டாடி எனக்கு பல டவுட்டு? குட்டிச் சுவர்



உடைஞ்ச பாட்டில்ல வாங்கிக் குடிக்கிறாங்களா? இல்லைல்ல, அப்புறம் ஏன் குடிச்சதுக்கு பிறகு பாட்டில உடைக்கிறாங்க? நண்பர்களா இருந்து காதலர்களா மாறுறாங்களே தவிர, என்னைக்கும் காதல் முறிஞ்ச பிறகு நண்பர்களா தொடர்வதில்ல! சுகர் போட்ட பிஸ்கட் பாக்கெட்டே 20 ரூபாய்க்கு தரப்போ, ஏன் சுகரில்லாத பிஸ்கட் பாக்கெட்ட 50 ரூபாய்க்கு விக்கிறாங்க? ரீசார்ஜ் பண்றப்ப, talk timeன்னு சொல்றாங்க. ஆனா, குறிப்பிட்ட time talk பண்ணாட்டி பேலன்ஸ எடுத்திடுறாங்க?

எப்ப பார்த்தாலும் அமைச்சருங்க மாறிக்கிட்டே இருக்காங்களே, யாரு யாரு இன்னைக்கு எந்தெந்த துறைக்கு அமைச்சர்ன்னு சொல்ல ஒரு அமைச்சர வச்சாங்களா? இதெல்லாத்தையும் விட பெரிய டவுட்டு, எப்பவும் ஆளுங்கட்சியே ஜெயிக்கிறத பை-எலக்ஷன்னு சொல்றாங்களே, வீட்டுக்கு வீடு ஓட்டுக்கு ஓட்டு மொய்   வச்சு ஜெயிக்கிறதுனால   மொய் எலக்ஷன்னுன்னுல்ல சொல்லணும் ?

மெகா சீரியல்ங்கிற பேருல ஒண்ணுத்துக்கும் உதவாத கதைய வச்சு வருஷக் கணக்குல இழுத்தாங்க... ஓகே. அப்புறம் கதையே இல்லாம வெறும் காட்சிகள மட்டும் வச்சு பல வாரம் இழுத்தாங்க... அதுகூட ஓகே. ஆனா, கர்ணன் படம் டிஜிட்டல்ல ரிலீஸ் ஆனப்ப, அந்தப் படத்த கூட டாப் 10 திரைப்படங்கள்ல சேர்க்குற உப்புமா சேனல்களோட மெகா சீரியலுங்க இருக்கே... ப்ப்பப்பா! முந்தா நேத்து ஒரு சீரியல்ல கீரை வாங்குறத 20 நிமிஷம் காட்டுறாய்ங்க.

இதே டைம்ல நாலு தெரு தள்ளி இருக்கிற டாஸ்மாக்குக்கு நடந்து போய் நாலு பீரை வாங்கிட்டு வந்திடலாம். ஒரு போன் அடிச்சு, அதை எடுக்கிறத ஒரு வாரம் காட்டுறாய்ங்க. இந்த நேரத்துல பஸ் புடிச்சு நேர்ல வந்தே பேசிட்டு போயிடலாம். நம்ம இயல்பு வாழ்க்கைய பிரதிபலிக்க வேண்டிய மெகா சீரியல்ல இப்ப கொஞ்சம்கூட யதார்த்தம் இல்ல. இப்படித்தான் பாருங்க, ஆபீஸ்ல நடக்கிற மாதிரி ஒரு சீரியல் ஓடுது. அதுல எல்லோரும் வேலை செய்யற மாதிரி காட்டுறாங்க. எந்த ஆபீஸ்லங்க எல்லா ஊழியர்களும் வேலை செய்யறாங்க?

பரீட்சைல ஒரு மார்க் கேள்விக்கு ஒன்பது வரியில பதில் எழுதுனவய்ங்கதான் இப்போ மெகா சீரியலுக்கு வசனம் எழுதிக்கிட்டும், இயக்கிக்கிட்டும் சுத்துராய்ங்க. பாடம் நடத்துனப்ப தூங்குன பலபேரு இப்ப அரசு பஸ் ஓட்டுனரா கை நிறைய சம்பாதிக்கிறாங்க. படிக்கிறப்ப பள்ளிக்கூடம் பக்கமே வராத பல பேருதான், இப்ப பதவி பெற்று பார்லிமென்ட் பக்கமே ஒதுங்காம இருக்காங்க. பாட நோட்ட விட்டுட்டு பாத்ரூம் செவுத்துல படம் வரைஞ்சவன் இப்ப பிளெக்ஸ்பேனர் தயாரிப்புல இருக்கான்.

கூட்டல், பெருக்கல் தெரியாம வீட்டுப் பாடம் செய்யாம வந்தவன், இப்ப பெரிய ஹோட்டல் நடத்திக்கிட்டு இருக்கான். ஸ்கூல் பெல் அடிக்கிறதுக்கு முன்னாலயே வீட்டுக்கு ஓடியவன், இப்போ டிராவல்ஸ் வச்சு நல்லா இருக்கான். வாத்தியார் பாடம் நடத்துறப்ப, பின் பெஞ்சுல உட்கார்ந்து கமென்ட் விட்டவன், இப்ப கவுன்சிலரா நகராட்சி கூட்டத்துல உட்கார்ந்திருக்கான். ஆனா, வாத்தியார் சொன்னத ஒழுங்கா செஞ்சு, ரெகுலரா பள்ளிக்கூடம் வந்து பாடம் படிச்சு டிகிரி முடிச்சவன், பாவம் இன்னமும் வேலை தேடிக்கிட்டு இருக்கான்.

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...

ஃபேன்சி தேதின்னு 11.12.13 அன்னைக்கு கல்யாணம் பண்ணிக்கிறது, அதுலயும் அதே நாள் 11 மணி 12 நிமிடம் 13 நொடியில குழந்தை பெத்துக்கிறதுன்னு கிறுக்கு பிடிச்சு அலையிற நம்மாளுங்க எல்லாரும்தான்!