தேனீ எனக்கு செல்லப் பிராணி!



சென்னையில் விந்தை மனிதர்

நாய் கடிக்குதுங்கிறதுக்காக அதை நாம வளர்க்காம இருக்குறதில்ல... மீனை திருடறதுங்கிறதுக்காக பூனையை வீட்டை விட்டு விரட்டுறதில்ல... ஆனா, தேனீயை மட்டும் ‘கொட்டிடும் வளர்க்காதீங்க!’ன்னு அட்வைஸ் பண்றாங்க. இது என்ன சார் நியாயம்?’’ என்கிற சுவாமிநாதன், பெட்டிக்குள்ளிருந்து தன் ‘பெட் அனிமல்’களை அள்ளி கையில் ஓட விட்டுக்கொண்டே போஸ் கொடுக்கிறார். சென்னை சிட்லபாக்கம் பகுதியில் உள்ள இவர் வீட்டுக் கதவு, மார்க் கெட்டிங் மக்களால் கூட அதிகம் தட்டப்படுவதில்லை. ‘தேனீக்காரர் வீடு’ என அதை அன்போடும் எச்சரிக்கையோடும் அழைக்கிறார்கள் ஏரியா மக்கள்.

‘‘அஞ்சு வயசுல தொத்திக்கிட்ட பழக்கம்ங்க. நான் சின்னப் பையனா கும்பகோணத்துல இருந்தப்ப அரசாங்கமே வீடு வீடாக தேனீப் பெட்டியைக் கொடுத்து தேனீக்களை வளர்க்கச் சொல்லிச்சு. மற்ற அரசுத் திட்டங்கள் மாதிரியே இந்த தேனீ வளர்ப்புத் திட்டத்தையும் யாரும் சீரியஸா பின்பற்றலை. ஆனா, நான் விடல. அப்போ கிராமங்கள்ல பொழுதுபோக்கு கிடையாது. பொழுதுபோக்குக்காக தேனீயை வளர்க்க ஆரம்பிச்சு, பின்னாடி பெரிய ஆர்வமா வளர்ந்துடுச்சு’’ என்கிற சுவாமிநாதனின் வீட்டில் காம்பவுண்டு ஓரங்கள், மொட்டை மாடி என எங்கு பார்த்தாலும் தேனீ பெட்டிகள். அரசு ஊழியரான இவர், மாற்றலாகிச் செல்லும் ஊர்களுக்கெல்லாம் இந்தத் தேனீக்களையும் அழைத்துப் போவாராம். ஏச்சு, பேச்சு, கிண்டல் என எதற்கும் அசரவில்லை மனிதர். தேனீக்கள் மனிதனுக்குத் தொல்லை, ஆபத்து என்பதையெல்லாம் இவர் முற்றிலுமாக மறுக்கிறார்.

‘‘காட்டுல தேன் கூடு உள்ள மரத்தில் ஏறினாலே தேனீ படையெடுத்து கொட்ட வரும். ஆனா, வளர்க்குற தேனீ அப்படியில்ல. இது வேற மாதிரி பரிணாமம் ஆகிடுச்சு. தேனீ ஒருத்தரைக் கொட்டின உடனே செத்துடும். கொட்டினா செத்துடுவோம்ங்கிற பயமே, இந்த தேனீக்களை சாந்த சொரூபியா மாத்திடுச்சு. அதைக் கொல்லணும், அதோட வாழிடத்தை துவம்சம் செய்யணும்னு நாம நினைச்சால் கண்டிப்பா தாக்கும். நம் மனசில் உள்ள எண்ணங்களை கண்டுபிடிப்பதில் தேனீக்கள் கொஞ்சம் புத்திசாலியான பூச்சிக்கள்’’ என்கிற சுவாமிநாதன், தான் வளர்க்கும் தேனீக்களின் வெரைட்டிகளையும் விளக்குகிறார்...

‘‘இந்தியாவுல 5 வகை தேனீக்கள்தான் மெயின். முதலாவது, கொசுத் தேனீ. இது கொட்டாது. ரெண்டாவது, கொம்புத் தேனீ. இது மரக் கிளையில அடை அடையா தொங்கக் கூடியது. மூணாவது மலைத் தேனீ. இது சைஸில் ரொம்பப் பெருசு. கூடும் பெருசா இருக்கும். மலைத் தேனீ கட்டுற ஒரு அடையில் மாத்திரம் சுமார் 50 கிலோ வரையிலும் தேன் இருக்கும். நாலாவது, அஞ்சாவது வகைதான் நாம வீட்டுல வளர்க்குற தேனீக்கள். ஒண்ணு, இண்டியன் செனரான்னு சொல்லப்படுற இந்திய வளர்ப்புத் தேனீ.

நான் மட்டுமில்ல... பெரும்பாலானவங்க வீட்ல வளர்க்குறது இதைத்தான். இரண்டாம் வகை இத்தாலியத் தேனீ. இதையும் நான் ரெண்டு பெட்டியில வளர்க்கறேன். இந்திய வளர்ப்புத் தேனீக்கும், இத்தாலிய தேனீக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இந்திய தேனீ ஒரு பெட்டிக்கு ஒரு வருஷத்துக்கு ரெண்டுல இருந்து மூன்று கிலோ தேனைத்தான் கொடுக்கும். ஆனா, இத்தாலிய தேனீ ஒரே பெட்டியில இருந்து வருடத்துக்கு முப்பது கிலோ தேன் கொடுக்கும். இது கொஞ்சம் சைஸில் பெருசுங்கறதால பெரிய பெட்டிகள் வேணும்!’’ என்கிற சுவாமிநாதன், தற்போது தேனீ வளர்ப்புக்கான தளவாடங்கள் கிடைப்பது மிக அரிதாகிவிட்டதாக வருந்துகிறார்.

‘‘தேன் பெட்டிகள் தமிழ்நாட்டுல நாகர்கோவில் மார்த்தாண்டத்தில்தான் கிடைக்குது. உள்ள இருக்கிற பிளாஸ்டிக் தட்டுகளுக்காக வெளிநாடுகளைத்தான் நம்பியிருக்க வேண்டிய சூழல். நம்ம ஊர்ல தேனீ வளர்ப்புத் தொழில் கொஞ்சம் கொஞ்சமா அருகிட்டே வருது. அதனாலதான் பாருங்க... மருத்துவ குணம் உள்ள சுத்தமான தேனுக்கு பதில் ஆரோக்கியமில்லாத போலி அயிட்டங்கள்தான் மார்க்கெட்ல விக்குது. தேனீ வளர்ப்பால நமக்கு தேன் கிடைக்குது.

அது நல்ல தொழில். ஆனா, அது மட்டுமே இதுல ஸ்பெஷல் இல்ல. இயற்கையோட சுழற்சி சரியா நடக்க, பூக்களுக்குள்ள மகரந்தச் சேர்க்கை நடக்குறது அவசியம். அதுக்கு தேனீ உதவி செய்யுது. இப்பல்லாம், மாந்தோப்பு, தென்னந்தோப்பு வச்சிருக்குறவங்ககிட்ட ‘மகசூல் பெருக தேனீ வளருங்க’ன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. இதனால அடுத்த கட்டத்துக்கு தேனீ வளர்ப்பு நகரும்னு நம்புறேன்!’’ என்கிறார் சுவாமிநாதன் பாஸிட்டிவ் எனர்ஜியோடு!

- டி.ரஞ்சித்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்