மறந்து விடு



விஷ்வா சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவன். படித்துவிட்டு வேலை தேடி அலைகிறான். இந்த நிலையில் காதல் வரக் கூடாதுதான். ஆனால் சினிமாக்களில் வருவது போல காதல் அவன் வாழ்விலும் வந்தது. அவனும் பிரபல தொழிலதிபர் கமலக்கண்ணனின் மகள் சவீதாவும் உயிருக்குயிராகக் காதலித்தார்கள். விஷயம் அறிந்து கொதித்தெழுந்தார் கமலக்கண்ணன்.
விஷ்வாவை தனியாகச் சந்தித்தார்.

‘‘இந்த ஊரை விட்டே நீ போயிடணும். எவ்வளவு கேக்கறியோ கேள். கொடுத்துடறேன்’’ என்றார். பேரம் பேசப்பட்டது. ஐம்பது லட்ச ரூபாய்க்கு ஒப்புக் கொண்டான் விஷ்வா. இவ்வளவு சுலபத்தில் வேலை முடியும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை கமலக்கண்ணன். ‘‘எங்கேயாவது கண் காணாத இடத்துக்குப் போயிடு. இந்த ஊர்லயே இருக்கக்கூடாது. தப்பித் தவறி என் கண்ணுல பட்டே... அதுதான் உனக்குக் கடைசி நாளா இருக்கும். ஜாக்கிரதை...’’ என எச்சரித்தவாறே சூட்கேஸைக் கொடுத்தார்.

‘‘நான் சொன்னா சொன்னதுதான்... நீங்க தலைகீழா நின்னாக்கூட என்னைக் கண்டுபிடிக்கவே முடியாது’’ - சிரித்தபடி சூட்கேஸை எடுத்துக்கொண்டே சொன்னான் விஷ்வா.
சொன்னது போலவே அவன் காணாமல் போனான். கமலக்கண்ணன் அவனைத் தேடாத இடமில்லை. கடைசி வரை அவரால்  கண்டுபிடிக்கவே முடியவில்லை.
‘‘பாவிப் பய... என் பெண்ணையும் கூடவே அழைச்சுக்கிட்டுப் போயிட்டானே!’’ என தினம் தினம் புலம்பிக் கொண்டிருந்தார் அவர்.        

மலர்மதி