தகராறு விமர்சனம்



மதுரையின் பல ஏரியாக்களில் சந்தோஷமாகத் திருடும் நான்கு கில்லாடித் திருடர்கள். திருட்டு, குடி என எல்லாம் ‘நல்லபடி’யாகப் போகும்போது அவர்களில் ஒருவன் எதிரிகளால் கொலை செய்யப்பட, கொந்தளிக்கிறது நண்பர்கள் வட்டம். அடுத்த பக்கம் ஒரு போலீஸ்காரரும் கொல்லப்பட, நண்பனைக் கொன்றது யார்? என தேடும் படலமும் கடைசியில் பழி வாங்கும் மீதிக் கதையும்தான் கிளைமாக்ஸ்.

இந்த தடவை முழு ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார் அருள்நிதி. மதுரை மண்ணே சிவக்கிற சண்டைகள் படத்திற்கு பெரிய ப்ளஸ். வகை தொகையில்லாத சண்டைகள் என்றாலும், மூர்க்கமும் காரணங்களும் நம்பும்படியாக இருப்பது பெரும் ஆறுதல். பொதுவாக முகத்தில் குழந்தைத்தனம், பேரமைதி காட்டுவது; தேவைப்படும் இடத்தில் தேவைப்படும் நேரத்தில் ஆக்ரோஷமான ஆக்ஷன் அவதாரம் எடுப்பது என ‘மௌனகுரு’ ஸ்டைல் அருள்நிதிக்கு அப்படியே பொருந்திப் போயிருக்கிறது. அவர் பீரோவிற்குள் மறைந்து போய் திருடும் பலே டெக்னிக், கலகல. பூர்ணாவின் முன் சிங்குச்சான் கலர்களில் டிரஸ் போட்டு தூள் கிளப்புவதும் வேடிக்கை.

அருள்நிதி, பவண்ஜி, சுலில்குமார், முருகதாஸ் நால்வரும் டாஸ்மாக்கில் போடும் ஆட்டங்களில் மட்டுமல்ல... நட்பிலும் சிலிர்க்க வைக்கிறார்கள். தில் ஹீரோ, ஜில் ஹீரோயின் பூர்ணா எனப் படம் போனாலும், அவசர அவசரமாக காதலை முடித்துக் கொண்டு ஆக்ஷனுக்குத் திரும்புவதிலேயே ஆர்வம் காட்டுகிறார் புதுமுக இயக்குநர் கணேஷ் விநாயக். முதல் படத்தில் பதற்றம் காட்டாமல், முழு ஆக்ஷன் எடுப்பதற்கு தைரியம் வேண்டும். அது நிஜமாகவே கணேஷ் விநாயக்கிற்கு கை வந்திருக்கிறது.

வழக்கம் போல ஹீரோயின் என்றாலே காதலுக்கும் டூயட்டுக்கும்தான் என்று நினைத்தால், பூர்ணா அதிர்ச்சி வைத்தியம் தருகிறார். கொஞ்சம் சிரிப்பும் அள்ளும் புன்னகையுமாய் மிளிரும் பூர்ணாவிடம் இத்தனை ஆக்ரோஷத்தை சாமி சத்தியமாக யாரும் எதிர்பார்க்கவில்லை. ஹீரோயினுக்கான மென்மை இமேஜ் பற்றி யெல்லாம் நினைத்துக் கூட பார்க்காமல், ‘திமிரு’ ஸ்ரேயா ரெட்டி போல ஆவேசம் காட்டி துவம்சம் செய்கிறார் பூர்ணா. காதலுக்காக அலைந்து, பிறகு அந்தக் காதலை நண்பர்களுக்காகத் துறக்கும் அருள்நிதியிடம் பூர்ணா கேட்கும் கேள்விகளில் அனல்.
ஆக்ஷனே பெருமளவில் நிகழும் மதுரை வட்டாரக் கதைக்கு தில்ராஜின் கேமரா நல்ல ஒத்துழைப்பு. பாடல்களில் தரண் குமார் பரவாயில்லை ரகம். ஆனால், வேகம் கூட்டுவதில் சத்யாவின் பின்னணி இசை படத்துக்கு அளிப்பது பெரும் பங்கு.

படத்தின் கொஞ்ச நேரத்திலேயே ‘சுப்ரமணியபுரம்’ ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. நாலு ரவுடிகள் என்ன வெல்லாம் வரம்பு மீறலாம் என்பதற்கு மேல் செய்துவிட்டு, அம்சமாக பாரில் உட்கார்ந்து கொண்டு அலப்பறை தருவதெல்லாம் கொஞ்சம் ஓவர். கிளைமாக்ஸ் அநியாயத்துக்கு நீடிப்பதைக் குறைத்திருக்கலாம். ஆனாலும் ஆக்ஷன் ரசிகர்களுக்கு இந்தத் ‘தகராறு’, தேனாறுதான்!

 குங்குமம் விமர்சனக் குழு