செல்போனிலேயே ஓட்டு போடலாம்!



எதிர்கால எலெக்ஷன் டெக்னாலஜி

ரூபாய் 3500 கோடி...நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் செலவிட்ட தொகை இது. தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாகனச் செலவுகளை தனியாக மாநில அரசுகள் சுமக்கின்றன. அதையெல்லாம் சேர்த்தால் இந்த செலவு, பத்தாயிரம் கோடி ரூபாயைத் தாண்டும்.

இந்தப் பணத்தில், தென்னக நதிகளை இணைத்து தமிழகத்தை வளப்படுத்தி இருக்கலாம். செலவு மட்டுமில்லை... கிட்டத்தட்ட ஆறு வாரங்கள்; ஒன்பது கட்டங்களாக நடந்தது தேர்தல். பல அரசு அலுவலர்களையும் ஆசிரியர்களையும் தங்கள் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு தேர்தல் வேலை பார்க்க வைத்தனர். பல தேர்வுகள் முன்கூட்டியே நடந்தன. எத்தனையோ பேப்பர்களை அச்சிட வேண்டியிருந்தது. எவ்வளவோ அலுவகங்கள் மற்றும் பள்ளி களை ஆக்கிரமிக்க வேண்டியிருந்தது. தேர்தல் முடிந்தும் ஓட்டு இயந்திரங்களை பாதுகாக்கும் சுமை.

இந்த எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக பலரும் சொல்வது... ஆன்லைன் தேர்தல்!‘தேசத்தின் எதிர்காலமே உங்கள் விரலில்தான் இருக்கிறது’ என்று சொன்னாலும், 30 சதவீத மக்கள் ஓட்டு போட வருவதில்லை. க்யூவில் நிற்க வெறுப்பு; பட்டியலில் பெயர் பார்த்து, அடையாள அட்டை காட்டி, விரலில் மை வைத்து, உள்ளே போய் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்குள் பல மணி நேரம் ஆகி விடுகிறது. ‘‘வீட்டில் இருந்தபடியே கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனில் ஒரு நிமிடத்துக்குள் இதைச் செய்யலாம் என்றால், இந்தியாவில் நூறு சதவீத வாக்குப்பதிவை சாத்தியமாக்கலாம்’’ என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆன்லைன் ஓட்டு என்பது இந்தியாவுக்குப் புதிதில்லை. கடந்த 2011ம் ஆண்டு குஜராத் உள்ளாட்சித் தேர்தல்களில் இதைப் பரிசோதனை செய்து பார்த்தார்கள். காந்திநகர் மாநகராட்சித் தேர்தலில் ஆன்லைன் ஓட்டு அனுமதிக்கப்பட்டது. 670 பேர் இதற்குப் பதிவு செய்து வாக்களித்தார்கள். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும். அதன்பின் தேர்தல் அதிகாரிகள் வீட்டுக்கு வந்து, விவரங்களை சரி பார்ப்பார்கள். (வழக்கமான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சோதனை போலத்தான் இது!) அதன்பின் ஒரு பயனாளர் பெயரும் பாஸ்வேர்டும் வழங்கப்படும். இது இ-மெயிலிலும், செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வடிவிலும் வரும். இதை வைத்து வாக்காளர் தனது கணக்கை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தேர்தல் நாளன்று ஓட்டுப் போட இந்த இணையதளத்துக்குச் சென்றதும், உங்கள் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்ஸில் ஒரு பாஸ்வேர்டு வரும். இது இரண்டு நிமிடங்களுக்குள் செயலிழந்துவிடும். அதற்குள் நீங்கள் இதைப் பயன்படுத்தினால், ஆன்லைனில் வாக்குச்சீட்டு உங்கள் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் விரியும். அதில் விரும்பும் வேட்பாளருக்கு நீங்கள் ‘க்ளிக்’ செய்து வாக்களிக்கலாம். வாக்களித்ததும் ஒரு ரசீது டிஜிட்டலில் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும். 2 நிமிடங்களில் உங்களால் வாக்களிக்க முடியவில்லை என்றால், புது பாஸ்வேர்டு கேட்கலாம். இப்படி அதிகபட்சம் மூன்று முறை தரப்படும். நான்காவது வாய்ப்பு கிடைக்காது.

ஒருவர் எந்தக் கம்ப்யூட்டரிலிருந்து தனது விவரங்களைப் பதிவு செய்கிறாரோ, அந்தக் கம்ப்யூட்டர் வாயிலாகவே ஓட்டு போட முடியும். அல்லது அரசே அமைத்திருக்கும் ‘இ-பூத்’தில் வாக்களிக்கலாம்.
தொழில்நுட்பரீதியாக இது வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் ஓட்டு குறித்த விவாதம் பரவலாகி விட்டது. தேர்தல் ஆணையத்தின் எதிர்காலத் திட்டத்தில் ஒன்றாக இதுவும் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்தால், இது சாத்தியமாகி விடும். வெறும் ஆயிரம் ஓட்டுகளில் பல தொகுதிகளின் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படும் சூழலில், ஆன்லைன் சிஸ்டம் அதிகம் பேரை வாக்களிக்க வைத்து முடிவையே மாற்றக்கூடும்.

இதற்கு முதல்முறையாக ஒரு சாஃப்ட்வேரையும் நெட்வொர்க்கையும் அமைக்கும் செலவு மட்டுமே இருக்கும். அதன்பின் அதை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் மூன்று விஷயங்களை மட்டும் உறுதி செய்ய வேண்டியிருக்கும். ஒன்று... இமெயில் அக்கவுன்ட்டை எல்லாம் திருடுவது போல, வாக்காளர்களின் ரகசிய விவரங்களை வேறு யாரும் திருடிப் பயன்படுத்தி விடக்கூடாது. இரண்டு... நாம் அளித்த வாக்கு உரியவருக்குப் போய்ச் சேர்ந்ததா என்பதை உறுதி செய்வதற்கு ஒரு ரசீது தர வேண்டும். மூன்று... ஒருவர் யாருக்கு வாக்களித்தார் என்பது ரகசியம். அந்த ரகசியம் வேறு யாருக்கும் தெரிந்துவிடாமல் தடுக்க வேண்டும்.

‘‘வங்கிகளில் இருப்பில் இருக்கும் பணத்தையே ஆன்லைனில் கொள்ளையடிக்கிறார்கள். அமெரிக்க ராணுவ ரகசியங்களே திருடப்படும் சாத்தியம் ஆன்லைனில் இருக்கிறது. டெக்னாலஜி திருட்டு உச்சம் பெற்றுள்ளது. இதை நம்பி எப்படி வாக்களிக்க விடுவது?’’ என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கேட்கிறார். இன்னொருபுறம் வாக்காளரின் பாதுகாப்பும் இருக்கிறது. ‘வீடு புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டி தனக்கு ஆன்லைன் ஓட்டு போடச் சொன்ன வேட்பாளர் கைது’ என்பது போன்ற செய்திகள் எதிர்காலத்தில் வரலாம்!

செல்போன் ஓட்டு!


கம்ப்யூட்டரின் தேவையின்றி, மொபைல் போனிலேயே வாக்களிக்க வசதியாக புனேவைச் சேர்ந்த அபினித் திவாரி என்ற சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஒரு மொ பைல் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார். மிக எளிமையானது இந்த ஆப்.உங்கள் மொபைல் போனிலேயே இது இருந்தாலும், உங்கள் கைரேகையை பதித்தே இதைத் திறக்க முடியும். பாஸ்வேர்டு போட்டு தேர்தல் ஆணைய இணையதளத்துக்குப் போனால், உங்களைப் பற்றிய விவரங்கள் இருக்கும். நீங்கள் வீடு மாறினால், புதிய தொகுதியின் வாக்காளராக ஆன்லைனிலேயே மாறிக் கொள்ள முடியும். தேர்தல் நாளில் வேட்பாளர்கள் பற்றிய எல்லா விவரங்களையும் நீங்கள் படிக்கலாம். அதன்பின் உங்கள் வாக்கை டிக் செய்யலாம்.

வெளிநாட்டு ஓட்டு!


மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கடந்த 2010ம் ஆண்டு ஒரு திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி வெளிநாட்டுவாழ் இந்தியர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம். கிட்டத்தட்ட ஒரு கோடி பேர், இந்தியக் குடியுரிமையோடு வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களில் சுமார் 60 லட்சம் பேர், வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள். ஆனால் இந்த சட்டத் திருத்தம் செய்தபிறகும் வெறும் 11,844 பேர் மட்டுமே வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகள், வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் நாட்டினர் அங்கேயே ஓட்டு போட வசதி செய்கின்றன. புதுச்சேரியில் இருக்கும் ஒரு பிரெஞ்சுக்காரர், அங்கிருக்கும் துணைத் தூதரகத்தில் ஓட்டு போடலாம். ஆனால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு இந்தியர், ஓட்டு போட இந்தியாவுக்கு வர வேண்டும். ஆன்லைன் ஓட்டு அமலானால், அயல்நாடுகளில் இருந்தபடியே இவர்கள் வாக்களிக்க முடியும்.

- அகஸ்டஸ்