ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்



கங்கனா ரணாவத் முக்கிய ரோலில் நடித்திருக்கும் ‘குயின்’ படம் ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. பாலிவுட் படங்களுக்கு இப்போதெல்லாம் ஹீரோ, ஹீரோயின்கள் எல்லா முக்கிய நகரங்களுக்கும் நேரில் சென்று புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். இதைத் தாண்டி இன்னும் ஒரு புதுமையைச் செய்யப் போகிறார் கங்கனா. தனது ‘குயின்’ பட கேரக்டரிலேயே வீடியோவில் தோன்றி, படத்தைப் பற்றி அவர் பேசுகிறார். இந்த வீடியோ தியேட்டர்களிலும், இணையத்திலும், முன்னணி நகரங்களின் ஷாப்பிங் மால்களிலும் திரையிடப்படுகிறது.

சமீபகாலமாக பாப் பாடகிகள் மேடையில் அதிர்ச்சியூட்டும் ஆடைகளில் தோன்றி பரபரப்பு கிளப்புகிறார்கள். இதில் முதலிடத்தில் இருப்பது மிலி சைரஸ். இதைவிடக் குறைவாக ஆடை அணிய முடியுமா என சவால் விடுவது போல மேடை ஏறுகிறார். பாடகிகளின் இந்த செயலை கடுமையாக கண்டிக்கிறார், பிரபல பாடகர் நோயல் கலாகெர். ‘‘யார் வேண்டுமானாலும் அரைகுறை ஆடையில் மேடை ஏறலாம். ஆனால் பாடல் எழுதுவதோ, பாடுவதோ எல்லோருக்கும் கைகூடாது. மிலி தனது சக்தியை நல்ல பாடல் எழுதுவதில் காட்டட்டும். கிளர்ச்சியைத் தூண்டுவதில் காட்ட வேண்டாம்’’ என பொங்குகிறார் அவர்.

‘‘உலகின் மிகச்சிறந்த கணவனுக்கு போட்டி வைத்தால், என் கணவர் கேஷ் வாரன் முதல் பரிசு வாங்குவார்’’ என்கிறார் நடிகை ஜெசிகா ஆல்பா. ‘‘தனது தொழில் நிறுவனங்களை நிர்வகிக்கும் பிஸியான பொறுப்புக்கு இடையிலும் எனக்கு உதவிகள் செய்கிறார் அவர். இல்லாவிட்டால், ஒரு நடிகையாக வெற்றிகரமாக இருந்துகொண்டே, எனது அழகுசாதனப் பொருள் தயாரிப்பையும் பார்த்துக் கொண்டு, லைஃப்ஸ்டைல் புத்தகமும் எழுதிக்கொண்டு, இரண்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க என்னால் முடிந்திருக்காது’’ என்கிறார் ஜெசிகா.

புத்தகங்கள் நிறைய படிக்கும் அரிதான நடிகைகளில் தியா மிர்ஸாவும் ஒருவர். ‘‘என் அம்மாவிடம் கற்றுக்கொண்ட பழக்கம் இது. வாரத்துக்கு மூன்று புத்தகங்கள் படித்து விடுவார் அவர். அந்த வேகத்தில் முடியவில்லை என்றாலும், தேர்ந்தெடுத்து நல்ல புத்தகங்களைப் படிக்கிறேன்’’ என்கிறார் தியா.