மனக்குறை நீக்கும் மகான்கள்



அமானுஷ்ய ஆன்மிகத் தொடர்
புதிய பகுதி

‘தமசோ மா ஜோதிர் கமய:’
இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச்
செல்வாயாக! - பிருஹத் ஆரண்யக உபநிஷதம்

கடவுள் சூரியன் போன்றவர். அவரது வலிமையான ஒளியை வாங்கி, அதை மென்மையாக மாற்றி, குளிர் ஒளியாய் தரும் நிலவைப் போன்றவர்கள் மகான்கள். இவர்கள் கடவுள் என்கிற பேரொளியை அச்சமில்லாமல் அணுக... நம் கைகளைப் பற்றி அழைத்துச் செல்கிறார்கள். மகான்களின் அன்பு நம் அத்தனை மனக்குறைகளையும் நீக்கும். அவர்களின் கருணை, பிரச்னைகளைத் துரத்தி நிம்மதி தரும். இத்தொடரின் வழியே நம் தேசத்தின் உன்னதமான மகான்களை தரிசிக்கப் போகிறோம். வாருங்கள், ஒளியை நோக்கி...

பாம்பன் ஸ்ரீமத்குமரகுருதாச சுவாமிகள் அது பிரம்ம முகூர்த்த வேளை. பெயரறியா பறவைகள் சிறகடித்து குரலெழுப்பி ஆரவாரம் செய்கின்றன. காற்றில் பூவாசம். இதமான ஒரு குளிர் செல்லமாய்த் தழுவிச் செல்கையில் தாய் தலை கோதும் ஆனந்தம். சென்னையின் திருவான்மியூரில் இருக்கும் கலாக்ஷேத்ரா பகுதியில் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி அமைந்துள்ள வளாகத்தினுள் நுழைகிறோம். மரங்களும் மந்திர அதிர்வுகளும் நிறைந்த அந்தப் பரந்த வளாகத்தை ஓம் எனும் ஒலி இன்னும் தெய்வீகமாக்கிக் கொண்டிருக்கிறது. காற்றில் கலந்து வந்து நாசி தொடும் ஊதுபத்தி வாசனையைத் தொடர்ந்து நடந்து ஜீவ
சமாதி மண்டபத்தை அடைகிறோம். அந்த பூபாள ஏகாந்தத்தில், ஆகிருதியான அந்த திருமுன் சம்மணமிட்டு அமர்கிறோம்.

மெல்ல இமை கோர்த்துக் கொள்கிறோம். கருவறையில் கம்பீரமாய் காவி அணிந்து அமர்ந்திருக்கும் துறவுச் சூரியனின் திருமுகத்தை மனசு புள்ளிப் புள்ளியாய் வரிக்கத் தொடங்குகிறது.
பாம்பன் சுவாமிகள்... இல்லை... இல்லை... பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்!
யார் இவர்?  சென்னைக்கு ஏன் வந்தார்? இவர் எப்படி சுவாமியானார்?
நாம் எதற்கு இவர் முன்னால் இப்படி அமர்ந்திருக்கிறோம்?

அத்தனை பக்தர்களும் நெகிழ்ச்சியோடு இங்கு மண்டியிட்டு ஏன் ஆனந்தக் கண்ணீர் உதிர்க்கிறார்கள்?
- நீர்க்குமிழ்கள் போல பல கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாய் மனவெளியில் எழத் தொடங்குகின்றன.
‘அவன் அருள் இல்லாமல் அவனை அறிவது நடக்கின்ற காரியமா?’ என கை கூப்புகிறது மனது.

‘நீங்கள் யார்? எதன் பொருட்டு இந்த பூமிக்கு வந்தீர்கள்? உங்கள் வாழ்க்கை எங்களுக்கு எதை போதிக்கிறது. ஒன்றுமே தெரியாத மனிதராய் பிறவி வேதனையில் உழலும் எங்களுக்கு உங்கள் திருமுகமே ஆறுதல் தருகிறதே... உங்கள் சரிதம் எங்களுக்கு எத்தனை ஆனந்தம் தரும்’ என்ற நினைப்பு எழ... தீர்க்கமான அந்த ஆதவனின் முகம் நம்முள் இன்னும் பிரகாசமாகிறது.
பாம்பன் சுவாமிகளின் திவ்ய வாழ்க்கை நமக்குள் படமாய் விரிகிறது.

மொழியால், உணவால், பழக்க வழக்கங்களால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை விதம்விதமான மக்கள் வாழ்ந்து வந்தாலும், அவர்கள் அத்தனை பேரையும் இணைக்கும் கண்ணுக்குத் தெரியாத அதிசய இழையாக ஆன்மிகம் இருக்கிறது. இந்தியாவின் ஆன்மா ஆன்மிகம்தான். அந்த ஆன்மிகத்திற்கு ஒரு சேதமும் வராத வகையில், அதன் உயிர்ச்சக்தி இந்த பூமியின் ஒவ்வொரு துகளிலும் உறையும் விதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கரும்பைக் கணுக் கணுவாக வெட்டிப் பயிரிடுவதைப் போல இந்த ஆன்மிக உயிர்ச் சக்தியை மாமுனிவர்கள் பல்வேறு பகுதிகளில் நிறுவி இருக்கிறார்கள். திருக்கோயில்களாக - சக்தி கேந்திரங்களாக அமைத்திருக்கிறார்கள்.

காசி நகரத்தில் கங்கையில் நீராடி விஸ்வநாதரை தரிசிக்கும் சாமானியனின் புனித யாத்திரை, ராமேஸ்வரத்தில் கடலாடி, ராமநாத சுவாமியை தரிசித்த பின்னரே நிறைவடைகிறது. யாத்திரைகளின் மூலமாக மக்களை நாட்டின் திக்கெட்டிலும் நகர்த்தி இந்த ஆன்மிக இழை அறுபடாதவாறு காலந்தோறும் பார்த்துக் கொண்டார்கள். இதில் மகான்களின் பங்கு மகத்தானது.

கேரளத்தின் காலடி க்ஷேத்திரத்தில் பிறந்த சங்கரர், நாடு நெடுக பாத யாத்திரை மேற்கொண்டார். சக்தி பீடங்களை நிறுவினார். பிறகு இமயமலை நோக்கி நகர்ந்தார். கல்கத்தாவில் பிறந்த நரேந்திரன், தட்சிணேஸ்வரத்தில், கங்கை நதி தீரத்தில், ராமகிருஷ்ண பரமஹம்சரால் விவேகானந்தர் ஆனார். அவரை அடுத்த கட்டம் நகர்த்தி அமெரிக்கா அனுப்பியது, நமது கன்னியாகுமரி கடல் நடுவே இருக்கும் அந்தப் பாறைதான். அதில் செய்த தியானம்தான்!

இப்படி ஆன்மிக இழை, வடக்கும் தெற்கும் கிழக்கும் மேற்குமாய் பின்னிப் பிணைந்துள்ளதால்தான் இந்தியாவை கர்மபூமி எனக் கொண்டாடுகிறார்கள். இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு உயிரின் நிறைவான லட்சியம் கடவுளை அடைவதுதான். ஒவ்வொரு உயிரின் நகர்வும் முக்தியை நோக்கித்தான் இருக்கும். அதனால்தான் மிக உயர்ந்த அவதார புருஷர்கள் எல்லாம் இந்தியாவில் விரும்பிப் பிறந்திருக்கிறார்கள். அதிலும் இந்தியாவின் தென்முனையான ராமேஸ்வரம் மிக உயர்ந்த மண். முக்தித் தலம். தேசம் நெடுக உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ராமேஸ்வரமும் ஒன்று.

தர்மத்தைக் காக்கும்பொருட்டு ராவணனை வென்ற ராமன், தன் பாவங்களைப் போக்கிக்கொள்ள சீதையின் கரத்தினால் சிவலிங்கம் அமைத்து வழிபட்ட தலம் இது. ராமன் வழிபட்டதாலேயே ராமநாத சுவாமியாய் இங்கே ஈசன் அருள்கிறார். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்தத் தலத்தில் ஒரு தெய்வீக ஆன்மா அவதரிக்க ஆவல் கொண்டது. அந்த ஆன்மா, முன்ஜென்மத்தில் முருகவேளை முழு முதற் கடவுளாகக் கொண்டு வாழ்ந்தது. திருப்புகழ், திருமுறை எல்லாம் நாள் தவறாது ஓதி, குமரக் கடவுளுக்கு ப்ரியமானவனாய் வாழ்ந்தது. ஒளி உடலோடு முருகனின் அருகே வசித்த அது, மீண்டும் சில பணிகளுக்காக பிறவி எடுக்க விரும்பியது. அதற்கான ஒரு அமிர்தயோகப் பொழுதுக்காகத் தவமிருந்தது.

சரி. எதற்காக அந்த அவதாரம்? ஒரே ஒரு மலர் தன் இதழ் பிரிப்பதற்குக்கூட காரணம் இருக்கிறது. அதனால் ஆக வேண்டிய காரியம் இருக்கிறது. அப்படி ஒரு தேவை அந்த காலகட்டத்தில் தமிழ் மண்ணில் இருந்தது. முருகப் பெருமான் குறித்து முன்னுக்கு பின் முரணாக ஏராளமான கட்டுக்கதைகள் இந்த மண்ணில் நிரம்ப உலாவின. கந்தனின் உன்னதம் முழுமையாய் உலகத்திற்கு சொல்லவேண்டிய அவசியம் இருந்தது. முழுமையாக என்பதைத் தாண்டி, உண்மையானதாகவும் சொல்ல வேண்டிய அவசியம் இருந்தது.

அருணகிரிநாதரின் பாதையில் பயணித்து, முருகப்பெருமானின் உன்னதத்தையும் கௌமாரம் என்கிற முருக வழிபாட்டின் சிறப்பையும் அதன் சித்தாந்தத்தையும் மிகச் சரியாக சொல்ல வேண்டிய அவசியம் இருந்தது. மனம் போன போக்கில் மக்கள் செய்யும் தவறான வழிபாட்டு முறைகளை சீர் செய்து, அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் வழிகாட்ட வேண்டுமென அந்த ஜீவன் உணர்ந்திருந்தது.

எங்கே பிறக்க வேண்டும் என முடிவு செய்தாயிற்று. புனிதமான அந்த ஜீவனைத் தாங்க வேண்டிய மணிவயிறு யாருடையது. யார் அந்தப் புண்ணியவதி? வேலவன் பூமியைக் கூர்ந்து பார்த்தான்.
ராமேஸ்வரத்திற்கு அருகே இருக்கிறது பாம்பன். ராமேஸ்வரம் என்கிற புனிதத் தலத்துக்கு உரிய 64 தீர்த்தங்களில் ஒன்றான கபித்தீர்த்தம் இங்குதான் இருக்கிறது. ராம காரியத்திற்காக அவதரித்த அனுமன் அமைத்த தீர்த்தம் இது. இங்கே ஒரு சிவாலயம்.

அந்தக் கோயிலில் அருளும் ஈசன் மீது தணியாத காதல் கொண்டு வாழ்ந்து வந்தார் சாத்தப்ப பிள்ளை. பிழைப்புக்கு நெல் வியாபாரம்... சொத்தாக சின்னஞ்சிறு தென்னந்தோப்பு... தன் சொந்த வேலை போக மிச்ச நேரமெல்லாம் அவருக்கு ஈஸ்வர சேவைதான். கோயிலை சுத்தம் செய்வார். நந்தவனச் செடிகளுக்குத் நீரூற்றுவார். பூப்பறித்து வந்து மாலை தொடுப்பார். வில்வ இலை கொய்து வந்து அரனுக்கு அணிவித்து அழகு பார்ப்பார்.

கணவனுக்கு ஏற்ற மனைவியாக இருந்தாள், செங்கமலத்தம்மாள். இறைத்தொண்டில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கரைந்தனர். சுவாசம் போலவே இயல்பான கடவுள் சிந்தனை மிகுந்த செங்கமலத்தம்மாளின் மணிவயிற்றில் பிறந்து, இத்தம்பதியரை பெருமைப்படுத்த எண்ணம் கொண்டது அந்த ஜீவன். அது அப்படி யோசித்த தருணத்தில் கந்தனும் கண்ணசைவில் அனுமதி தர, வேலனின் பாதம் பணிந்து நகர்ந்த அந்த ஜீவன் செங்கமலத்தம்மாளின் மணிவயிற்றில் வந்தமர்ந்தது.

அன்று செங்கமலத்தம்மாள் ஆழ்ந்து உறங்கினாள். துறவிகள் தலை தொட்டு ஆசீர்வதிப்பதாய் அதிகாலையில் கனவு கண்டாள். அதிகாலை கனவு பலிக்கும் அல்லவா? அந்த ஆசி சொல்லும் செய்தி என்ன என்பதை செங்கமலத்தம்மாளின் மலர்ந்த முகம் சொன்னது. தாம் கர்ப்பம் தரித்திருப்பதை உணர்ந்து, செய்தியை கணவனுக்கு கன்னம் சிவக்கச் சொன்னாள். அப்பாவாகப் போகிறோம் என்கிற ஆனந்தம் சாத்தப்பப்பிள்ளைக்குள் கொப்பளித்தாலும் அடக்கமாக, ‘‘சிவப்பிரசாதம்... சிவப்பிரசாதம்...’’ என சிலிர்த்து தலை மேல் கை கூப்பினார். ‘நாதன்தாள் வாழ்க’ என்று பாடினார். செங்கமலத்தம்மாளும் சேர்ந்து கொண்டாள்.

சாத்தப்ப பிள்ளை மனைவியை கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டார். ‘‘தண்ணீர்க் குடம் தூக்காதே... அதிர்ந்து நடக்காதே... மெல்ல!’’ என செல்லமாகக் கடிந்து கொண்டார். ஒரு பெண்ணை புருஷன் கைமேல் தாங்குவதை விட அவளுக்கு வேறென்ன பெரிதாய் வேண்டியிருக்கிறது. கணவனின் அன்பு அவளை மேலும் கனியச் செய்தது. வயிற்றில் குழந்தை போஷாக்காய் வளர்ந்தது. செங்கமலத்தம்மாள் முகம் முழுநிலவாய் மின்னியது. சும்மாவா..? அவள் வயிற்றில் ஞானச் சூரியன் அல்லவா
இருக்கிறான்!

(ஒளி பரவும்...)

மனம் போன போக்கில்
மக்கள் செய்யும் தவறான
வழிபாட்டு முறைகளை
சீர் செய்து, அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் வழிகாட்ட வேண்டுமென
அந்த ஜீவன் உணர்ந்திருந்தது

எஸ்.ஆர்.செந்தில்குமார்

படங்கள்: புதூர் சரவணன்