நான் சின்ன ஜெமினி கணேசனா?



படபடக்கும் விமல்

சைலன்ட் சக்சஸ் ஹீரோ. இது விமலின் இன்னொரு பெயர். ‘கேடி பில்லா
கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’ என வெற்றி ரவுண்டு வரும் விமலின் அடுத்த படம், ‘மஞ்சப்பை’. புது கமிட்மென்ட்டுக்காக கதை கேட்டு முடித்து, சலனமற்று இருந்த வேளையில் விமலின் கவனம் கலைத்துப் பேசினோம்...

‘‘நான் நடிச்ச படத்திலேயே பிடிச்ச படம் ‘மஞ்சப்பை’தான். இந்தக் கதையைக் கேட்கும்போதே அழுதேன். நடிக்கும்போதும் அழுதேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி படத்தைப் பார்த்தப்பவும் கலங்கிட்டேன். அப்படியொரு அழுத்தமான கதை. நான் சொல்றத வச்சி, ‘என்னடா இது அழுக்காச்சி படமா இருக்குமோ’ன்னு நினைச்சுடாதீங்க. காதல், காமெடின்னு மற்ற விஷயங்களையும் திரைக்கதையில் வச்சி ரசிச்சு ரசிச்சு இழைச்சிருக்குறார் அறிமுக இயக்குனர் ராகவன். தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவுதான் கதை. அமெரிக்கா போறதுக்கு மூணு மாசத்துக்கு முன்னாடி சென்னைக்கு வர்ற கிராமத்து இளைஞன் கேரக்டர்தான் எனக்கு.

கிராமத்து தாத்தா ராஜ்கிரணையும் சென்னைக்குக் கூட்டிட்டு வர்றேன். கிராமத்து காத்த சுவாசிச்ச அவருக்கு, அபார்ட்மென்ட் வாழ்க்கையும் பரபர சிட்டியும் பிடிக்கலை. இதற்கிடையில கண் டாக்டருக்குப் படிக்கும் லட்சுமி மேனனுக்கும் எனக்கும் காதல் வருது. காதலா? தாத்தாவா?ன்னு சூழ்நிலைகள் வில்லனாக, முடிவு என்ன என்பதே க்ளைமாக்ஸ். ‘பூவே பூச்சூடவா’ படத்தில் பாட்டிக்கும் பேத்திக்குமான உறவு மாதிரி, இந்தப் படத்தில் தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவு மனசைத் தொடும். காதல், காமெடி காட்சிகள் மனதை மகிழ வைக்கும்.’’
‘‘ராஜ்கிரணுடன் நடித்த அனுபவம்?’’

‘‘ஹப்பா... ஒரு கட்டத்தில் ரஜினி சாரை விட அதிக சம்பளம் வாங்கின மனுஷன். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர்னு சினிமாவில் சர்வமும் தெரியும். அவரோட யதார்த்த நடிப்பு எனக்கு எப்பவுமே ஆச்சரியம். முதல் நாள் ஷூட்டிங்ல ‘சார்’னு பேசத் தொடங்கி, அடுத்தடுத்த நாட்களில் தாத்தான்னு கூப்பிட ஆரம்பிச்சு, இப்போ நிஜத்திலும் அவரை அப்படித்தான் அழைக்கிறேன். ஹீரோ - ஹீரோயின் கெமிஸ்ட்ரியை விட, தாத்தா - பேரன் கெமிஸ்ட்ரிதான் படத்தில் பிரதானமா இருக்கும்.’’
‘‘லட்சுமி மேனன் உங்களுக்காக கிளாமரா நடிச்சிருக்காங்க போல?’’

‘‘அய்யய்யோ... எனக்காகவெல்லாம் நடிக்கலைங்க. ஒரே ஒரு பாட்டுக்கு தாவணியில் ஆடியிருக்காங்க. அவ்வளவுதான். இப்ப கொஞ்சம் உடம்பை குறைச்சிருக்கறதால உங்களுக்கு கிளாமரா தெரியுது போல. படத்தில் ரசனைக்குறைவா ஒரு சீன் கூட இருக்காது. இப்போ காமெடி படங்கள்தான் ஜெயிக்குது. இருந்தாலும் நிறைய இரட்டை அர்த்த வசனங்கள் வருது. ‘மஞ்சைப்பை’யில் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காமெடியை ரசிக்க முடியும். குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக் கூடிய படம் இது. தாத்தா இருக்கறவங்களுக்கு பாசம் அதிகமாகும்... இல்லாதவங்களுக்கு ஏக்கம் வரும். இதில் இன்றைய இளைஞர்களுக்கான லவ் டிராக்கும் இருக்கு. ‘பசங்க’ படத்துல ‘இங்கிட்டு மீனாட்சி அங்கிட்டு...’ என்பது மாதிரி இதில் ‘ஹோய்...’ என்கிற நக்கல் வார்த்தை நல்லா ரீச் ஆகும்!’’
‘‘நீங்க ஒரே மாதிரி நடிக்கிறதா தோணுதே?’’

‘‘நான் சினிமாவுக்கு புதுசாதான் வந்திருக்கேன். கதையை எப்படித் தேர்ந்தெடுக்கறதுன்னு இப்போதான் பிடிபடுது. கெட்டப் சேஞ்ச், ஆக்ஷன் அவதாரம்னு இப்போதைக்கு அகலக் கால் வைக்க வேணாம்னு நினைக்கிறேன். காதல், சென்டிமென்ட், காமெடி, ஆக்ஷன், திகில், த்ரில்லர்னு எதுவா இருந்தாலும், ஒரு நல்ல கதைக்குள் இருக்கற மாதிரியான படங்கள் மட்டுமே என்னோட சாய்ஸ். நாலு பேர் சொல்றதுக்காக தப்பான கதையில் நடிச்சிடக் கூடாதுன்னு தெளிவு வந்திருக்கு. ரசிகனா இருந்தப்பவே இந்தப் படம் ஓடும், இது ஓடாதுன்னு சரியா சொல்லிடுவேன். இந்த அனுபவம் எனக்கு இப்போ கை கொடுக்குது.

நான் ‘நோ’ சொல்லி, வேற ஹீரோ நடிச்சு, ஓடாத படங்கள் நிறைய இருக்கு. ‘ஆஹா... மிஸ் பண்ணிட்டோமே’ன்னு எதுவுமே வருத்தப்பட வச்சதில்லை. இதையும் தாண்டி என்னோட சில படங்கள் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். எல்லா நேரத்திலும் நம்ம கணிப்பு கை கொடுக்க நாம கடவுளும் இல்லையே!’’
‘‘சின்ன ஜெமினி கணேசன் என வினு சக்கரவர்த்தி உங்களைச் சொன்னாரே..?’’

‘‘எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்தில் அவங்களுக்கு நிகராவே, சைலன்ட்டா ஜெயிச்சிக்கிட்டிருந்தவர் ஜெமினி கணேசன். அந்த அர்த்தத்தில் சொல்லி இருப்பார்னு நினைக்கிறேன். மற்றபடி, நான் காதல் மன்னன் இல்லை. அவரோட என்னை ஒப்பிட்டுப் பேசுறது ஒரு பக்கம் கூச்சமா இருந்தா லும் இன்னொரு பக்கம் சந்தோஷமாவும் இருக்கு. சினிமாவில் எனக்குப் போட்டியா யாரையும் நினைக்கல. விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், விதார்த் எல்லாருமே என் நண்பர்கள்தான். ம்... இந்த இடத்தில் இன்னொண்ணு சொல்லிக்கிறேன். விதார்த், விஜய்சேதுபதியோட சேர்ந்து நான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப் போறதா வர்ற செய்தியிலும் உண்மை இல்லை.’’

‘‘பார்ட்டிக்கெல்லாம் போறீங்களா?’’‘‘ஹய்யோ... அந்த விஷயத்தில் இப்பவும் நான் மஞ்சப்பைதாங்க. படத்தோட சக்சஸ் பார்ட்டின்னு என்னைக் கூப்பிடுவாங்க. அங்கே போனா எப்படி நடந்துக்கணும்னு கூட எனக்குத் தெரியாது. தெரியாத விஷயத்தில் ஏன் ஆர்வம் காட்டணும்னுதான் அந்தப் பக்கம் அவ்வளவா போறதில்லை. ‘மஞ்சப்பை’ ரிலீஸ் ஆனதும், ‘நீயெல்லாம் நல்லா வருவடா’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ன்னு வரிசையா படங்கள் இருக்கு. நிறைய கதைகள் கேட்டுக்கிட்டும் இருக்கேன். சினிமா தவிர, அன்பான காதல் மனைவி, ஆரிக் விமல், ஆகர் விமல்னு அழகான ரெண்டு மகன்களோடு என் குடும்பம் காத்திருக்கு. அவங்களுக்கும் நேரம் ஒதுக்கணும். மற்ற விஷயங்களில் சத்தியமா ஆர்வம்
இல்லீங்க!’’

- அமலன்