கடைசி பக்கம்



அந்த சிறுநகரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் இளைஞன் அவன். இரண்டு உதவியாளர்களைப் புதிதாக அன்றுதான் வேலைக்குச் சேர்த்திருந்தான். அவர்களுக்கு தொழில் கற்றுத் தரலாம் என்று பார்த்தால், விற்க, வாங்க எதுவும் போன் வரவில்லை. ‘‘அப்படியே கிளம்பினா வழியில ஏதாவது ஐடியா கிடைக்கும்’’ என இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினான். நகர எல்லையைத் தாண்டி வயல்வெளிகள் ஆரம்பிக்கும் இடத்தில் தனியாக இருந்த ஒரு பண்ணை வீட்டு வாசலில் போர்டு தொங்கியது.


காரை நிறுத்தியவன், ‘‘இங்கே உங்க டிரெய்னிங் ஆரம்பிக்குது’’ என்றான். காலிங் பெல் அடித்து, கதவு திறக்கப்பட்டதும் தன்னைப் பணிவாக அறிமுகம் செய்து கொண்டவன், உதவியாளர்களோடு உள்ளே நுழைந்தான். எல்லா அறைகளையும் ஒரு ரவுண்டு வந்தான். ‘‘ஹால் சுவர்கள்ல பெயின்ட் உதிர்ந்து இருக்கு. பளிச் கலர்ல அடிச்சுட்டா புதுசு போல தெரியும். இந்த லைட் ஃபிட்டிங் எல்லாம் பழசா தெரியுது. மாத்திட்டு, ஹால்ல ரெண்டு லைட் கூடுதலா போட வேண்டியிருக்கும். கிச்சன்ல கொஞ்சம் கூடுதலா வேலை இருக்கும். ரொம்ப அழுக்கா இருக்கு! மற்ற அறைகள்ல லேசா டச்சப் செய்தா போதும்...’’ என தனது உதவியாளர்களிடம் சொன்னவன், வீட்டு உரிமையாளர் கோபமாக நிற்பதை அப்போதுதான் கவனித்தான்.

‘‘என்ன சார், ஏதும் பிரச்னையா?’’ எனக் கேட்டான். ‘‘நான் இந்த வீட்டை விற்கப் போறேன்னு உனக்கு எவன்யா சொன்னான்?’’ எனக் கத்தினார் அவர்.
‘‘வாசல்ல போர்டு தொங்குதே!’’ அவனை இழுக்காத குறையாக வாசலுக்கு அழைத்து வந்தார் ஹவுஸ் ஓனர். போர்டில் ‘விற்பனைக்கு’ என்ற வார்த்தை பெரிதாக இருந்தது. அதன்கீழே நாய்க்குட்டிகள் பற்றிய விவரம் இருந்தது. அவசரத்தில் ஆதார விஷயத்தைக் கோட்டை விடக்கூடாது!

நிதர்ஸனா