சினிமா என்பது மசாஜ் பார்லர் கிடையாது!



ஏராளமான புத்தகங்கள்... போட்டோவில் மகளோடு வெள்ளைச் சிரிப்பில் ராம்... உதவியாளரே வரைந்து தந்த ஓவியங்கள்... அந்த வரவேற்பறை சுவரே கண்களைத் திருடிக்கொள்கிறது. ‘‘வாங்க...’’ என தோளைத் தட்டுகிறார் டைரக்டர் ராம். ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ என இரண்டே படங்களில் தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்த கலைஞன். இப்போது  ‘தரமணி’க்கு அடுத்த கட்ட பாய்ச்சல். சற்றே கோபமும், மனசு நிறைய கனிவும் கொண்ட அந்தக் கலைஞனோடு பேசுவது சம்பிரதாயமல்ல... நிஜமாகவே அனுபவம்.

‘‘கொஞ்ச நாளைக்கு முன்னாடி ‘இண்டியன் பனோரமா’விற்காக கோவா போயிருந்தேன். ‘தங்க மீன்கள்’ மட்டும்தான் தமிழின் சார்பாக ஒரே என்ட்ரி. சந்தோஷமும், மற்ற படங்களுக்கு இடமில்லாத வருத்தமும் சேர்ந்தே இருந்தது. நிச்சயம் ‘தங்க மீன்’களுக்கு மரியாதை கிடைக்கும் என நம்பினேன். படம் முடிந்ததும் கிடைத்த வரவேற்பு, விவாதம் எல்லாமே அழகாக இருந்தது. ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ இந்த இரண்டு படங்களும் சொல்லிக் கொடுத்தது... ஒரு படம் 10 நாள் ஓடுகிறதா, 100 நாள் ஓடுகிறதா என்பதில் எதுவும் இல்லை. பல ஆண்டுகளுக்கு இந்தப் படத்தின் பேச்சும், விவாதமும், அனுபவப் பகிர்வும் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அப்படிப்பட்ட அடுத்த முயற்சிதான் ‘தரமணி’.

வசந்த் ரவின்னு புதுப் பையன் லண்டனிலும், மும்பையில் அனுபம் கெரின் பள்ளியிலும் நடிப்பு பயின்றவர். அவர்தான் ஹீரோ. அப்புறம் ஆண்ட்ரியா. அவரின் முழு ஆளுமையும் தெரிந்த படம் தமிழில் வந்திருக்கா என யோசித்தால், கொஞ்ச நேரத்தில் ‘இல்லை’ன்னு பதில் வரும். அவர் நடித்த ‘அன்னையும் ரசூலும்’ பார்த்த பிறகு, ‘அடடா... இது நம்ம ஹீரோயினாச்சே!’ என்று பட்டது.’’
‘‘ ‘தரமணி’... அது என்ன தலைப்பு?’’

‘‘தரமணி ரயில்வே ஸ்டேஷன் போர்டுதான் டைட்டிலே. பாருங்க, ‘தரமணி’க்கான அடையாளமே மாறிப்போச்சு. முன்னாடி, தரமணின்னா ‘ஃபிலிம் இன்ஸ்டிடியூட்’னு சொல்லுவோம். பின்னாடி, ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்’னு ஆச்சு. இப்ப, ‘தரமணி’ன்னா ஐ.டி. பார்க்குகள்தான் அடையாளம். நவீனத்தின் உச்சியில் இருக்கிற அந்த இடத்தில் ஆண், பெண் காதல் எப்படி இருக்குன்னு சொல்றேன். ‘காதல்னா என்ன’ என்ற அரதப் பழசான கேள்வியை புதுசா முன் வைக்கிறேன். ரயில் எனக்குப் பிடிக்கும். அது எனக்கு நிறைய அர்த்தங்களைத் தரும். நிறைய விஷுவல்களுக்கு இடமளிக்கும். விடாத தனிமைக்கு அடையாளம். அதைத்தான், ‘உன்னோடு போகும்போது ரயில் ஒரு புல்லாங்குழல்... தனித்துப் போகும்போது ரயில் ஒரு பெரிய மலைப்பாம்பு’ன்னு எழுதியிருக்கேன்!’’

‘‘ ‘தரமணி’ எப்படியிருக்கும்?’’ ‘‘ரயில் வந்திட்டு இருக்கு. ஒருத்தன் உட்கார்ந்திட்டு இருக்கான். ‘ஏறுவதா... விழுவதா...’ன்னு இன்னும் அவன் முடிவு செய்யலை. இதுவும் ‘தரமணி’ கதைதான். ‘நாளை காலை நான் உயிரோடு இருந்தால், நீ கொலை... ஒருவேளை நீ உயிரோடு இருந்தால் நான் தற்கொலை’ இதுவும் ‘தரமணி’யின் அம்சம்தான். ‘யார் சொல்லித் தந்தார் இப்படி சிரிக்க, பார்த்தவுடன் பார்த்தவர் மரிக்க’ன்னு அழகை ரசிக்கக்கூடிய கதையாகவும் வரும்.

‘கொன்றால் பாவம், தின்றால் போகும்... உன்னைத் தீண்டிய பாவம் என்ன ஆகும்’னு இச்சையைக் கூட பேசும். முடிந்த அளவுக்கு பாசாங்கு இல்லாமல், தமிழ்ப் பார்வையாளர்களை ரொம்பவும் நம்பி, துணிச்சலான சில பகுதிகளையும் உள்ளடக்கி எடுக்க நினைத்திருக்கிறேன். ஒரு பெரிய மழை இதைத் தொடங்கும்போது தேவைப்படுகிறது. இந்தப் படமே பெரிய மழை போலத்தான். ஆஹா... இது மழையைப் பற்றிய படமாகவும் இருக்கக்கூடும். மழை, காதல், ரயில், தரமணி, ஆண், பெண், பணம், பவர், அறம், பண்பாடு, ஒழுக்கம், மதிப்பீடு, கட்டுப்பாடுகள்... இவை எல்லாவற்றையும் பேசுகிறேன். நம்பிக்கையைத் தரக்கூடிய, பேரன்பை எப்படிக் கண்டுகொள்வது என்று காட்டித் தரக்கூடிய படம்தான் ‘தரமணி’...’’

‘‘பெரும்பாலும் சினிமா ஒரு பொழுதுபோக்கு என்பதை நீங்கள் கவனத்தில் வைப்பதில்லையோ..?’’ ‘‘எந்தக் கலையாக இருந்தா லும் அதில் முடிந்த அளவு உண்மை சொல்லணும்னு நினை ப்பேன். நம்மோட உண்மை இன்னொருத்தருக்கு பொய்யாக இருக்கலாம். இரண்டு பேரும் பொய்யாக இருந்தால் அது படைப்பாக இருக்க முடியாது. உடம்பு டயர்ட் ஆகிவிட்டால் மசாஜ் பார்லர் போய் சரி செய்து கொள்ளலாம். ஆனால், சினிமா பார்லர் கிடையாது. அதே சமயம் தயாரிப்பாளருக்கு பணம் வரணும். பார்வையாளனும் நானும் சேர்ந்து, வாழ்க்கையிலும் கலையிலும் உயர்வதற்கான ஏதாவது ஒரு வழியைக் கண்டு பிடிக்கணும்.

‘தங்க மீன்கள்’ அதிகம் பாசாங்கு இல்லாமல் எடுத்ததே பிரச்னையாகிப் போச்சு. இப்படித்தான் அழணும், சிரிக்கணும் என்பதற்கு விதிகள் எதுவும் கிடையாது. சிரிப்பு, அழுகையில் எது உயர்வு, எது தாழ்வுன்னு தீர்மானிப்பது வர்க்கம்தான். பாக்கெட்டில் 10 ஆயிரம் ரூபாய் வச்சிருக்கிறவன் அழுகைக்கும், 10 ரூபாயே இருக்கிறவன் அழுகைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கு.மக்களு க்கு சினிமா பயன்பட  வேண்டும் என்ற கருத்துக் கொண்டவன் நான். தீவிரத் தன்மையோடும் உண்மையோடும் எளிய மக்களுக்கும் நான் போய்ச் சேர்ந்திருக்கிறேன். ‘தங்க மீன்கள்’ பார்த்துவிட்டு என் கைப் பிடித்து கதறியவர்களை நான் அறிவேன்!’’

‘‘நீங்க கேட்டால் ஜீவா கூட வந்திருப்பாரே...’’ ‘‘வருவார். ஏற்கனவே அவர்கூட படம் செய்திட்டேன். இன்னும் தமிழில் நிறைய நடிகர்களுக்கு தேவையிருக்கு. புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில் சில சௌகரியங்கள் இருக்கு. மொத்தப்படம் முடிகிற வரைக்கும் அவங்களுக்கு அடுத்த படம் இருக்காது. முதல் படம்னு செய்யும்போது ஒருவிதமான வெறி இருக்கும். அவங்களுக்கு அதுவே தொழிலாக மாறுவதற்கு முன்னாடி, அதை முழுசா பயன்படுத்தலாம். பயிற்சியால நேர்த்தி ஆவதற்கு முன்னாடி இருக்கிற முரட்டுத்தனம் கூட அழகாயிருக்கும். ஆண்ட்ரியாவோட டீட்டெயில் ஆச்சரியப்படுத்துது. பாடகி... நவீன நாடகங்களில் நடிச்சிருக்காங்க... ஆங்கிலப் பாடல்கள் எழுத வருது...

 ஸ்கிரிப்ட்டை வாங்கிப் படிக்கிற ஆர்வம் இருக்கு... ஒரு ஹீரோ படத்திற்கு ரெடியாகிற மாதிரி ரெடியாகுறாங்க.’’ தேனி ஈஸ்வர் மனசைத்தொட ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தயாரிப்பாளர் சதிஷ் குமாரின் அனுசரணைக்கு நன்றி ‘‘உங்களுக்கு எப்போதும் யுவன்ஷங்கர்ராஜா...’’ ‘‘இதிலும் யுவன், நா.முத்துக்குமார்தான். முத்துகுமார் எனக்கு நண்பன். சங்க இலக்கியம் பேசுவான். திடீர்னு சுஜாதா பத்தி விலாவரியா சொல்லுவான். ‘சட்’னு ஆப்ரிக்க இலக்கியத்தில் பேச ஆரம்பிப்பான். அவனிடம் வரிகள் எங்க வேண்டுமானாலும் கிடைக்கும். ரூம் போட்டு கறக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு இசை தெரியாது. நான் என் கதையை யுவனிடம் சொன்னால், அதை இசையாக மாற்றித் தருவார். இவர்கள் இருவரும் என்னை ஏமாற்றியதில்லை!’’
உன்னோடு போகும்போது ரயில் ஒரு புல்லாங்குழல்... தனித்துப் போகும்போது ரயில் ஒரு பெரிய மலைப்பாம்பு’

- நா.கதிர்வேலன்