நம்ப முடியலையே!58 வாரங்களாக மனதைத் தென்றலாய் வருடிச் சென்ற ‘சாயி’ புனிதத் தொடர் நிறைவுற்றபோது, மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத கனம் உண்டானதைத் தடுக்க முடியவில்லை!
- கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.

‘மனக்குறை நீக்கும் மகான்கள்’ தொடரில், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் அற்புதங்களை அறிய அடுத்த இதழை பரவசத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
- பி.ஆர்.மயிலப்பன், ஈரோடு.

‘கோச்சடையான்’ பரபரப்புக்கிடையே, சூப்பர் ஸ்டாரின் ‘லிங்கா’ படத்தைப் பற்றி விலாவாரியாக வெளியிட்டு அசத்திப்புட்டீங்க. ‘சந்திரமுகி’ வேட்டைய ராஜா கெட்டப்பில் கலக்கப் போகும் ‘லிங்கா’ ரஜினியை இப்பவே தரிசிக்க வைத்ததற்கு நன்றி!
- ஜெ.சூரஜ்குமார், புதுச்சேரி.

தடகள வீராங்கனை சாந்தி, பாலின சோதனை - சர்ச்சை என தடைகளை எல்லாம் உடைத்து, இன்று தடகளப் பயிற்சியாளராகியிருப்பது மகிழ்ச்சி.  தடகள தங்க மங்கைகளை அவர் தடையின்றி உருவாக்கட்டும்!
- டி.கே.மாலதி கண்ணன், விழுப்புரம்.

‘இது காமெடிதான், சீரியஸா தலைப்பைப் போட்டுடாதீங்க’ன்னு சந்தானம் அவ்வளவு தூரம் சொல்லியும் கேக்காமல்,
ஆர்யாவோட சேர்ந்து நீங்களும் அவருக்கு எதிரா சதி பண்ணிட்டீங்களே பாஸ்!
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.

பிந்து மாதவிக்கு காதல் தோல்வியா? நம்ப முடியலையே! இப்போதே கட்டழகியாக ஜொலிக்கும் பிந்துவை கல்லூரிக் காலத்தில் நிராகரித்தது யார்? காட்டுங்கள்... கூலிப்படையை விட்டு அடிப்போம்!
- எச்.மணியரசன், தஞ்சாவூர்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை வெடி வைத்துக் கொண்டாடுவதோடு நிற்காமல், இனி தமிழக அரசு செய்ய வேண்டியவற்றையும் பட்டியலிட்டது படு ஜோர்!
- இரா.வளையாபதி, கரூர்.

கல்லூரியில் ‘கோர்’ கோர்ஸ்கள் தவிர வேறெந்த படிப்பைத் தேர்வு செய்தாலும் அது ஒருவழிப் பாதையாக மட்டுமே இருக்கும் என்று பேராசிரியர் நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளது 100 சதம் உண்மை!
- அ.குணசேகரன், புவனகிரி.

லட்சுமிராய் கன்னடப் படங்களுக்குப் போயிட்டார்னு செய்தி போட்டு எங்களை தாடி வளக்க வச்சிடாதீங்க. அந்த கன்ட்ரிவுட்
இல்லைன்னா, நம்ம
கோலிவுட் வெறும் காலிவுட்!
- வி.கே.சார்லஸ், வந்தவாசி.

கேரள-தமிழக எல்லையில் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கட்டிய கோயில் பற்றிய கட்டுரை, வரிக்கு வரி ஆச்சரியம். எல்லை என்றாலே பிரச்னைகள், பரபரப்புக்கு பஞ்சம் இல்லைதான்!
- ஜெ.கண்ணன், தூத்துக்குடி.