நியூஸ் வே



*சித்திக்கு பயந்துகொண்டு அஞ்சலி ஐதராபாத்திலேயே இருந்து விடுவதால், இப்போது ஸ்ரீதிவ்யாவிற்கு யோகம் அடித்திருக்கிறது. கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் ஒப்பந்தம் ஆகிவிட்டு, வளசரவாக்கத்தில் ஃபிளாட் வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்துவிடுகிற அவசரத்தில் இருக்கிறார் ஸ்ரீதிவ்யா.

*சூரி கொஞ்சம் கொஞ்சமாக தினமும் மூன்று லட்ச ரூபாய் வாங்குகிற அளவுக்கு முன்னேறிவிட்டார். ‘வெண்ணிலா கபடிக்குழு’விற்கு வாங்கிய சம்பளம் ரூபாய் பத்தாயிரம் மட்டுமே. படங்களுக்கு டிமிக்கி கொடுக்காமல் ஆஜர் ஆகிவிடுவதால் அவரை எல்லோருக்கும் பிடிக்கிறது.

*தனக்கும் தனுஷுக்கும் சேர்த்து மெகா ஹிட்டை பெறவேண்டும் என்ற வெறியோடு ‘அனேகன்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் கே.வி.ஆனந்த், ஸ்பாட்டில் மூச்சுவிடும் சத்தம் வந்தாலும் அனுமதிப்பதில்லையாம். இதில் தனுஷுக்கு நான்கு விதமான கெட்டப் என்பது மட்டும் இப்போதைக்குத் தெரிந்த நியூஸ்.

*பி.ஆர்.ஓ சந்துரு ஹீரோவாக நடித்து, கதை, வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார். படத்திற்குப் பெயர் ‘மது மாது சூது’. இன்னொரு பத்திரிகையாளர் இரா.சரவணன் ‘கத்துக்குட்டி’ படத்தை இயக்குகிறார். வாங்கப்பா... வாங்க!

*இதுவும் பிரியாணி மேட்டர்தான்... தமிழில் ‘வடகறி’ படத்தில் சன்னி லியோன் ஆட்டம் போடப் போகும் செய்தி தெரிந்ததே. அவருக்குப் பிடித்த அயிட்டம் பிரியாணியாம். ‘ஜாக்பாட்’ இந்திப் பட புரொமோஷனுக்காக சமீபத்தில் ஐதராபாத் வந்தவர், ஆசை தீர ஸ்பெஷல் பிரியாணியை ஒரு கட்டு கட்டி, அது செரிமானம் ஆகாமல் அவதிப்பட்டாராம்.

*தனது அக்காவின் திருமணத்திற்கு ஆண்ட்ரியாவை அழைக்க ஆசைப்பட்டிருக்கிறார் அனிருத். நல்ல நாள் அன்று வில்லங்கத்தை விலைக்கு வாங்கக்கூடாது என்பதால், தனது எண்ணத்துக்கு ரிவர்ஸ் கியர் போட்டுவிட்டாராம். இருந்தாலும் அனியின் ஐபோனில் ஆண்ட்ரியாவின் வாழ்த்து மின்னியதாம்.

*டைரக்டர் பாலுமகேந்திரா அவரது மிகவும் புகழ்பெற்ற ‘கதை நேர’த்தின் எல்லா எபிசோட்களையும் சேர்த்து ஒரே தொகுப்பாக வெளியிடுகிறார். கமல் முன்னிலையில் அதை வெளியிட முயற்சி நடக்கிறது.

*சண்முக பாண்டியனுக்கு தன் பெயரை மாற்றிக்கொள்ளலாமா என்ற எண்ணம் இருந்தது. ‘‘இதுதாண்டா அசல் தமிழ்ப் பெயர்’’ என சொல்லி சமாதானப்படுத்தி விட்டார் விஜயகாந்த். விஜயகாந்துக்கு வருகிற ஃபைட்டையும், வரவே வராத டான்சையும் கடந்த இரண்டரை வருஷங்களாக சிறப்பாக ட்ரெயின் பண்ணி பாண்டியனை தயார் செய்து விட்டார்களாம்.

*திருமணத்துக்குப் பிறகு புதிய படங்களில் நடிக்கவில்லை ஜெனிலியா. ஏற்கனவே அவர் முடித்திருந்த ‘ராக் தி ஷாதி’ இந்திப்படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. ‘ஜெய் ஹோ’ படத்தில் சல்மான் கான் தங்கையாக நடித்தார். அதுவும் கிட்டத்தட்ட ரெடி!
‘‘ திரும்பவும் நடிக்க வருவேன். நல்ல கேரக்டர்கள் வேண்டும். டி.வி. தொடராக இருந்தாலும் ஓகே’’ என ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் ஜெனி!

*அபூர்வ தேதியான 11-12-13 அன்று பிறந்தநாள் கொண்டாடிய ஆர்யா, அன்றைய தினம் காலையில் நடந்த ‘நிமிர்ந்து நில்’ பட விழாவில் கலந்துகொண்டார். மேடையிலிருந்த அமலாபாலைக் கட்டி அணைத்து வாழ்த்து சொன்ன ஆர்யாவிடம் பிறந்தநாள் பிரியாணி கேட்டிருக்கிறார் அமலாபால். அவரது ஆசையை நிறைவேற்றினாரோ இல்லையோ, அன்று மாலையே அனுஷ்காவுக்கு பிரியாணி பார்ட்டி கொடுத்தாராம் ஆர்யா.

*விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு மாதிரியான நெருக்கமான டைரக்டர்களுக்கு, அவர்கள் எடுக்கும் படங்களில் பொருத்தமாக ஒரு சிறு வேடத்தில் தோன்ற சம்மதித்து இருக்கிறார் அஜித். அதுதான் தல!

*அழகும், உயரமும் காஜல் அகர்வாலின் ப்ளஸ். சில நேரங்களில் தனது உயரமே மைனஸ் பாயின்ட்டாக இருப்பதாக இப்போது ஃபீல் பண்ணுகிறார் காஜல். ஹீரோவைத் தாண்டிய உயரம் என்று நல்ல வாய்ப்புகள் கை நழுவிப் போவதால், ஹீல்ஸ் போடுவதைத் தவிர்த்து, உயரம் குறைத்துக் காட்ட முடிவெடுத்திருக்கிறாராம்.

*இப்போது இந்திப் படங்கள் சென்னையில் ரிலீஸ் ஆனால் தமிழ் புரொட்யூசர்கள் பயந்து நடுங்குகிறார்கள். பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வந்து ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘யே ஜவானி ஹே திவானி’, ‘க்ரிஷ்’, ‘ராம்லீலா’ நான்கும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பயங்கரமாக ‘கல்லா’ கட்டி விட்டன. இப்போது பெரும் இந்திப் படங்களின் வருகையைப் பொறுத்துத்தான் தமிழ்ப் பட ரிலீஸ் தேதி முடிவு செய்கிறார்கள். ஹே... பகவான்!

*கன்னடத்தில் ஹிட்டடித்த ‘லூசியா’ படம் தமிழில் ரீமேக் ஆகிறது. ‘‘ஹீரோவாக நான்தான் நடிக்கணும்’’ என்று ஆர்வத்துடன் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சித்தார்த்.

சைலன்ஸ்

மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடியாக காதல் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கிறாராம் குண்டு ‘கா’ நடிகை. ‘‘ஹீரோகிட்ட பேசாதே’’ என்று அம்மா ஒரு பக்கம் நகட்டி எடுக்க, இன்னொரு பக்கம் ஹீரோவுக்கும் தனக்கும் இடையே பாலமாக இருக்கும் பெண்மணியின் ஆட்டுவிப்பு என துடுப்பில்லாத படகாக அல்லாடிக் கொண்டிருக்கிறார் அவர்.
ஒரு படமும் இல்லாத காரணத்தால் பழைய ‘மலபார்’ நடிகை, தலைவனுக்கு போன் போட்டு சான்ஸ் கேட்கிறாராம்.

தப்பிப்பதில் மன்னான நடிகர், ‘‘இப்போ ஹீரோயின் செலக்ட் பண்ணுவது டைரக்டரும், புரொட்யூசரும்தான். நான் அதில் தலையிடுவதில்லை. சும்மா நடித்துவிட்டுப் போகிறேன்’’ என தப்பித்து விட்டாராம். கல்யாணம் செய்துக்கிற டைம் ஆகிவிட்டதே என ரசிகர்களே கேட்கிற இடத்தில் இருப்பதால் அவரைப் புறக்கணிக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.