும் ஆறு மதிப்பெண் கேள்விக்கு விடையளியுங்கள்.
* வகைநுண் கணிதம் மி-ல் 2 கேள்விகள் கேட்கப்படுகிறது. இடைமதிப்பு தேற்றங்கள், பெருகும் சார்பு, குறையும் சார்பு ஆகியவற்றிலிருந்து கேள்விகள் வரும். எய்தர் சாய்ஸில் இந்தப் பகுதியிலிருந்து கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. எனவே இதனைப் புரிந்து படித்துவிட்டால் போதும்.

* கூடுமானவரை 3+3 என வரும் உட்பிரிவு கணக்குகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் நேரத்தை அதிகம் எடுத்துவிடும். அதேபோல் அணிகளில் வரும் கேள்விகளையும் தெளிவாகத் தெரிந்தால் மட்டும் செய்யுங்கள். இல்லையென்றால் அடுத்த கேள்விக்கு நகர்ந்துவிடுங்கள்.
அடிக்கடி ரிபீட் ஆன ஆறு மதிப்பெண் கேள்விகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பத்து மதிப்பெண் கேள்விகளை எதிர்கொள்ளும் முறையை அடுத்த இதழில் பார்ப்போம்.

சென்டம் ரகசியம்!

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடந்த ஆண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களில் ஒருவர், எஸ்.ஜெயசூர்யா. தற்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாண்டு படிக்கிறார். 6 மார்க் கேள்விகளை எதிர்கொள்ள இவர் கூறும் சிம்பிள் டிப்ஸ்... ‘‘கணிதத்தில் ஸ்டெப்ஸ் ரொம்ப முக்கியம். சம் சிம்ப்ளிஃபை பண்ணும்போது எல்லா ஸ்டெப்சையும் எழுத வேண்டும். ஸ்டெப்ஸை ஸ்கிப் பண்ணக் கூடாது. கீ பாயின்ட் அந்த ஸ்டெப்ல கொடுத்திருந்தாங்கன்னா அந்த மார்க் கிடைக்காம போயிடும். ஆறு மார்க், பத்து மார்க் கேள்விகளைப் பொறுத்தவரை, சாய்ஸ் எதிர்பார்த்து படிக்கக்கூடாது. எதைக் கேட்டாலும் எழுதக்கூடிய அளவுக்கு படித்தால் கட்டாயம் சென்டம் வாங்குவது சுலபம்.

போன வருஷம் அப்படித்தான் சில எதிர்பார்க்காத கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு மார்க், ஆறு மார்க், பத்து மார்க் எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி முக்கியத்துவம் கொடுத்து படிச்சேன். முந்தின ஆண்டு கேள்வித்தாள்களை மட்டும் ரெஃபர் பண்ணுவதைவிட புத்தகத்தில் உள்ள எல்லா சேப்டர்களையும் ஒவ்வொண்ணா எக்ஸாமுக்கு முன் ஒருமுறை புரட்டிப் பார்ப்பதோடு, எழுதியும் பார்த்தால் நல்லது.

 அனலிட்டிகல் ஜாமென்ட்ரி, டிஃபரன்ஷியல் கால்குலஸ், இன்டக்ரல் கால்குலஸ் போன்றவற்றை ஒவ்வொரு ஸ்டெப்சும் எப்படி வந்தது என்பதைப் புரிஞ்சி படிச்சாதான் எக்ஸாம் எழுதும்போது குழப்பம் வராது’’ என்கிறார் ஜெயசூர்யா.

பேராச்சி கண்ணன்,
எம்.நாகமணி
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்,
இரா.ரங்கப்பிள்ளை