பொய்‘‘சார்... என்கிட்ட தப்பா நடந்துக்கிட்ட ஆளு யாரா இருந்தாலும் நீங்க ஆக்ஷன் எடுப்பீங்களா?’’ - எம்.டி. பஞ்சாபகேசனிடம் விம்மலோடு கேட்டாள் நிம்மி.
‘‘கண்டிப்பா! யார் அந்த ராஸ்கல்?’’
‘‘அது உங்க மகன் மணீஷ்தான்!’’
அதிர்ந்தார் பஞ்சாபகேசன்.

‘‘பார்த்தீங்களா சார்... உங்களால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு எனக்குத் தெரியும்...’’ என்றபடி எழுந்த நிம்மியை அவசரமாகக் கையமர்த்தினார் பஞ்சாபகேசன்.
‘‘அவனுக்கு பிளட் கேன்சர்மா. இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பான். அதனால இப்படி வேணும்னே சில பேரை கஷ்டப்படுத்தி, கோவப்படுத்தி விளையாடுறான். நானும் வேற வழியில்லாம விட்டுட்டேன்’’ - சொல்லிவிட்டுக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் பஞ்சாபகேசன். ‘‘ஸாரி சார். விஷயம் தெரியாம நான் பாட்டுக்கு...’’
‘‘இட்ஸ் ஓகே!’’

அவள் அகன்றதும், செல்போனை எடுத்து மணீஷ் நம்பருக்கு அடித்தார் பஞ்சாபகேசன்.
‘‘ராஸ்கல்... உன்னால என் மானம், மரியாதை எல்லாம் காத்துல பறக்குது. அயோக்கியப் பயலே... இனிமேலும் ஒவ்வொரு பொண்ணுகிட்டயும் உன்னைப் பத்தி விதவிதமா பொய் சொல்லி சமாளிக்க என்னால முடியாது. நீ அமெரிக்காவுல இருக்கற உன் சித்தப்பா வீட்டுக்குக் கிளம்பு. நாளைக்கு காலையில ஃப்ளைட்’’ என்றார் கோபத்தோடு!              

மலர்மதி