சாயி



எனது பக்தன் எப்படி இருந்தாலும் - நல்லவனோ, கெட்டவனோ - அவன் என்னுடையவன். அவனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு முழுவதும் என்னிடமே உள்ளது!

- பாபா மொழி வழக்கம் போல பாபாவைச் சுற்றிலும் பக்தர்கள் திரண்டிருந்தார்கள். தாத்யா துனியில் எரிக்கக் கட்டைகளைப் போட்டுக் கொண்டிருந்தான். பாபா வெளியே ஆகாயத்தைப் பார்த்தார். இருட்டிக் கொண்டு வந்தது. கருநீல மேகக்கூட்டங்கள் சுற்றிலும் தெரிந்தன.

‘‘பாபா, மேகக்கூட்டங்களைப் பார்த்தீர்களா? பெரிய மழை வரும் போலிருக்கிறது’’ - துனியில் கட்டைகளைப் போட்டபடி தாத்யா சொன்னான்.
‘‘மழை வரட்டும். பூமி மாதா ரொம்பவும் உஷ்ணத்தால் காய்ந்து போயிருக்கிறாள். எறும்பு கூட பூமியிலிருந்து வெளியே வந்தால், கடும் சூட்டினால் தத்தளிக்கிறது. இந்தக் காற்று, மழை வருவதின் அறிகுறி. மரத்தில் இருக்கும் பறவைகள்கூட, வெப்பத்தால் தண்ணீருக்குத் தவிக்கின்றன. மழை ஜோராகப் பெய்தால் எல்லா இடமும் சீராகும்!’’

பாபா சொன்னதற்கு எல்லோரும் தலையசைத்தார்கள். பிறகு துவாரகமாயிக்குள் குளிர்ந்த காற்று சுழன்று வீசிற்று. எல்லோருக்கும் குளிர்ச்சியாக இருந்தது.
‘‘பாபா...’’ ‘‘என்ன ஷாமா?’’‘‘குளிர்ந்த காற்றின் அலை, உங்கள் காலடியைத் தொட்டு ஆசீர்வாதம் கேட்டது போல் இருந்தது, பார்த்தீர்களா?’’
இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.

‘‘ஷாமா, இந்தக் காற்று, நீர், இடி, மின்னல் இவற்றுக்கெல்லாம் உயிர் இருக்கிறது. இந்த மண் உயிருள்ளது. இந்த ஆகாயம் உயிருள்ளது. காற்றில் உயிர் இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தக் காற்றினால்தான் நாம் உயிருடன் இருக்கிறோம். காற்று இல்லையென்றால் சரீரத்தின் விளையாட்டு தீர்ந்தது! நீரும் அப்படித்தான். சரீரத்திலுள்ள நீர் வற்றிவிட்டால், ரத்தம் உறைந்து விடும், மனிதன் இறந்து போவான். அதே போல மண்ணும். நீ சொன்னது உண்மைதான். என்னுடைய தரிசனத்திற்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும் காற்று வந்து போனது!’’
‘‘நீங்கள் அதற்கு ஆசிகள் வழங்கினீர்களா?’’

‘‘ம்... மழை தேவையாக இருந்ததால் ஆசி வழங்கினேன். இதனால் பஞ்ச பூதங்களும் மகிழ்ந்து, பெரிதாக ஓலமிடுவார்கள். தங்களுடைய மகிழ்ச்சியைக் காட்டுவார்கள். என்னைக்கூட வெளியே தள்ளுவார்கள்...’’ ‘‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை’’ - மகல்சாபதி குழப்பத்துடன் கேட்டார்.
‘‘புரியும். சிறிது நேரத்தில் புரியும். மழைக்கான அறிகுறி தெரிகிறது. வானம் கறுத்துவிட்டது. மழையே! சீக்கிரம் வாப்பா...’’
கொஞ்சம் கொஞ்சமாக தூறல் ஆரம்பித்தது.

‘‘ஷாமா, எப்படியிருக்கு?’’
‘‘சுகமாக இருக்கு பாபா! ஆனால், உங்களை வெளியே தள்ளி விடுவார்கள் என்றீர்களே, அது என்ன?’’
‘‘அதுவா? சீக்கிரம் தெரியும். கொஞ்சம் பொறுமையாக இரு!’’
மழையின் வேகம் அதிகரித்தது.
‘‘மகல்சாபதி, இதுதான் அல்லாவின் அற்புதச் செயல், நீர் இன்றியமையாதது. நீர் இல்லையென்றால், உலகமே இல்லை. எப்படி நதிகள் கடலில் கலக்கிறதோ, அதேபோல மனிதனும் உயிர் போனவுடன், நீரில் கரைந்துவிடுகிறான்!’’

மகல்சாபதி மகிழ்ச்சியுடன் தலையாட்டினார்.
பெருத்த மழை. முதலில் துனியைத் தவிர, எல்லா இடத்திலும் சுழன்று அடித்தது. பிறகு காற்றின் வேகம் திசை திரும்பியதால் மழை மசூதியிலும் நுழைந்து, வெள்ளக் காடாக்கியது. எல்லா இடத்திலும் தண்ணீர். ஒரு மணி நேரம் விடாமல் கொட்டிய பிறகுதான் மழை நின்றது. துனியைத் தவிர மசூதியில் எங்கும் தண்ணீர். துனி மட்டும் வழக்கம்போல் எரிந்து கொண்டிருந்தது.
‘‘பாபா, மசூதி முழுக்கத் தண்ணீர். இன்று இங்கே எப்படித் தூங்க முடியும்?’’ - தாத்யா கவலையுடன் கேட்டான்.

பாபா சிரித்தார். ‘‘இன்று எங்காவது வெளியில் போய்த்தான் தூங்கணும். நான் சொன்னேனா இல்லையா? இந்த மழை என்னை வெளியே துரத்திவிடும் என்று!’’
‘‘அடடா! நீங்கள் சொன்னது உண்மைதான். ஆனால், எங்கு போவது? எங்கள் வீட்டிற்குப் போகலாமா?’’ தாத்யா கேட்டான்.
‘‘அடேய்! பக்கீருக்கு இடம், ஒன்று மசூதி அல்லது சாவடி! சாவடி திறந்துதானே இருக்கிறது?’’

எல்லோரும் சாவடிக்கு வந்தார்கள். அன்று முதல் ஒரு புது வழக்கத்தை பாபா ஆரம்பித்து வைத்தார். ஒருநாள் இரவு சாவடியிலும் மறுநாள் மசூதியிலும் தூங்கலானார்!
குஷால்சந்த் மார்வாடி, பெரிய சாயி பக்தர். ராஹத்யாவில் வசித்து வந்தார். பாபாவும் அவர் மேல் அளவு கடந்த அன்பு காட்டினார். அதே போல அவருடைய சிற்றப்பாவின் மீதும் சாயிக்கு பிரியம். சிற்றப்பா இறந்தபோது, பாபா நேரில் போய் குஷால்சந்தை பார்த்துவிட்டு வந்தார். கடவுளே பக்தனைத் தேடிப் போனார்!

சமீபகாலமாக இரண்டு பேரின் சந்திப்பும் நடக்கவில்லை. குஷால்சந்திற்கு இதில் பெரும் மன வருத்தம். குஷால்சந்த் ஒருநாள் பிற்பகல் சாப்பிட்டவுடன் சிறிது நேரம் தூங்கிக்கொண்டிருந்தார். அவர் கனவில் பாபா தோன்றினார்! ‘‘அடேய் குஷால்சந்த், என்னை மறந்துவிட்டாயா?’’ ‘‘சேச்சே... உங்களை எப்படி மறக்க முடியும்? எப்போதும் உங்கள் நாமத்தைத்தானே ஜெபிக்கிறேன். உங்களைத் தவிர வேறு கடவுள் எனக்கு இல்லை!’’ ‘‘இப்படிச் சொல்கிறாய். ஆனால், என்னைச் சந்தித்து எவ்வளவு மாதங்களாகிறது?’’

‘‘உண்மைதான் பாபா. என்னாலும் வர முடியவில்லை. நீங்களும் வரவில்லை. அதனால் நான் விசனப்பட்டேன்!’’
‘‘நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு வருவதால், என்னால் ஷீரடியை விட்டு வர முடிவதில்லை. எழுந்திரு, உடனே ஷீரடிக்குக் கிளம்பு!’’

அவனுடைய தூக்கம் கலைந்தது. எழுந்து முகம் கழுவிக் கொண்டு, உற்சாகத்துடன் வெளியே வந்தார். பாபாவே ஆணையிட்டு விட்டார். ‘ஆனால் இன்று என் குதிரை இல்லையே, ஷீரடிக்கு எப்படிப் போவது?’ என அவர் யோசித்தபோது வீட்டு வாசலில் ஒரு டாங்கா வந்து நின்றது. அதிலிருந்து ஹரி சீதாராம் தீட்சித் என்னும் சாயி பக்தர் இறங்கினார்.
‘‘அடடே தீட்சித் சிற்றப்பா, வாருங்கள். என்ன அகஸ்மாத்தாக வந்திருக்கிறீர்கள். ஏதாவது விசேஷமா?’’

‘‘இல்லை குஷால்சந்த். துவாரகமாயியில் உட்கார்ந்திருந்தேன், பாபாவிற்கு உங்கள் நினைவு வந்தது. ‘உடனே வண்டி எடுத்துக்கொண்டு போய், குஷால்சந்தை அழைத்து வா’ என்றார். கிளம்புங்கள் ஷீரடிக்கு!’’ இதைக் கேட்டு அவருக்கு ஆச்சரியமாயிற்று. எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது? தன் கனவில் பாபா வந்ததையும், என்ன நடந்தது என்பதையும் விவரித்தார் குஷால்சந்த். பாபாவை நினைத்ததும், அவருக்கு சந்தோஷத்தால் கண்ணீர் வழிந்தது.

‘‘குஷால்சந்த், பாபா நம்மீது அளவற்ற அன்பு காட்டுவது குறித்துப் பெருமைப்படணும். இது பூர்வ ஜென்ம பலன். பாபா பேதம் எல்லாம் பார்ப்பதில்லை. யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், நோயைத் தன்மேல் ஏற்றிக்கொண்டு நிவர்த்திக்கிறார். மனித வாழ்க்கையில் உண்டாகும் காமம், குரோதம், வெறுப்பு, ஆத்திரம், அகங்காரம் இவற்றை நீக்க அல்லும் பகலும் உழைக்கிறார். விஷத்தால் நிரம்பியிருக்கும் இவ்வுலகை அமிர்தத்தினால் நிரப்ப பாபா அவதாரம் எடுத்திருக்கிறார்!’’

‘‘சிற்றப்பா, பாபாவின் மகத்துவம் புரிந்தது. அவர் என் கண்களைத் திறந்துவிட்டார். குதிரை இல்லை என்பதால், எப்படிப் போவது என்று சற்று தயங்கினேன். அவரே அதற்கு வழி காட்டிவிட்டார்.’’
இருவரும் ஷீரடி வந்து சேர்ந்தார்கள். குஷால்சந்த்தைக் கண்டதும் பாபா மகிழ்ச்சியுடன் எழுந்து, அவரை ஆலிங்கனம் செய்து கொண்டார். பிறகு இருவரும் அத்யந்த அன்புடன் பேசிக்கொண்டனர்.
‘‘குஷால், உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கிறது. நீ ரொம்ப நேர்மையானவன். பொறுமைசாலி. பரோபகாரி. மார்வாடியாக இருந்தாலும், பணத்தின் மேல் குறியாக இல்லாதவன். தர்மத்திற்காக வேலை செய்கிறாய். இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் காணப் பிடிக்கிறது. உன்னுடைய ஞாபகம் ரொம்ப வந்தது. எனவே, சிற்றப்பாவை அனுப்பினேன்!’’
‘‘பாபா, என் மேல் இவ்வளவு அன்பா? நான் உங்கள் கால் தூசிக்குக் கூட லாயக்கில்லாதவன்!’’

‘‘சேச்சே, அப்படியெல்லாம் நினைக்காதே. சத்குணங்கள் நிறைந்த மனிதன் என்பது இறைவன் ஏற்றி வைத்த ஒரு தீபம். அது பிறருக்கு பிரகாசம் கொடுக்கிறது. அதைப் போன்றவன் நீ!’’
பாபா பேசிக் கொண்டிருந்தார். சுற்றியிருந்தவர்கள் அவர் உரையைக் கேட்டனர். குஷால்சந்த் அவருடைய போதனையைக் கேட்டு, வாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்தார். தான் வாழ்வதின் நோக்கத்தை பாபாவின் வார்த்தைகளால் புரிந்துகொண்டார். அதனால் புத்துணர்ச்சி பெற்றார். அவர் கண்கள் பனித்தன.

ராமச்சந்திர ஆத்மாராம் தர்கட் பெரிய வித்துவான். தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர். பிரார்த்தனை சமாஜத்தின் ஓர் அங்கம் மற்றும் சாயி பக்தர். ஜனங்கள் அவரை பாபா சாகேப் தர்கட் என்று அழைப்பார்கள். அப்படிச் சொன்னால்தான் அவரைத் தெரியும். பாபா சாகேப், மும்பையிலுள்ள பாந்த்ராவில் வசித்து வந்தார்.

சாயி அவருடைய கடவுள். மன அமைதியைக் கொடுப்பவர். ஆனால்... அவர் ஒரு கொள்கைப் போராட்டத்தில் சிக்கியிருந்தார். காரணம், அவர் உறுப்பினராக இருந்த பிரார்த்தனை சமாஜத்தில் உருவ வழிபாடு இல்லை. அதில் நம்பிக்கையும் இல்லை. பாபா சாகிப் வீட்டில் சாயியின் அழகான படத்தை மாட்டியிருந்தார். ஆனால் அதை வணங்குவதோ அல்லது பூஜை செய்வதோ அவருக்கு ஏற்றதாகத் தோன்றவில்லை. படத்தைப் பார்க்கும்பொழுதெல்லாம் வணங்கத் தோன்றும். ஆனால் மனக் குழப்பத்தில் பேசாமல் இருந்துவிடுவார். இந்தக் குழப்பத்தினால், அவர் சாயி மீது கொண்ட பக்தியில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. எப்பொழுதும் கற்கண்டைப் போல் இனிக்கும் சாயி நாமத்தையே உச்சரித்து வந்தார்.

அவருடைய குடும்பத்தினர் சாயி பக்தர்களாக இருந்தார்கள். அவருடைய மனைவி சாயியைத் தவிர வேறெந்த கடவுளையும் பூஜை செய்வதில்லை. அவர்களுடைய மகன் பாள், தீவிர சாயி பக்தன். பாபா சாகேப்பிற்கு பிரார்த்தனை செய்வதில் இருந்த கட்டுப்பாடு, அவருடைய மனைவிக்கும் மகனுக்கும் இல்லை. எனவே, பாள், பாபாவின் படத்திற்கு முறைப்படி பூஜை செய்து வந்தான். தினமும் பாபாவுக்கு நைவேத்தியம் செய்யாமல் அவன் சாப்பிட மாட்டான்.

ஒரு நாள் பாபா சாகேப் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்பொழுது, அவர் மனைவி சொன்னார்... ‘‘என்னங்க, பாபாவை நான் படத்தில்தான் பார்த்திருக்கிறேன். எனவே, ஷீரடிக்கு நேரில் போய்ப் பார்க்க நினைக்கிறேன்!’’ ‘‘உன் விருப்பப்படியே செய். பாபாவே உன்னை அழைத்திருக்கிறார். மகனையும் துணைக்கு அழைத்துச் செல்!’’
ஆனால், ‘‘நான் அம்மாவோடு போக மாட்டேன்!’’ என்றான் பாள்.

‘‘எனக்கு நிறைய வேலை இருக்கு. மும்பையில் இருக்கும் ஒரு ஆலையில் நான் மேலதிகாரியாக இருக்கிறேன். அங்கே பலவித பிரச்னைகள். நிறைய சிக்கல்கள். இந்நிலையில் நான் பாந்த்ராவை விட்டு வர முடியாது. பிறகு எப்போதாவது போய்க் கொள்கிறேன்’’ என்றார் பாபா சாகேப்.
‘‘சரி, அப்படியானால் அம்மா தனியாகப் போகட்டும்!’’

‘‘அடேய், ஷீரடி இங்கிருந்து ரொம்ப தூரத்தில் இருக்கு. அவளைத் தனியாக அனுப்புவது நன்றாக இருக்கா? நீ ஒரு வாலிபன். மேலும் பாபாவின் தீவிர பக்தன். பாபாவை பிரத்யட்சமாக தரிசிக்க வாய்ப்பு வந்தால், அதை ஏன் நிராகரிக்கிறாய்?’’ ‘‘பாபாதான் காரணம்! நான் தினமும் குளித்துவிட்டு, பாபா படத்திற்குப் பூஜை செய்கிறேன். அவருக்கு நைவேத்தியம் காண்பித்த பிறகுதான் சாப்பிடுகிறேன். நான் ஷீரடிக்குப் போனபிறகு இதையெல்லாம் யார் செய்வார்கள்?’’

‘‘ப்பூ... இவ்வளவுதானா? நான் செய்வேன்!’’
‘‘அப்பா..’’ - சிரித்துக்கொண்டே பாள் கூறினான்... ‘‘நீங்கள் எப்படி இந்த பூஜையெல்லாம் செய்வீர்கள்? நீங்க பிரார்த்தனை சமாஜத்தின் அங்கத்தினராச்சே. உருவ பூஜை, புனஸ்காரம் எல்லாம் செய்யக் கூடாதே. அப்படியிருக்கும்போது, என் சாய்பாபாவை நீங்கள் பசியுடன் வைத்திருப்பீர்களா?’’
பாபா சாகேப் இதைக் கேட்டு ஸ்தம்பித்தார்.

‘‘அப்பா! இதற்காகத்தான் நான் ஷீரடிக்குப் போகமாட்டேன் என்றேன். ஒன்று நீங்கள் அம்மாவுடன் போங்கள். அல்லது, அம்மா தனியாகவே போகட்டும். சாய்பாபா அவளை கவனித்துக்கொள்வார்!’’
சில நொடிகள் யோசித்தபிறகு பாபா சாகேப் கூறினார்... ‘‘நான் தினமும் பூஜை செய்து, நைவேத்தியம் காண்பிப்பேன். பிரார்த்தனை சபையின் நியதிகளை நான் மீறுவது சாய்பாபாவிற்காகத்தான். பிறகு என்ன? கிளம்பு!’’

‘‘ஒருநாள் கூட மறக்கக் கூடாது. தவறாமல் செய்வதாக சத்தியம் செய்து கொடுங்கள்!’’ அவர் உறுதிமொழி கொடுத்தார். மறுநாள் இருவரும் ஷீரடிக்குப் புறப்பட்டார்கள்.

‘‘விஷத்தால் நிரம்பியிருக்கும் இவ்வுலகை அமிர்தத்தினால் நிரப்ப பாபா அவதாரம் எடுத்திருக்கிறார்!’’ ‘‘சத்குணங்கள் நிறைந்த மனிதன் என்பது இறைவன் ஏற்றி வைத்த ஒரு தீபம். அது பிறருக்கு பிரகாசம் கொடுக்கிறது.’’

(தொடரும்...)