சொல்றேண்ணே சொல்றேன்



பார்லிமென்ட், சட்டசபை... இதுக்கெல்லாம் பிராஞ்ச் ஆபீஸ் இல்லைன்னு நெனைக்கீயளா? இருக்குண்ணே... ஒவ்வொரு ஊர்லயும் உள்ள சலூன் கடைதான் அது. உள்ளூர் வெளுப்புக்காரன் வேட்டியக் கிழிச்சதுல இருந்து, வெளிநாட்டு வெட்டுக்குத்து வரைக்கும் ‘வெட்டிக்கிட்டே’ பேசுற இடம் அதுதான்ணே. ஊருக்கு ஊர் பேப்பர் விற்பனைய பேய்த்தனமா குறைக்குற லோக்கல் லைப்ரரிண்ணே சலூன். மூணு பக்கம் கண்ணாடி, முடிஞ்சா ஒரு குட்டி டி.வி, இல்லாட்டி ஆம்ப்ளி வச்சி ரெண்டு பெரிய ஸ்பீக்கரு... இன்னும் மாறலைண்ணே ஒரு சலூன் கடையோட கேரக்டர்.

சினிமால காட்டுற மாதிரி ஆலமரமும், ஒரு சொம்பு தண்ணியும், நாய் வால் மீசையோட ஒரு நாட்டாமையும் எல்லா ஊர்லயும் இருக்காங்களான்னு தெரியல. ஆனா, அந்தப் பஞ்சாயத்து வேலை இப்பவும் நெறைய சலூன் கடைகள்ல நடக்குது.

எல்லா மனுசனுக்குள்ளயும் பேசுறதுக்கு நிறைய விசயம் கெடக்குண்ணே; ஆனா, யாரு அதக் கேக்குறா... சொல்லுங்க? நல்ல நாள், பெரிய நாள் வந்தா, பெரிய பெரிய வி.ஐ.பிங்க மட்டும் வாழ்த்து சொல்றாங்க... ஊர்ல எது நடந்தாலும் கருத்து சொல்றாங்க. ஏன், எங்காளு சொல்ல மாட்டானா? ‘‘மனுசன்னா மண்டேலாதான்யா’’ன்னு ஆரம்பிச்சி மணிக்கணக்குல பேச லோக்கல் லோடுமேனால முடியாதா? பேசுவான்ணே... பேசத் துடிக்கிறான்.

‘‘இதப் பத்தி நான் என்ன நினைக்கிறேன்னா...’’ன்னு ஊர்ப் பிரச்னையில ஊடால புகுந்து கருத்து சொல்ல நம்ம எல்லாருக்குமே ஆசைதான். ஆனா, யாரு மதிக்குறா... சொல்லுங்க? வீட்டுக்குள்ள இதையெல்லாம் பேச முடியுமா? அங்க நமக்கெல்லாம் கேக்க மட்டும்தானே அனுமதி. இப்படி வக்கில்லாத பேச்சாளனுக்கெல்லாம் ஆதரவு தர செட் பண்ண மேடைன்னே இந்த சலூன் கடைக. சொல்லப் போனா, இந்தக் கடைக மட்டும் இல்லாட்டி, நம்மாளு வீட்லயும், வேலை பாக்குற இடத்துலயும், வம்பு பேசி வெட்டுக் குத்துன்னு வந்து நிப்பான். அதுக்கெல்லாம் வடிகால்ணே இது. அந்த வகையில பார்த்தா நம்மூரு கத்திரி கையிக்கெல்லாம் அமைதிக்கான நோபல் பரிசு எப்பவோ கெடச்சிருக்கணும்.

நீங்க ஒண்ணும் பேச வேணாம்... அந்த சுத்துற சேர்ல ஏறி உக்கார்ந்ததும் தாடையில சோப்பு தடவிட்டே அவங்க ஆரம்பிப்பாங்கண்ணே... மணல் விலையில இருந்து மாவோயிஸ்ட் வரைக்கும் அஞ்சு நிமிசத்துல அம்பது டாபிக் குடுப்பாங்கண்ணே... எவ்வளவு பெரிய உம்மணாமூஞ்சியா இருந்தாலும்... ‘உம்’ கொட்டியே ஒரு வாரத்தை ஓட்டியிருந்தாலும்... பேச வச்சிரும்ணே அந்த சூழல். சில சமயம் அந்தப் பேச்சு பெஞ்சு தாண்டி பெரிய தாவாவாயிரும். ஒருத்தனை ஒருத்தன் சட்டையப் பிடிச்சிக்கிட்டு வாக்குவாதம் பண்ணுவான். வெலக்கிவிட ஆள் தேவைப்படுற அந்த நேரத்துலயும் வெட்டி விடுற வேலை நிக்காதுண்ணே. டென்னிஸ்ல பந்து பொறுக்குற மாதிரி, வாரதும் தெரியாம, போறதும் தெரியாம, நடுவாப்புல புகுந்து புகுந்து தொழிலை தெய்வமா செய்வாங்கண்ணே அவங்க.

இத்தனை கண்ணாடி இருக்கு... பேச்சு முத்திப் போய் கைகலப்பாயிட்டா அத்தனையும் சேதாரம். ஆனாலும் அந்தக் கடைக்காரங்க கவலைப்படாம கடைக்குள்ள பேச்சத் தொடங்கி விடுறாங்களே... எதுக்கு? எங்கூரு கடைக்காரருகிட்ட நான் கேட்டேபுட்டேன்ணே... ‘‘பழக்கமாயிருச்சு தம்பி... உங்களுக்கு இது ஒருநாள் கூத்து. வாரம் முழுக்க ஆளு வராம நாங்க மூணு பக்கமும் எங்க மூஞ்சியப் பார்த்துக்கிட்டுல்ல உக்காரணும்? அப்போ பேசிப் பேசி அதுவே பழகிப் போச்சி’’ன்னாரு அவரு.

ஆனா, இதுல கடைக்காரங்களுக்கு ஒரு நல்ல விசயமும் நடக்குதுண்ணே... அதாவது, என்னிக்காவது அவங்க குடும்பக் கவலையையெல்லாம் தலையில ஏத்திக்கிட்டு அதை நம்ம தலையில இறக்கிட்டாங்கன்னு வைங்க... கிருதா கெழக்கு வடக்கா முறுக்கிக்கும். அப்படி தப்பா போனாக் கூட நம்மாளு பேச்சு சுவாரஸ்யத்துல பெருசு பண்ணுறதில்ல. அடுத்த நாளுதான் கண்ணாடியில கவனமா பார்த்துட்டு, ‘‘எலேய், என் ஒரு பக்கத்து மீசையக் காணோம்டா’’ன்னு கடுப்பாவான். அவன்ட்ட வாக்குவாதம் பண்ணினானே... அந்த ஆசாமி வந்து ‘‘விடு மாப்ள... எனக்கு ஒரு பக்க காதையே காணோம்’’னு சமாதானம் பண்ணுவான்.

கடைக்குள்ள பேச வைக்கிறது மட்டுமில்லைண்ணே... கட்டிங் பண்ணிட்டு வந்த பின்னாடி அதைப் பார்த்துப் பார்த்து நாலு பேரை பேச வைக்கிறதும் அவங்களுக்கு கை வந்த கலை. சில சமயம், ‘‘ப்ப்பா... யாருடா இது? பேய் மாதிரி’’ன்னு கூட பேச வச்சிருவாங்க... ஆனாலும் தனுஷ் மாதிரி அதுவும் பாக்கப் பாக்க பிடிச்சிடும். எங்க ஊருல அப்படித்தான் ஒருத்தன் தலையில ரெண்டு பக்கமும் நல்லா முடியை விட்டு, நடுவுல மட்டும் ஏர் ஓட்டின மாதிரி குட்டியா வழிச்சி வெட்டியிருந்தான். பாக்குற பொண்ணுங்க எல்லாம் பகபகன்னு சிரிச்சி வச்சுதா... நான் நான்னு எல்லா பயலும் அந்தக் கடைக்கே படையெடுத்துட்டான். ‘அவனுக்கு வெட்டுன மாதிரியே வெட்டு’ன்னு அவனுக சொல்ல, கடைக்காரருக்கு அதே மாதிரி வர மாட்டேங்குது. ‘‘உன் தலை வாகு அப்படி தம்பி’’ன்னு எல்லார்கிட்டயும் கதை சொல்லி அனுப்பினாரு.

‘‘ஏன்ணே அன்னைக்கு வெட்டின மாதிரி வரல?’’ன்னு நான் தனியா கூப்பிட்டுக் கேட்டேன். ‘‘உன் கிட்ட சொல்றதுக்கு என்னப்பா... அன்னைக்கு வீட்ல ஒரே பிரச்னை. கேவலமான மூடுல இருந்தேன். சைடுல ஷார்ட் பண்ண நெனச்சு, வீட்டு ஞாபகத்துல மறந்துட்டேன். மறுபடி அதே மூடுக்குப் போனாதான் அந்த கட்டிங் வரும். அபூர்வமா இப்ப அமைதியா இருக்குற என் பொண்டாட்டிகிட்ட அதுக்காக வம்பிழுக்கச் சொல்றியா?’’ன்னாரு அவரு.

அன்னைக்கு ஆரம்பிச்சுதுண்ணே... இன்னைக்கும் வித்தியாசமான கட்டிங், விதவிதமான தாடி மீசையையெல்லாம் பார்த்தா ‘வெட்டுனவன் வீட்ல குடும்பக் கஷ்டமோ’ன்னுதான்ணே எனக்கு நெனைக்கத் தோணும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி கிரிக்கெட் கேப்டன் தோனி ஒரு கீரிப்புள்ள கட்டிங்கோட வந்தாரு பாருங்க... ‘அவருக்கு முடி வெட்டிவன் பொண்டாட்டி அதுக்கு முந்தின நாளு வீட்டுல பாம்பா படமெடுத்து ஆடியிருப்பாளோ’ங்கறது என்னோட கணிப்பு. அநேகமா அது சரியாத்தான் இருக்கும்னு நெனைக்கறேன்! நீங்க இதைப் பத்தி என்ன கருத்து சொல்றீங்க?
(இன்னும் சொல்றேன்...)

இமான் அண்ணாச்சி
தொகுப்பு:
கோகுலவாச நவநீதன்
ஓவியம்: அரஸ்
படங்கள்: புதூர் சரவணன்