எரியிற கொள்ளியில எத்தனால்!



ஆன்மிகம், அறிவியல், புராணம், மர்மம் என பிரமிப்பூட்டும் விஷயங்களின் தொகுப்பாக மலர்ந்த ‘கர்ணனின் கவசம்’ ஒரு புதுமையான அனுபவம்!
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கதாநாயகியாக வலம் வந்த மீனாட்சி, ‘காமெடி கேரக்டரில் நடிக்க ரெடி’ என ரீ-என்ட்ரி ஆகியிருப்பது ஆறுதல். தமிழ்பட உலகில் காமெடி நடிகைகளின் பஞ்சத்தை இவராவது தீர்க்கட்டும்!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
சேர்ந்து வாழ்வதற்கான சாட்சியங்களை சடங்குகளால் மட்டுமே அர்த்தப்படுத்தி விட முடியாது என மனுஷ்யபுத்திரன் அலசுவது அர்த்தமுள்ள விஷயம்.
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.
ஆளில்லா குட்டி விமானம் டிரோன், மொட்டை மாடியில் பார்சலை இறக்கலாம். ‘சார் போஸ்ட்’ எனலாம் என்ற கற்பனை குஷியாகத்தான் இருக்கு. வேவு பார்க்கவும், பாம் வைக்கவும் பயன்படுத்தினால் ஆபத்தான ஆயுதமாகுமே!
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.
‘பசி, தூக்கம், சந்தோஷம் இதையெல்லாம் பறிகொடுத்துட்டு எதை வாங்கி வீட்டை நிறைச்சாலும் நாம ஏழைதான்ணே!’ என்று இமான் அண்ணாச்சி சொல்வதில், அற்புதமான தத்துவம் அடங்கியுள்ளது.
- மனோகர், சென்னை-18.
சும்மாவே சிம்புவ சுத்தி ஏகப்பட்ட கிசுகிசுக்கள். இதுல நீங்க வேற ஏன் சார் ஆண்ட்ரியாவோட அவரை இணைச்சு எரியுற கொள்ளியில எத்தனால் ஊத்தறீங்க..?
- ஜி.இனியா, கிருஷ்ணகிரி.
கணிதத்தில் சென்டம் வாங்க, கணித ஆசிரியர் ஜான் கணேஷ் சொல்லியிருக்கும் நான்கு படிகள் நம் மாணவர்களை வெற்றிப் படிகளில் ஏற்றுவது நிச்சயம்!
- அறச்சலூர் அன்பழகன், சென்னை-42.
தூங்கினால் மூளை சுத்தமாகும் என்ற விஞ்ஞான உண்மை ஓகே. ஆனால், எப்போதுமே தூங்கி வழியும் கடைசி பென்ச் மாணவர்கள் எந்த நாளும் சுறுசுறுப்பாவதில்லையே... அது ஏன்?
- மா.மாரிமுத்து, ஈரோடு.
சூப்பர் ஸ்டாரை வைத்து எஸ்.பி.முத்துராமன் 25 படம் எடுத்திருக்கிறார் என்பதையே இப்போதுதான் அறிந்து வியந்தேன். ரஜினி பற்றிய அவரின் வார்த்தைகள் அனைத்து பிறந்தநாளுக்கும் பொருத்தமான மலர்க்கொத்துகள்!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
ஆல்தோட்ட பூபதி அண்ணன் இந்த வாரம் எங்க எல்லோரது வயிற்றையும் பதம் பார்த்துவிட்டார். பொண்ணு பார்க்கும் ஆணின் பரிணாம வளர்ச்சி... ஸாரி, தளர்ச்சி பற்றி சொன்னது ஓவர் தாக்கு! ஆண்களோட சாபத்துக்கு ஆளாகிட்டீங்களே பூபதியண்ணே..!
- இரா.கதிரேசன், கோவை.
பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடூரங்கள் குறித்த கட்டுரை நாம் அனுபவங்களிலிருந்து பாடம் கற்காத அவலத்தை நிரூபிக்கிறது. தாய்மை விழித்தெழ வேண்டிய தருணம் இது!
- கே.வி.மணிமாலா சுந்தர், தேனி.