கல்யாண சமையல் சாதம் விமர்சனம்



பெரிய கதையெல்லாம் இல்லைங்க... படிப்பு முடித்திருக்கிற லேகா வாஷிங்டனுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு மாப்பிள்ளையாக லேகா தவிர்க்கப் பார்க்க, கடைசியில் வருகிறார் பிரசன்னா. அவரையும் ரிஜெக்ட் செய்துவிட்டு, படிக்கப் போய்விடலாமா...

அதற்கு ‘ஆத்துல’ பர்மிஷன் கேட்கலாமா... என லேகா யோசிக்கும்போதே மற்றவர் அனைவருக்கும் பிடித்துப் போய் ‘செட்’டாகி விடுகிறது திருமணம். அப்புறம்... அப்புறம்... கல்யாணத்துக்கு முன்பே லிவிங் டு கெதர் வாழ்வில் ஒரே ஒருநாள் நம்பிக்கை வந்து ‘வாட்டர்’ அருந்திய நாளில் இருவரும் முயற்சிக்க, முடிவு ‘சுப’மாக இல்லை. அதற்குப் பிறகான நடப்புதான்... க்ளைமாக்ஸ்!

புதுமுக இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னாவின் திரைக்கதை டைரக்ஷனில் நிறைய விஷயங்கள் இல்லாதது ஆறுதல். டூயட்கள் இல்லை, ஃப்ளாஷ்பேக் இல்லை, மெதுவாக நகரும் காட்சிகள் இல்லை, பாடல்கள் மிகக்குறைவு. கதையை சரளமாகக் கொண்டு செல்லும் அழகிற்கும் கொஞ்சம் சங்கடமான கருப்பொருளை எடுத்துச் சொல்லும் துணிவுக்கும் ஆர்.எஸ்.பிரசன்னாவிற்கு பூங்கொத்து! கொஞ்சம் தவறினால் படு மோசமாகக் கூடிய தீம், வார்த்தை மீறினால் தப்பர்த்தம் வெளியே வரும். இப்படிப்பட்ட சூழ்நிலைக் கதையை எடுத்துக்கொண்டு, அதையே சிந்தாமல் சிதறாமல் நமக்கும் அப்படியே கடத்தியிருக்கிறார் டைரக்டர் பிரசன்னா.

இப்படிப்பட்ட ‘டெலிகேட்’ சிச்சுவேஷனில் ஹீரோவாக வருவதற்கு துணிச்சல் வேண்டும். பிரசன்னா அருமையான அண்டர்ப்ளே. கல்யாணம் செய்த சமயத்தில் எடுத்திருப்பதால், என்னவோ புது மாப்பிள்ளை போலவே அசத்துகிறார். கம்பீரமும், அழகும், கேரக்டரை புரிந்துகொண்ட விதமும் அருமை. பிரசன்னா மாதிரியானவர்கள் திரும்ப வந்தால் சினிமாவுக்கு நல்லது. சின்னச் சின்ன அழகில் துளி மிகை இல்லாமல் பிரசன்னா நடித்திருப்பதுதான் படத்திற்கு பெரிய பலம். பிரசன்னாவின் நண்பர்களும் அட்டகாசம்.

பிரசன்னாவின் ‘ஃபேக்ட்’ மாமனார் வரைக்கும் தெரிந்து, அவரே ஆபத்பாந்தவனாக மீட்டெடுக்க வருவது பெரிய திருப்பம் அல்ல... ஆனால் படத்தை அலுக்காமல் கொண்டு செல்ல உதவும் திருப்பம். நகைச்சுவை ஒன்லைன்கள் படம் முழுக்க தெளிக்கப்பட்டுள்ளன. நமுட்டுச் சிரிப்புக்கும், வாய்விட்டுச் சிரிப்பதற்கும் பல இடங்கள் இருக்கின்றன. பிரசன்னா நிவாரணம் தேடி நண்பர்கள் குழுவோடு வைத்தியர் வீடுகளுக்குப் பயணம் போவது ஏகப்பட்ட கலகலப்பு.

பொதுவாக ஒரு திரைப்படம் சுவாரஸ்யமாக இருக்கிறது என்றால் கேரக்டர்களின் பின்னணி நன்றாக இருக்க வேண்டும். லேகாவும், அம்மாவும் பேசிக்கொள்கிற அந்தரங்க விசாரிப்புகள் அப்படியே 2014க்குப் போகப் போகிறோம் எனத் தெரிகிறது. எல்லாவற்றையும் பிள்ளைகளிடம் பகிர்ந்துகொள்ள வேண்டிய சூழலை அதிர்ச்சியில்லாமல் காட்டியிருக்கிறார்கள். லேகா அருமை. காணாமல் போயிருந்தது ஏன் எனத் தெரியவில்லை. ஐயராத்துப் பொண்ணுக்கு அம்சமாகப் பொருந்துகிறார். அத்தனை பேரையும் ஒரே ஃப்ரேமில் வைத்துக்கொண்டு பிரசன்னாவிடம் அவர் கண்ணால் பேசும் காட்சிகள் சுவாரஸ்ய வகை. நடுநடுவே டி.வி தொடர் சாயல் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

கிருஷ்ணன் வசந்த் கேமரா அனேக நேரம் வீட்டுக்குள்ளே இருந்தாலும் நறுவிசு. பாடல்களின் இசையில் அரோரா இனிக்கிறார். தியேட்டரில் ஆடியன்ஸ் சிரிப்பதைப் பார்த்தால், சொன்ன ‘டாபிக்’கை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. காமெடி... சுவாரஸ்யம்... அட, ஒரு ‘டைப்’பான கலாட்டாங்க!

 குங்குமம் விமர்சனக் குழு