வேலை?



டி.ஆமருவியப்பன்

‘‘என்னங்க, வாசல்ல குப்பை வண்டி சத்தம் கேட்குதே... குப்பைக் கூடையை கொண்டுபோய்க் கொட்டிட்டு வரக்கூடாதா?’’ என்றாள் விமலா.
‘‘எனக்கே ஆபீசுக்கு நேரமாயிடுச்சு... இந்த எழவைக்கூட நான்தான் கொட்டணுமா? ஆபீஸ்லே வேற ஏகப்பட்ட வேலை பெண்டிங்! சோத்தைக் கட்டிக்கொடு... நான் போய்த் தொலையறேன்’’ எனப் பொறிந்து தள்ளிக் கொண்டே வாசலை எட்டிப்பார்த்த பாஸ்கர் அதிர்ந்து போனான்.

யார் அந்தப் பெரியவர்... கையில் பெரிய வாளியோடு..? வயசு தொண்ணூறைத் தாண்டியிருக்கும் போலவே! இதுவரை இந்த ஏரியாவில் பார்த்ததில்லையே... புதுக் குடித்தனமோ! வண்டியில் குப்பையைக் கொட்டிவிட்டு, வாளியையும் பைப்பில் கழுவிக்கொண்டு வருகிறாரே... இந்த வயசிலேயும் இப்படி ஒரு டெடிகேஷனா?  ‘‘விமலா, ஜிப்பா போட்டுட்டு... எதிர்வீட்டு மாடிக்குப் போறாரே... யாரந்தப் பெரியவர்?’’

‘‘அவரா... நம்ப அம்புஜம் மாமியோட பெரியப்பாவாம்! காசிக்குப் போயிட்டு வர்ற வழியில, இவங்களையும் பார்த்துட்டுப் போகலாம்னு வந்திருக்கார்.’’
பாஸ்கரின் முகம் வெளிறியது! கெஸ்ட்டா அவர்?நம்ம வீட்டுக் குப்பையைக் கொட்டறதுக்கே நாம் இவ்வளவு அலுத்துக் கொள்கிறோம்... வெளியூரிலிருந்து வந்து, தான் தங்கியிருக்கிற வீட்டு வேலையைத் தன் வேலையாய்ச் செய்கிற இவரெங்கே? நானெங்கே? கன்னத்தில் போட்டுக் கொண்டே குப்பைக் கூடையைக் கையிலெடுத்தான் பாஸ்கர்.