சீஸன் சாரல்



பிரம்ம கான சபை இந்த வருடம் ‘கான பத்மம்’ விருதை சஞ்சய் சுப்ரமணியத்திற்கு வழங்கியது. ‘‘என்னுடன் வாசிப்பவர்கள் வயதில் பெரியவர்களாக இருக்கும்போது, அவர்களுக்கும் விருது கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்’’ என்று தனது ஏற்புரையில் குறிப்பிட்டார் சஞ்சய். அந்தக் கூற்றை உண்மையாக்கி, ‘வாத்ய பத்மம்’ என்ற விருதை திருச்சி தாயுமானவருக்கு வழங்கியதோடு, ‘வருடா வருடம் இந்த விருது தொடரும்’ என்றும் அறிவிக்கப்பட்டதில் இசை உலகிற்கு மகிழ்ச்சி. ‘மற்றவரின் வளர்ச்சி, புகழ் போன்றவற்றில் நீ சந்தோஷப்படு’ என்பது மகாபாரதத்தில் அன்று பகவான் கிருஷ்ணன், சஞ்சய்க்கு (அர்ஜுனனுக்கு) போதித்தது. இன்றும் சஞ்சய் அதை கடைப்பிடிப்பது சிறப்பு.

பிரம்ம கான சபையில் நித்யஸ்ரீ மகாதேவன் கச்சேரி. சாருகேசி ராக வர்ணம். ஆரம்பம் முதல் கச்சேரி கேட்டவர்களை, இரண்டரை மணி நேரம் கட்டிப் போட்டது அந்த ராகத்தின் தாக்கம். ‘மாபால’, அஸாவேரி ராகத்தில் தியாகராஜர் கீர்த்தனை, ‘கோபாலக பாஹிமாம்’ என்ற பூபாள ராகத்தில் அமைந்த ஸ்வாதி திருநாள் கீர்த்தனை என்று விறுவிறுப்பாக கச்சேரி களை கட்டியது.

தஞ்சாவூர் முருகபூபதி அந்த ‘களை’க்கு தன் மிருதங்க வாசிப்பால் ‘ரகளை’ சேர்த்தார். ‘சேரராவதே’ கீர்த்தனைக்கு முன் ரீதிகௌளை ராகத்தை அனுபவித்துப் பாடினார் நித்யஸ்ரீ. ராகவேந்திர ராவ் வயலினில் அமர்க்களமாக ‘சேர்ந்தார்’. சியாமா சாஸ்திரி தமிழுக்குத் தந்த ‘தருணம் இதம்மா’ என்ற கௌளிபந்து கீர்த்தனையைப் பாடியது அருமை.

‘அநாதுடனு கானு’ என்ற ஜிங்களா ராக கீர்த்தனையை தியாகராஜர் அமைத்த விதமே விநோதமானது. ஒரே ஒரு ராகத்தில் அமைந்த அந்தக் கீர்த்தனையை ஒன்டே கிரிக்கெட் மேட்ச் வேகத்தில் நித்யஸ்ரீ பாடினார். பாபனாசம் சிவனின் அபூர்வ மெட்டமைப்பான ‘வெங்கட ரமணா’ என்கிற கல்யாணி ராக கீர்த்தனை தேனாக ஒலித்தது. கச்சேரியில் லாவண்யாவும் கூடப் பாடினார். சிவராமகிருஷ்ணன் கடத்துடன் முருகபூபதி தனி ஆவர்த்தனம் வெகு ஜோர்.

‘முத்ரா’ அமைப்பின் இசை விழா துவக்கத்தில் உமையாள்புரம் சிவராமன் கௌரவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கணேஷ் - குமரேஷ் இரு வயலின் இசை. கர்நாடக இசையின் வட்டத்துக்குள் புதுமையைத் தேடும் சாதனை மன்னர்கள். ஹம்ஸத்வனி ராகத்தில் ஆரம்பித்து கடைசி வரைக்கும் நாதமயம்தான். தொடர்ந்து ரஞ்சனி ராகத்தில் ஜி.என்.பி கீர்த்தனை. வஸந்தா ராகத்தை ரஸத்துடன் வாசித்த கணேஷ், கூடவே ‘ராமச்சந்திரம்’ கீர்த்தனையைப் பாடியும் காட்டினார். வாத்தியம் வாசிப்பவர்களுக்கு பாடும் திறமையும் சேர்ந்திருந்தால் விசேஷம்தான்.

கானடா ராகம், நளினகாந்தி ராகத்தில் தானம், மந்தாரி ராகத்தில் பல்லவி, பிறகு மாற்றி மாற்றி இந்த மூன்று ராகத்திலும் ஸ்வரம். ரசிகர்கள் இசை வெள்ளத்தில் மூழ்கி விட்டனர். அனந்த கிருஷ்ணன் மிருதங்கமே ஒரு அலாதிதான். அப்படியொரு கை பேச்சு, தாள சுத்தம். அனந்த், அபாரம். கிரண் எலக்ட்ரானிக் ‘பாட்’டை கையாண்ட விதம் அருமை. அவ்வப்போது தவில், கடம், தனியா கையில மோர்சிங்... எல்லாம் காட்டி ‘ஃபுல் பெஞ்ச்’ பிரமையை ஏற்படுத்தினார்.

பாரதிய வித்யா பவன் இசை விழாவில் திருவாரூர் பக்தவத்சலம், ரஞ்சனி - காயத்ரி போன்ற கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். புதுப்பிக்கப்பட்ட அரங்கம்... அமர்க்களமாக ரசிக வெள்ளத்தோடு மிளிர்ந்தது டி.என்.சேஷகோபாலன் கச்சேரி. கல்யாணி அடதாள வர்ணம்தான் ஆரம்பம். ‘மஹா கணபதிம்’ நாட்டை ராக கீர்த்தனை. பிறகு, ஸ்ரீ ராகத்தை எடுத்துக்கொண்டார் சேஷகோபாலன். அலாதி கற்பனை. அடுக்கடுக்காய் சங்கதிகள். ‘நாமகுஸும’ என்ற தியாகராஜர் க்ருதி... ஸ்ரீதர் வயலினில் கூடவே வந்தார்.

ஸுநாத விநோதினியில் ‘தேவாதி தேவ’ பாடி கரஹரப்ரியா ராகத்தை எடுத்தார். இப்படிக்கூட ராகத்தை அனாயாசமாகப் பாட முடியுமா! மூன்று ஸ்தாயியில் ராகத்தை பிருகாக்கள், சௌக்யம் என்று பந்தல் போட்டார். தானம் பாடுவதில் நிபுணர் ‘விசேஷ கோபாலன்’. ‘வெண்ணெய் தின்ன சின்னத் தனமா’ பல்லவி. இனிமேல் அந்தப் பல்லவியில் ஒண்ணும் பண்ணுவதற்கு பாக்கியில்லை என்னும் அளவுக்கு அக்குவேறு ஆணிவேறாக பிரித்து எடுத்தார் மனிதர். திருச்சூர் நரேந்திரனும், சுந்தர்குமாரும் பிரித்ததைக் கோத்து அழகாக வாசித்தனர். நிச்சயமாக, ‘சேஷகோபாலன் பாணி’ என்பது நிலைத்து நிற்கும்!

‘சிங்கப்பூர் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி’ சார்பில், மியூசிக் அகாடமி மினி ஹாலில் பல இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வருடந்தோறும் ‘இசை விழா’ நடத்தி வருவது சிறப்பு. வளரும் கலைஞர்கள் பலரையும் சிங்கப்பூரிலிருந்து இங்கு வரவழைத்துப் பாட வைத்தும், இங்குள்ள கலைஞர்களைப் பாட வைத்தும், ஒரு வாரம் வைபவம் நடந்தது. இளம் புயல் ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் பாட்டு ரசிகர்களைக் கவர்ந்தது.

பந்துவராளி வர்ணம், ‘பாலயமாம்’ என்ற கந்நட ராக கீர்த்தனை, ‘ஸாமஜ வர கமனா’ என அருமையாகப் பாடினார். நல்ல பிருகா சாரீரம். நல்ல பாடாந்தரம். ஸாவேரி ராகம் படு கச்சிதம். துருஸுகா பரம ஸுகம். ‘பிருகாக்கள்’ என்று சொல்லும்போதே, ‘காக்க’ என்ற வார்த்தை கூடவே வருது. அதைக் காப்பாத்திக்க வேணும். அஸ்திரத்தைப் பிரயோகிக்கக் கூடாது. இருக்கு என்று காமிச்சுண்டே இருக்கணும். இதைச் சொன்னது ‘பிருகு’ முனிவர்.
(சாரல் தொடரும்...)

படங்கள்: புதூர் சரவணன், ஏ.டி.தமிழ்வாணன்