கவிதைக்காரர்கள் வீதி



முகம்-1

உறுதியாகத்தானிருந்தேன்
இயல்பாக இருக்கவேண்டுமென்று
வெளியில் வருகையில்
எவர் முகத்திலும் புன்னகையில்லை
ஒருவித பரபரப்பில்
செயற்கையாய்
அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்
உடனே வீடு திரும்பி
என் முகத்தைக் கழற்றி
கண்ணாடியில் ஓட்டிவிட்டு
முகமூடியொன்றை
அணிந்துகொண்டு
வெளியில் செல்கிறேன்
அவர்கள்
பொய் முகங்களில்
கரைந்து காணாமல் போகிறார்கள்
இப்போது
இந்த முகமும் என்னுடைய முகம் அல்ல.

- சி.சேகர்

முகம்-2
வயதான முகத்தோடு
அவரைப் பார்த்தபோது
அவரின் வாலிப முகம்தான்
கண்ணுக்குள் வருகிறது
குறும்பும் சிரிப்பும்
ஆட்டம் போட்ட
அந்த முகம் எங்கே
அவரும் அப்படியே
நினைத்து இருக்கலாம்
நம்மைப் பற்றி

- நாகேந்திர பாரதி


முகம்-3

இன்னொரு நாளின்
தொடக்கம்.
எல்லோருக்கும் கை அசைத்தபடி
வந்து கொண்டிருந்த மகனின்
மகிழ்ச்சி இழைகளால் ஆன
முகத்தை அணிந்தபடி
சென்று கொண்டிருந்தேன்.
இவனின் கை அசைப்பிற்கு
எதிர்வினை ஏதுமின்றி
எதிர்ப்பட்ட முகமொன்றில்
அத்தனை இறுக்கம்.
உற்றுப் பார்க்கையில்,
சற்று முன் இறக்கி வைத்த
என் முகம்.

- செல்வராஜ் ஜெகதீசன்