சாதனை நாயகனின் சவால்



‘‘அந்தமான் காதலி’, ‘இமயம்’, ‘ராஜரிஷி’ என நடிகர் திலகத்தின் பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருக்கேன். முதன்முறையாக அவரை வைத்து நான் இயக்கி, தயாரித்த படம் ‘சாதனை’. இதில் அவர் இயக்குனராகவே நடித்திருப்பார். சினிமாவுக்குள் வரும் சினிமாவில் இடம்பெறும் ‘ஓ வானம்பாடி உன்னை நாடி’ பாடல் காட்சிக்காக இளையராஜாவிடம் பாடலுக்கான சூழலை விவரிக்க, அதற்கு இளையராஜா மெட்டமைப்பது போன்ற காட்சியை நான் அவர்களிடம் விளக்கியபோது எடுத்த படம்தான் இது’’ என அதுபற்றி பகிர்ந்துகொள்கிறார் இயக்குனர் ஏ.எஸ்.பிரகாசம்.

‘‘கல்லூரி பேராசிரியராக இருந்துகொண்டே படங்களில் பணிபுரிந்தவன் நான். பல சினிமாக்களில் இயக்குனர்களாக நடிக்கும் கேரக்டர்களை கோமாளித்தனமாக சித்தரிக்கிறார்கள். ஒரு இயக்குனரின் பொறுப்புணர்வு, உழைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும்படியாக இருக்கவேண்டும் என்பதற்காகவே ‘சாதனை’ சிவாஜி கேரக்டரை வடிவமைத்தேன். இந்தப் படத்தில் எனக்கும் சிவாஜிக்கும் இடையே ஒரு சவால் எழுந்தது. ‘போதும் விடுங்கள்’ என்று படத்துக்குள் ஒரு வசனம் வரும்.

 நளினிக்கு இந்த வசனத்தை ஒன்பது விதத்தில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சிவாஜியிடம் சொன்னேன். ‘நவரசமெல்லாம் எதற்கு? மூன்று விதமாக மட்டும் சொல்லிக் காட்டுகிறேன்’ என்றார் சிவாஜி சார். ‘இயக்குனர்கள் எப்படியெல்லாம் நடிப்பை சொல்லித் தருகிறார்கள் என்பது ரசிகர்களுக்கும் தெரிய வேண்டும். ஒன்பது விதமாக சொல்வதுபோல் இருந்தால் நன்றாக இருக்கும்’ என பிடிவாதம் பிடித்தேன். ‘சரி, இந்த இடத்தில் நீங்கதான் டைரக்டர். அதனால நீங்க சொல்றதையே கேட்டுக்கிறேன்’ என்று கேமரா முன்பாக வந்தார்.

அடுத்த நொடியே, ‘போதும் விடுங்கள்’ என்ற வசனத்தை சிணுங்கல், வீரம், கோபம், அதிகாரம் என நவரசங்களிலும் நளினிக்கு அவர் சொல்லிக் கொடுக்க, ஷூட்டிங் பார்த்தவர்கள் கைதட்டி ரசித்தார்கள். ஆனாலும் சிவாஜி, ‘தியேட்டரில் இந்தக் காட்சியை ரசிக்க மாட்டார்கள்’ என்றார். ‘பெரிய வரவேற்பு கிடைக்கும்’ என்றேன் நான். ‘என்ன பந்தயம்?’ என்ற சிவாஜி, என்னிடம் செல்லமாக ஒரு பெட் கட்டினார்.

படம் ரிலீஸ் ஆனது. பெரும்பாலும் ப்ரிவியூ தியேட்டரில் படம் பார்க்கும் பழக்கம் உள்ள சிவாஜி, நாகேஷிடம் சொல்லி அவருடைய தியேட்டரில் போய் மக்களோடு மக்களாக அமர்ந்து படம் பார்த்தார். நாங்கள் பந்தயம் வைத்த காட்சி வந்தபோது ஒட்டுமொத்த ரசிகர்களும் கைதட்ட, உடனே என்னை அழைத்த சிவாஜி, ‘நீ சொன்னது தான்யா கரெக்ட்’ என்று பாராட்டினார். பெரும் கலைஞனுக்கு இருக்கவேண்டிய மிகப்பெரிய குணம் இதுதான் என்பதை அன்றும் மெய்ப்பித்தார் அவர்.

- அமலன்
படம் உதவி: ஞானம்