புத்தகத் தாத்தா வந்தாச்சு...



படிப்பு வாசனையே அறியாத முருகேசனின் உதவியால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா? 25 ஆயிரம் அரிய புத்தகங்களை சேகரித்து வைத்திருக்கும் முருகேசனால், எந்தப் புத்தகத்தில் என்ன செய்தி இருக்கிறது என தெளிவாகச் சொல்ல முடியும்.

இன்று, நேற்றல்ல... 35 வருடங்களாக புத்தகங்களை சுமந்து திரிகிறார் முருகேசன். தென் மாவட்ட ஆய்வு மாணவர்களுக்கு முருகேசன்தான் ஏந்தல். ‘‘தாத்தா... இந்தத் தலைப்பில் ஆய்வு செய்கிறேன்’’ என்று சொன்னால் போதும். எங்குதான் சேகரிப்பாரோ, அது தொடர்பான மொத்த புத்தகங்களையும் கொண்டு வந்து சேர்த்துவிடுவார். தேவை தீர்ந்ததும் மீண்டும் சேகரித்துக் கொள்வார். கட்டணம் ஏதுமில்லை. மாணவர்களாக விரும்பி ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்வார். தமிழுக்கு தான் செய்வது மிகப்பெரிய சேவை என்பது தெரியாமலே செய்து கொண்டிருக்கிறார் அவர்.

மதுரை ஆத்திக்குளம் பேருந்து நிலையத்துக்கு அருகில் சிறிய சந்தொன்றில் இருக்கும் ஒற்றை அறைதான் முருகேசனின் வீடு. அமர இடமின்றி அறையை ஆக்கிரமித்திருக்கின்றன புத்தகங்கள். எந்நேரமும் மாணவர்கள் சூழ்ந்திருப்பதால் மூச்சுத் திணறுகிறது அந்த அறை. ‘‘வாழ்க்கையில உச்சகட்ட சந்தோஷத்தையும், மறக்கவே முடியாத சோகத்தையும் பார்த்துட்டவன் நான். தனிமையிலயும், விரக்தியிலயும் இருந்து தற்காத்துக்க, நானாவே தேர்ந்தெடுத்தது தான் இந்த வேலை. பள்ளிக் கூடமே போகாத ஆளு. ஆனா, புத்தகங்கள் மேல அவ்வளவு ஆர்வம். முப்பது வருஷமா நான் சேத்து வச்ச புத்தகங்கள் இன்னைக்கு பல நூறு மாணவர்களுக்கு உதவுது.

எனக்குப் பூர்வீகம் சிவகாசி. திண்டுக்கல்ல அப்பா பலசரக்கு யாவாரம் செஞ்சார். மொத்தம் 10 பிள்ளைகள். நான் ஒம்போதாவது ஆளு. எனக்கு விபரம் தெரியிறதுக்குள்ள அப்பா இறந்துட்டார். அம்மாதான் எங்களுக்கு எல்லாம். பிறந்த காலத்துல இருந்தே கஷ்டம் என் கூட வந்துக் கிட்டிருக்கு. சின்ன வயசுலயே எல்லாரும் வேலைக்குப் போயாச்சு. பெட்டிக்கடை, சைக்கிள் கடைன்னு கடைசியா பலசரக்கு கடையில வந்து நின்னேன். கட்டுச்செட்டா வாழ்ந்து திண்டுக்கல்லுலயே ஒரு பலசரக்குக் கடை, வெள்ளைப்பூண்டு கடை, பழைய பேப்பர் கடை திறந்தேன். பெரிய அளவுல யாவாரம். வணிகர் சங்கத்துல கூட முக்கியப் பொறுப்புல இருந்தேன்.

ஓஹோன்னு வளர்ந்த சமயத்தில பெரிய சறுக்கல்... சின்ன வயசுல இருந்தே மத்தவங்களுக்காகக் கவலைப்படுற ஆளு நான். சொந்தக்காரப் புள்ளைங்களுக்கு வழிகாட்ட நினைச்சு சில பொறுப்புகளை ஒப்படைச்சேன். அதனால யாவாரம் கெட்டுப் போச்சு. கடன் ஏறி பலசரக்குக் கடையை மூட வேண்டியதாயிடுச்சு. அந்தக் கவலையில என் வீட்டம்மா தற்கொலை பண்ணிக்கிட்டா. நாலு பிள்ளைகளை வச்சுக்கிட்டு, அடுத்து என்னன்னு தெரியாம நின்னேன்.

வருமானம் இல்லாட்டியும் பழைய புத்தகக்கடையை மட்டும் மூட மனசு வரல. கடையை திறந்து வச்சுக்கிட்டு சும்மா உக்காந்திருப்பேன். விற்பனைக்கு வர்ற கொஞ்ச புத்தகங்களையும் கிழிக்க மனசு வராது. எடுத்து சேகரிச்சு வப்பேன். அந்தப் புத்தகங்களை சில ஆசிரியர்கள் எடுத்துட்டுப் போவாங்க. அதன் மூலமா அவங்க நட்பு கிடைச்சுச்சு. அப்பப்போ அவங்க வீடுகளுக்குப் போய் வேலை செய்வேன். வேலைக்காரன்னு சொல்லிடுவாங்கன்னு அதுக்கு கூலிகூட வாங்குறதில்லை.

அதுக்கு பிரதியுபகாரமா என் பிள்ளைகளை அவங்களே படிக்க வச்சாங்க. பிள்ளைகளும் நல்லா படிச்சாங்க. அவங்கவங்க முயற்சியில வேலைக்குப் போயிட்டாங்க. மூத்தவன் இறைமணி ஒரு கம்பெனியில மார்க்கெட்டிங் மேனேஜர் ஆகிட்டான். அடுத்த மகள் இறைவாணி பேராசிரியை. மூணாவது மகள் இறைமலர். அவ பேரைச் சொல்லும்போதே கண்ணு கலங்குது. என் மனைவி இறந்தபிறகு எங்க எல்லாருக்கும் அம்மாவா இருந்தது அவதான். தையல் கத்துக்கிட்டு வீட்டிலயே இருந்து எங்களுக்கு சேவகம் செஞ்சா. கிட்னி பழுதாகி, வைத்தியம் செய்ய வழியில்லாம அம்மாகிட்டயே போய்ச் சேந்துட்டா. நாலாவது பையன் இறைதாசன் அமெரிக்காவில சாஃப்ட்வேர் எஞ்சினியர். எல்லா பிள்ளைகளுக்கும் கல்யாணம் முடிச்சு வச்சேன்.

அதுக்குப் பிறகு தனிமை... முதுமையில் தனிமை ரொம்ப கொடுமை தம்பி. எனக்குன்னு எதுவுமே இல்லாமப் போச்சு. ஆனா எதுக்குன்னே தெரியாம நான் சேகரிச்ச புத்தகங்கள் எனக்குத் துணையா இருந்துச்சு. என்கிட்ட நிறைய புத்தகங்கள் இருக்கிறது தெரிஞ்சு காந்தி கிராமம் யுனிவர்சிட்டியில இருந்து சில மாணவர்கள் வந்தாங்க. அவங்க ஆய்வுக்குத் தேவையான அத்தனை புத்தகமும் என்கிட்ட இருந்துச்சு. இப்படி நிறைய பிள்ளைகளுக்கு உதவ முடிஞ்சுது. என் தனிமை நீங்கி மிச்ச வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்ச மாதிரி இருந்துச்சு. சில பிள்ளைகள் பணம் தந்தாங்க. மேலும் மேலும் புத்தகங்கள் வாங்குனேன். பிள்ளைகளை அலைய விடாம நானே அவங்களைத் தேடிப் போனேன். ‘புத்தகத் தாத்தா, புத்தகத் தாத்தா’ன்னு கொண்டாட ஆரம்பிச்சாங்க. இனிமே இதுதான் நம்ம வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டேன்.

மதுரையில இருந்து நிறைய மாணவர்கள் என்னைத் தேடி வந்தாங்க. அவங்களுக்காக எல்லா புத்தகங்களையும் அள்ளிக்கிட்டு மதுரைக்கே வந்துட்டேன். 9 வருஷமாச்சு. பிள்ளைங்க போன் பண்ணி ‘இந்த தலைப்புல ஆய்வு பண்றேன் தாத்தா’ன்னு சொல்வாங்க. ‘என்ன இயல்’னு விசாரிப்பேன். அதுக்குத் தகுந்த புத்தகங்களைக் கொண்டு போய் கொடுப்பேன். சில பேருக்கு கூரியர்ல அனுப்புவேன். என்கிட்ட இல்லாத புத்தகங்களை நூலகங்களுக்குப் போய் தேடி எடுத்துக் கொடுப்பேன். ‘இவ்வளவு கொடுங்க’ன்னு கேட்க மாட்டேன்.

எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்குவேன். வசதியிருந்தா ரெண்டு வேளை சாப்பாடு. இல்லேன்னா ஒரு வேளை. வடை, பருத்திப்பால்னு எதையாவது வாங்கி வயித்தை நிரப்பிக்குவேன். மதிய நேரத்துல காலேஜுக்கோ, யுனிவர்சிட்டிக்கோ போயிருவேன். சாப்பிட்டது போக மிச்சமிருக்கிற உணவை பிள்ளைங்க சந்தோஷமா தருவாங்க. இந்த 73 வயசுக் கிழவனுக்கு அதைவிட வேறென்ன வேணும்..?’’ - குழந்தையைப் போல சிரிக்கிறார் முருகேசன்.

கடந்த முப்பதாண்டு இலக்கிய, ஜனரஞ்சக இதழ்கள், நாளிதழ்கள் அனைத்தையும் சேகரித்து வைத்திருக்கிறார் முருகேசன். குக்கர் பாக்ஸில் தொடங்கி, ஷூ பாக்ஸ் வரை எல்லாவற்றிலும் புத்தகங்கள். மிகவும் பழமையான புத்தகங்கள் தொடங்கி நவீன கவிதைகள் வரை எல்லாம் இருக் கின்றன. கொடுக்கிற புத்தகங்களை தேவை தீர்ந்ததும் கறாராக வாங்கி விடுவார். இவரது உதவியால் ஆண்டுக்கு 50க்கும் மேற்பட்டோர் எம்.பில் முடிக்கிறார்கள். இதுவரை ஆயிரம் பேருக்கு மேல் முனைவர் ஆகியிருக்கிறார்கள்.
 
பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத இந்த புத்தகத் தாத்தாவுக்கு பல நூறு மாணவர்கள் தங்கள் ஆய்வேட்டை சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள். அழுக்கு படர்ந்த வெள்ளுடை தவழ, தோளிலும் கைகளிலும் கனத்த பைகளையும், முதுமையையும் சுமந்து கொண்டு இன்னும் நடந்துகொண்டே இருக்கிறார் முருகேசன்.

வெ.நீலகண்டன்
படங்கள்:
பொ.பாலமுத்துகிருஷ்ணன்