ஜெயித்தால் எஸ்.எம்.எஸ்... தோற்றால் சாக்லெட்!



ஜோஸ்னா சின்னப்பா...‘ஸ்குவாஷ்’ என ஒரு விளையாட்டு இருப்பதை தமிழர்களுக்கு சுட்டிக் காட்டிய சென்னைப் பொண்ணு. மீண்டும் ‘ஸ்குவாஷ்’ உலகை தனது ‘ராக்கெட்’ வேகத்தில் கலங்கடித்து, நாம் அவர் அட்ரஸைத் தேடும்படி செய்துவிட்டார். உலகின் நம்பர் ஒன் வீராங்கனைகளைத் தோற்கடித்து கனடாவின் வின்னிபெக் ஓப்பனிலும், அமெரிக்காவின் ரிச்மண்ட் ஓப்பனிலும் வெற்றிப் பட்டம் வென்று வந்திருக்கும் ஜோஸ்னாவோடு ஒரு க்ளாஸ்-அப் சந்திப்பு...

‘‘ஒரு சின்ன பின்னடைவு வரும்போதுதான் ஜெயிக்கணும்னு வேகமும் வெறியும் அதிகம் வரும். அதுக்கப்புறம் வர்ற வெற்றியும் ருசியா இருக்கும். அப்படித்தான் இந்த வெற்றியை நான் பார்க்கறேன். எனக்கு முழங்கால்ல சின்னதா காயம்... எட்டு மாசம் ஸ்குவாஷ் பக்கமே போகல. மும்பைல சர்ஜரி செய்துகிட்டேன்.

 கால்கள் ஸ்டிராங்கா இருந்தாதான் ஸ்குவாஷ்ல ஜெயிக்க முடியும். நிறைய பயிற்சிகள் செய்து கால்களைப் பலப்படுத்தி களமிறங்க கொஞ்சம் டைம் ஆகிருச்சு. இந்த வெற்றிக்கு என்னோட உடற்பயிற்சியாளர்கள் அகமத் யூசுப், ராஜாமணி, ஸ்பான்சர் செய்த ட்டி.டி.பி.எஸ் நிறுவனம்... எல்லாருக்கும் தேங்க்ஸ். இனி, இந்த ஃபார்மை கன்டினியூ பண்ணணும்’’ என்கிற ஜோஸ்னா, வரப்போகும் காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சிகளில் படு பிஸி.

‘‘அப்பா, ஸ்குவாஷ் வீரர்... அவர் கூட ப்ராக்டீஸ் போய், எனக்கும் ஸ்குவாஷ் மேல ஈர்ப்பு வந்திருச்சு. ஒரு நாளைக்கு ஆறு மணி நேரமாவது பயிற்சி செய்வேன். நான்தான் பிரிட்டிஷ் ஓப்பன் ஜூனியர் பிரிவில் பட்டம் வாங்கின முதல் இந்தியப் பெண். தொடர்ந்து ஸ்குவாஷ் மேல காதல் இருந்ததாலதான் நல்லா விளையாட முடிஞ்சது. இந்த வருஷம் நிறைய போட்டிகள் இருக்கு. எல்லாத்திலும் சாதிக்கணும். இப்ப என்னோட நோக்கமெல்லாம் காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள்ல பதக்கம் வாங்கணும். அப்பறம், முதல் 15 ரேங்க்குக்குள்ள
வரணும்’’ என்கிறவரிடம் சில கேள்விகளை வைத்தோம்...

‘‘இந்தியாவில் ஸ்குவாஷ் வளர்ச்சி எப்படியிருக்கு?’’
“முன்னாடி இருந்ததை விட இப்ப ரொம்ப நல்லாயிருக்கு. நிறைய பேர் ஆர்வமா விளையாட வர்றாங்க. ரொம்ப வசதியானவங்க விளையாடுற விளை யாட்டு இதுங்கற நினைப்பு இப்ப மாறியிருக்கு. சென்னையில முந்நூறு குழந்தைகள் பயிற்சி எடுக்குறாங்க. மற்ற மாநிலங்களை விட சென்னை ரொம்ப பெஸ்ட். இங்க அரசும், ஸ்குவாஷ் அமைப்பும் பல்வேறு உதவிகளை வழங்குறாங்க. இது நல்ல வளர்ச்சி. அதே நேரத்தில் வெளிநாடுகளை ஒப்பிடும்போது, இது குறைவுதான். மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன்ல ஸ்குவாஷுக்காக அதிகம் செல
வழிக்கிறாங்க...’’

‘‘வெளிநாடுகள்ல படிக்க செல்லவே இன்றைய தலைமுறை ஸ்குவாஷ் விளையாட்டைத் தேர்ந்தெடுக்கிறாங்கன்னு சமீபத்தில் நீங்க சொன்னீங்களே..?’’
‘‘நான் அப்படி சொல்லலை. பத்திரிகைகள்ல தவறா வந்துருச்சு. ஸ்போர்ட்ஸ்னு வந்துட்டா படிப்பையும் விளையாட்டையும் சேர்த்தே பார்க்கணும்னு நினைக்கிறவள் நான். இன்றைய தலைமுறை ரெண்டுக்கும் சமமான முன்னுரிமை தரணும். அப்பதான் கேரியர் நல்லாயிருக்கும்.’’

‘‘போன வருஷம் அர்ஜுனா விருதையும் சொந்தமாக்கி இருக்கீங்க... வெற்றி, தோல்விகளை எப்படி எடுத்துக்கறீங்க?’’“போட்டிகள்ல கலந்துக்கும்போது யார்கிட்டயும் எதுவும் பேசமாட்டேன். ஜெயிச்சா அம்மாவுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் பண்ணுவேன். தோத்துட்டா, அமைதியா சாக்லெட் சாப்பிட ஆரம்பிச்சிருவேன். இது என்னோட பழக்கம். அப்பறமா உட்கார்ந்து, ‘எங்க தப்பு பண்ணினேன்’னு யோசிச்சு அடுத்த போட்டியில சரி செய்வேன். ஃபேஸ்புக் மாதிரி எந்த சோஷியல் நெட்வொர்க் வெப்சைட்லயும் நான் இல்ல. அதனால, எந்த கமென்ட்டும் போட மாட்டேன். எந்த விமர்சனங்களையும் பெரிசா எடுத்துக்கறதும் இல்ல.

எதிர்காலத்துல ஸ்குவாஷை எல்லா தரப்பு மக்கள்ட்டயும் கொண்டு செல்லணும்னு ஆசையிருக்கு. கிராமம், நகரம்னு எல்லா பகுதிக் குழந்தைகளும் ஸ்குவாஷ் விளையாடணும். என்னால ஸ்குவாஷ் வளர்ச்சிக்கு என்ன பண்ண முடியுமோ அதை நிறையவே செய்வேன்!’’ - உற்சாகம் பொங்க முடிக்கிறார் இந்த ‘சாக்லெட் பேபி’.

- பேராச்சி கண்ணன்
படங்கள்: புதூர் சரவணன்