மானியம்... விவசாயம்... விவசாயி... முடிவுரை எழுதும் அரசு!



இந்திய விவசாயத்தின் இறுதி சுவாசத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பது மானியங்கள்தான். அதை அறவே ஒழிக்க வேண்டும்; மிஞ்சியிருக்கிற கொஞ்ச விவசாயிகளையும் விவசாயத்தை விட்டு விரட்டிவிட்டு விவசாயத்தை கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் தரவேண்டும்; தங்கள் நாட்டு கார்ப்பரேட் விவசாயிகள் உற்பத்தி செய்யும் இரண்டாம்தர பொருட்களை இந்தியா போன்ற நாடுகளில் கொட்டி பணத்தை அள்ள வேண்டும்...

இவைதான் வளர்ந்த நாடுகளின் அஜெண்டா. இன்னும் 4 ஆண்டுகளில் எல்லாம் இனிதே நடந்தேறிவிடும். அண்மையில் பாலி தீவில் நடந்த உலக வர்த்தக மாநாடு, க்ளைமாக்ஸை தீர்மானித்து விட்டது. உலகத்தை சந்தைத் திடலாக மாற்றவும், உலக வணிகத்தை தம் கட்டுக்குள் வைக்கவும் வளர்ந்த நாடுகளின் கூட்டு முயற்சியால் 1995ல் உருவாக்கப்பட்டதுதான் உலக வர்த்தக அமைப்பு. இந்த அமைப்பில் அங்கம் வகிக்காத எந்த நாடும் சர்வதேச வணிகம் மேற்கொள்ள முடியாது.

இதில் 159 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பாரம்பரிய விவசாயிகளை துரத்தி விட்டு, பிற தொழில்களைப் போலவே விவசாயத்தையும் கார்ப்பரேட் மயமாக்கிவிட்ட வளர்ந்த நாடுகள், விவசாயத்தையும் இந்த அமைப்பின் அங்கமாக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இதற்காக உருவாக்கப்பட்டதுதான், கி.ளி.கி  எனப்படும் ‘அக்ரிமென்ட் ஆஃப் அக்ரிகல்சர்’. அதன்படி, விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கக்கூடாது. அப்படியே கொடுத்தாலும் 86-88ம் ஆண்டில் என்ன விலை விற்றதோ அதன் அடிப்படையில்தான் கொடுக்கவேண்டும். விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயித்து, குறிப்பிட்ட அளவுக்கு மேல் அரசு கொள்முதல் செய்யக்கூடாது. இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி பிற நாடுகளுக்கு சந்தையை திறந்துவிட வேண்டும்.

உலக உணவுப்பொருள் உற்பத்தியை தங்கள் கைக்குள் கொண்டு வரத் துடிக்கும் வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமான இந்த விவசாய ஒப்பந்தத்தை இந்தியா உள்ளிட்ட விவசாய நாடுகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. 2001ல் தோஹாவில் நடந்த உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில், ‘வயிறு வேறு; வாணிபம் வேறு. வாணிபத்துக்காக மானியத்தில் விளைந்து குவியும் பணக்கார நாட்டு விஷ தானியங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது. வளர்ந்த நாடுகள் தங்கள் விவசாயத்துக்குக் கொட்டிக் கொடுக்கும் மானியத்தை நிறுத்தாதவரை, விவசாயத்தை உலக வர்த்தக அமைப்பில் சேர்க்க முடியாது’ என்று இந்தியாவின் கருத்தை ஆணித்தரமாக நிறுவினார் அப்போதைய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன்.

ஆனால் தற்போதைய காங்கிரஸ் அரசு உலக வர்த்தக அமைப்பின் நெருக்கடிகளுக்குப் பணிந்து இந்திய விவசாயத்துக்கு முடிவுரை எழுதிவிட்டதாக குமுறுகிறார்கள் வேளாண் அறிஞர்கள். Ôஜி-33 எனப்படும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுகளோடு கைகோர்த்து இந்த ஒப்பந்தத்தையே நீர்த்துப் போகச் செய்யும் வாய்ப்பை இந்தியா நழுவ விட்டுவிட்டது. வளர்ந்த நாடுகளின் நெருக்குதலுக்கு இணங்கி 60 கோடி இந்திய விவசாயிகளைக் கைகழுவி விட்டது’ என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. விவசாய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த 4 ஆண்டுகள் மட்டும் அவகாசம் கொடுத்திருக்கிறது உலக வர்த்தக அமைப்பு.

இதை நடைமுறைபடுத்தத் துடிக்கிற அமெரிக்காவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை 3 கோடி. இப்போது இருப்பது வெறும் 7 லட்சம் பேர். மொத்த மக்களுக்கான உணவை வெறும் 3% மக்களே விளைவிக்கிறார்கள். இந்தியாவில் 60% பேருக்கு விவசாயமே வாழ்க்கை. இந்தியாவில், வயல்களின் சராசரி பரப்பு, தலா ஒரு ஹெக்டேர். இதுவே அமெரிக்காவில், 400 ஹெக்டேர். விவசாயிகளுக்கு மானியம் தரக்கூடாது என்று உலகத்துக்கு வகுப்பெடுக்கும் அமெரிக்கா, தங்கள் நாட்டு கார்ப்பரேட் விவசாயிகளுக்கு வெவ்வேறு பெயர்களில் பல மில்லியன் டாலர்களை மானியமாக அள்ளிக் கொடுக்கிறது. உலகளவில் வளரும் நாடுகள் மொத்தமும் சேர்ந்து தங்கள் விவசாயிகளுக்கு கொடுக்கும் மொத்த மானியம் 19 பில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகள் தரும் மானியத் தொகை 150 பில்லியன் டாலர்கள்.

‘‘விவசாய ஒப்பந்தத்தை கிட்டத்தட்ட இந்தியா ஏற்றுக்கொண்டு விட்டது. இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். அமெரிக்கா தன் ஒட்டு மொத்த உற்பத்தியில் 70% அளவுக்கு விவசாய மானியமாக அளிக்கிறது. இந்தியாவில் இது வெறும் 17%.. உண்மையில், இந்தியாவில் வழங்கப்படுவது மானியமே அல்ல. விவசாயிதான் அரசுக்கு மானியம் கொடுக்கிறார். 1 குவிண்டால் நெல்லை உற்பத்தி செய்ய குறைந்தபட்சம் 3000 ரூபாய் செலவாகிறது.

 அரசாங்கம் ஒரு குவிண்டாலுக்குத் தரும் விலை, அதிகபட்சம் 1500 ரூபாய். மீதம் 1500 ரூபாயை விவசாயிதான் அரசுக்கு மானியமாகத் தருகிறார். இங்கு விவசாயம் பற்றிய எந்த கருத்தாய்வுகளும் நேர்மையாக நடக்கவில்லை. விவசாயத்தை ஒரு தொழிலாகவே அரசு கருதுவதில்லை. விவசாயிகளுக்கு 7000 கோடி கடன் தள்ளுபடி செய்ததை அரசுகள் பெரும் சாதனையாக சொல்கின்றன. ஆனால் ஒவ்வொரு வருடமும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 1 லட்சம் கோடிக்கு மேல் வரியும் கடனும் தள்ளுபடி செய்யப்படுகிறது. உற்பத்திக்கு நியாயமான விலை கிடைக்காமல் மானியங்களை குறைப்பது நியாயமல்ல. விவசாயத்தின் மீது காட்டப்படும் அலட்சியம், மக்களை வெகுண்டெழுச் செய்துவிடும்...’’ என்கிறார் வேளாண் அறிஞர் பாமயன்.

‘‘மானியம் ஒழிந்தால் விவசாயி விவசாயத்தை விட்டு வெளியேறி விடுவான். இந்திய விவசாயத்தை வளர்ந்த நாடுகளின் உணவுக்கம்பெனிகள் கைப்பற்றி விடலாம். இதுதான் அமெரிக்கா போன்ற நாடுகளின் திட்டம். அதற்காகத்தான் வால்மார்ட்டும் இன்னபிற கம்பெனிகளும் பெரும் முதலீட்டில் இங்கே முகாமிடுகின்றன. காங்கிரஸ் அரசு ஓட்டுகளை மனதில் வைத்தே முடிவெடுக்கிறது. இப்போதும் தேர்தலில் சாதனையாக முன்னிறுத்தப் போகிற உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக 4 ஆண்டுகள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள். மற்றபடி உண்மையான அக்கறை ஏதுமில்லை’’ என்கிறார் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

‘‘பணவீக்கம், பொருளாதாரத் தேக்கம் அதிகரித்துள்ள நிலையில், இப்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் என்பது மிகவும் சொற்பத்தொகை. அதையும் நிறுத்துவது இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்’’ என்றே பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பனும் கூறுகிறார். ‘‘விவசாயம் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தன்மையான சில பண்புகளைக் கொண்டது. வெறும் 3% விவசாயிகளைக் கொண்ட அமெரிக்காவுக்கும், 60% விவசாயிகளைக் கொண்ட இந்தியாவுக்கும் ஒரே அளவுகோல் பொருந்தாது. ஏற்கனவே இங்கு விவசாயிகளுக்கு பல பிரச்னைகள் உள்ளன. இச்சூழலில் இறக்குமதிக்கான வரிகளை மேலும் குறைப்பது உள்நாட்டு பொருட்களின் மதிப்பை குலைத்துவிடும்’’ என்கிறார் சோம.வள்ளியப்பன்.

இந்திய அரசின் தகவலின்படி 1993 முதல் 2006 வரை 1 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். ஏற்கனவே பல காரணங்களால் தமிழகத்தில் 50% பேர் விவசாயத்தை விட்டு வெளியேறி விட்டார்கள். 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் விவசாயம் இருக்கும். ஆனால் விவசாயிகள் இருக்க மாட்டார்கள்.

இப்போது மானியம்!(ஒரு ஹெக்டேருக்கு)

நாடு    மானியம்    பயன்பெறும் விவசாயிகள்
அமெரிக்கா    32 டாலர்    5%
ஜப்பான்    35 டாலர்    4%
சீனா    30 டாலர்    24%
தென் ஆப்ரிக்கா    24 டாலர்    18%
இந்தியா    14 டாலர்    60%

4 ஆண்டுகளுக்குப் பிறகு..?

* விவசாயிகளின் உற்பத்தியை அரசு கூடுதல் விலை கொடுத்து வாங்க முடியாது.
* குறிப்பிட்ட அளவுக்கு மேல் அரசு கொள்முதல் செய்ய முடியாது.
* மானியம், ஊக்கத்தொகை, இழப்பீடு என எதையும் விவசாயிகள் அரசிடம் கோர முடியாது.
* உணவுப் பாதுகாப்பு திட்டம் செயலிழந்து விடும்.
* நியாயவிலைக் கடைகளில் கூடுதலாக ஒரு பொருளை விற்பதற்குக் கூட உலக வர்த்தக அமைப்பிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். 
* நமது உற்பத்தி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள், தானிய இருப்பு, வினியோக அளவு உள்பட அனைத்து தகவல்களையும் உலக வர்த்தக அமைப்புக்குத் தர வேண்டும்.

- வெ.நீலகண்டன்