ஏன் பொய்த்தது பருவ மழை? ஆர்வலர்கள் தரும் புதுத் தகவல்!



இதுவரை பெய்த மழை போதாது. ‘மாதி’ புயலும் மழை தரவில்லை. இந்த வருடத்துக்குள் மீண்டும் ஒரு மழை வருமா? தாகம் தீர்க்குமா? காற்றழுத்த தாழ்வுநிலை வேண்டி கிட்டத்தட்ட மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் சென்னைவாசிகள்! பெட்டிக் கடை துவங்கி பென்ஸ் கார் வரை இதே பேச்சுதான். ஆனால், வெறும் பேச்சாக மட்டுமில்லாமல், அறிவியல் ரீதியாக ஒவ்வொரு நிமிடமும் வானிலையை ஆராய்ந்து அதைப் பற்றி இணையத்தில் விவாதிக்கும் ஒரு இளைஞர் கூட்டம் இருக்கிறது சென்னையில். ‘‘எல்லா விதத்திலும் ஆராய்ந்து பார்த்தாச்சு. இந்த சீசனில் இனிமேல் சென்னைக்கு மழை வருவது ரொம்பக் கஷ்டம்!’’ என அதிர்ச்சி தருகிறார்கள் அவர்கள்.

‘‘நாங்க ஒண்ணும் வானிலை ஆராய்ச்சி மையம் இல்லை சார். வானிலைக்கான அதிகாரபூர்வ அமைப்பும் இல்லை. ஆனா, நம்மைச் சுத்தி நடக்குற வானிலை மாற்றங்கள் மேல வெறித்
தனமா ஒரு ஆர்வம். எங்க வீட்டு மாடியிலயே மழையையும் வெப்பத்தையும் நிமிஷத்துக்கு நிமிஷம் பதிவு செய்யிற ரெயின் கேஜை அமைச்சிருக்கேன்னா பார்த்துக்கங்களேன்!’’ என்கிற இஷான் அகமதுதான் இந்த வானிலை ஆர்வலர்களின் தல. அமெரிக்காவில் படித்து அங்கேயே சின்னதாக ‘வெதர் ஸ்டேஷன்’ ஒன்றும் வைத்திருந்த இஷான், 2003-ல் சென்னை வந்தபின்னும் தன் வானிலை ஹாபியைத் தொடர்ந்திருக்கிறார். அவர் போலவே ஆர்வமுள்ள இளைஞர்கள் பலர் ஒன்றிணைய, www.kea.metsite.com என்ற ப்ளாக் ஒன்றைத் துவங்கி, அதில் முழுக்க முழுக்க வானிலை குறித்த அப்டேட்டுகளை உடனுக்குடன் கொடுத்து வருகிறார்.

‘‘இந்தியாவின் அஃபீஷியல் வானிலை   ஆராய்ச்சி மையங்கள் ஒரு நாளைக்கு   ரெண்டு முறைதான் வானிலை தகவலை வெளியிடணும். ஆனா, காற்றின் திசை, அதன் வேகம், கடலின் தன்மை, தட்பவெப்பநிலையின் போக்குகள் எல்லாமே நொடிக்கு நொடி மாறக்கூடியது. அதனாலதான் என்னோட ரெயின் கேஜ்ல இருந்து தகவல்கள் மூணு செகண்டுக்கு ஒருமுறை எங்க ப்ளாக்ல அப்டேட் ஆகுற மாதிரி செட் பண்ணியிருக்கோம். அது மட்டுமில்ல... இந்தியாவுல வானிலையை கண்காணிக்கிறதுக்கு மொத்தம் 20 ரேடார்கள்தான் இருக்கு. ஆனா, உலக அளவுல அது நிறைய. அமெரிக்காவுல மட்டுமே 200 ரேடார்கள் இருக்கு. அதுல சேகரிக்கப்படுற தகவல்கள் எல்லாமே இப்ப இன்டர்நெட்ல கிடைக்குது. அதையெல்லாம் வச்சித்தான் எங்க பிளாக்ல விவாதிப்போம். ஒரு புயல் வந்ததுன்னா, இதுவரைக்கும் உலக வரலாற்றுல அதே மாதிரி தீவிரத்தோட

ஆரம்பிச்ச புயல்கள் எப்படி நகர்ந்திருக்கு, எப்படி முடிஞ்சிருக்குன்னு ஒப்பிட்டுப் பார்ப்போம்! எங்களோட கணிப்புகள் 70 சதவீதம் சரியா இருக்கும்’’ என்னும் இஷான், தன் பிளாக்கில் அதிகம் பங்களிக்கும் வானிலை ஆர்வலரான ஸ்ரீகாந்தையும் நமக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ‘‘இந்த ப்ளாக்ல முப்பது பேர் சீரியஸா எழுதுறாங்க. சுமார் மூவாயிரம் பேராவது ஃபாலோ பண்றாங்க. வானிலைங்கறது எங்களுக்கு வேலை இல்லை... பேஷன். அதனால வேற வேற வேலைகள்ல லாக் ஆகியிருந்தாலும் இதுக்காக நேரம் ஒதுக்குறோம். அரசு வானிலை நிலையத்தில் கூட முக்கியமான சில இடங்கள்ல பெய்த மழையைப் பத்தி மட்டும்தான் சொல்வாங்க. உதாரணத்துக்கு ராமநாதபுரத்துல எவ்வளவு மழை பெய்ததுன்னுதான் அதில் சொல்வாங்க. ஆனா, ராமநாதபுரத்துல உள்ள ஒவ்வொரு சின்ன ஊர்லயும் எவ்வளவு மழை பெய்தது, எந்த வேகத்தில் பெய்ததுன்னு எங்களால துல்லியமா சொல்ல முடியும். ஏன்னா, எங்களுக்கு உள்ள பங்களிப்பாளர்கள் அப்படி!’’ என்றார் ஸ்ரீகாந்த்.

‘‘ஆனா, சில சமயம் இயற்கையும் வானிலையும் எங்க கண்லயே மண்ணைத் தூவிட்டு அது இஷ்டப்படி உலவும். அதையெல்லாம் கணிக்கவே முடியாது’’ என்று ஆரம்பித்தார் அதே குழுவைச் சேர்ந்த வேலாயுதம். இப்படிப்பட்ட கணிக்க முடியாத கேஸுக்கு அவர் முதல் உதாரணமாகச் சொல்வது சமீபத்திய மாதி புயலைத்தான். ‘‘ஒரு புயல் உருவாகுதுன்னா அதோட திசை, வேகம்னு சிலதை துல்லியமா சொல்லலாம். ஆனா, அதைத் தாண்டியும் வேற நிறைய காரணிகள் ஒரு புயலை பாதிக்கும். காற்று, கடல், பனி, வெப்பம் இதையெல்லாம் உத்தேசிச்சுதான் ஒரு புயல் பயணிக்கும். இதையெல்லாம் ஆராய்ந்து சொல்றது ரொம்பக் கஷ்டம். இந்த மாதி புயலைப் பாருங்க... வால்ல டின் கட்டின நாய் மாதிரி வகை தொகை இல்லாம ஓடிச்சு. ரவுண்ட் அடிச்சு திரும்பிச்சு. இதுவரைக்கும் வந்த எந்தப் புயலோடயும் அதை ஒப்பிட முடியலை. அது பர்மாவை நோக்கிப் போனப்போ எங்களுக்கு ஒண்ணுமே புரியலை. ஏன்னா, வடகிழக்கு பருவமழை சீசனைப் பொறுத்தவரை, கடந்த 130 வருஷ சரித்திரம் எங்ககிட்ட இருக்கு. அதன்படி இதுவரைக்கும் சுமார் 8 புயல்கள்தான் பர்மா பக்கம் போயிருக்கு. மத்தது எல்லாமே தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கரையோரம்தான் கடந்திருக்கு. இந்தப் புயல் பல நாட்களா ஒரே இடத்தில் சுத்திக்கிட்டிருந்ததுதான் எல்லாருக்குமே பெரிய ஆச்சரியம்!’’ என்றார் அவர்.

கடைசியாக, இந்தக் குழுவின் மழை எக்ஸ்பர்ட் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் சென்னையைப் பற்றிப் பேசினார்... ‘‘வருஷத்துக்கு சென்னையின் சராசரி மழையளவு சுமார் 140 செ.மீட்டர். ஆனா, இந்த சீசன்ல இதுவரைக்கும் 105 செ.மீ மழைதான் பெய்திருக்கு. இன்னும் 35 செ.மீட்டர் மழை பெய்யலைன்னா சென்னையில தண்ணி பிரச்னை தீவிரமாகிடும். ஆனா, இந்த வருஷம் அவ்வளவு மழை பெய்யுமாங்கறது சந்தேகம்தான். வெறும் காற்றழுத்த தாழ்வு நிலையையும் மழை மேகத்தையும் மட்டும் வச்சிக்கிட்டு மழை வரும்னு சொல்ற காலம் இப்ப போயிடுச்சு. காற்றும் அதுல உள்ள ஈரப்பதமும் ரொம்ப முக்கியம். இப்ப சென்னையில காலையிலயே பனிக்காத்து வீசுது. மழைக்கு எதிரி பனிக்காத்து. பனிக்காத்துல ஈரமே இருக்காது. இந்தப் பனிக்காத்து மழை மேகங்களைக் கூட கலைச்சிடும். இப்படிப்பட்ட பனிக்காத்தாலதான் புயல் கூட நகராம இருக்கு. ராத்திரி பனிக்காத்து இருந்து, காலையில் ஓரளவு வெப்பக் காத்து இருந்தா கூட மழை வர வாய்ப்பு இருக்கு. ஆனா, காலையிலயே பனி இருந்தா ரொம்ப கஷ்டம்’’ என்றார் அவர். அப்ப, பிளாஸ்டிக் குடம், நைலான் கயிறு, சைக்கிளை எல்லாம் ரெடி பண்ணிக்கலாமா? யாருப்பா அங்க... அந்த தண்ணி லாரிய மடக்கு!

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ், ஏ.டி.தமிழ்வாணன்