ஜல்லிக்கட்டு தடைக்குவெளிநாட்டு சதி காரணம்?தனித் தொழுவம், சிறப்புத் தீவனம் என பார்த்துப் பார்த்து வளர்த்த ஒண்டிக்கருப்பு, ஜப்பான் கட்டை, சுருளி, டெல்லி மட்டம், கரிச்சான் எல்லாம் பத்தோடு பதினொன்றாக லாரியில் ஏற்றப்
படுகின்றன. கயிற்றுக்கு நடுவில் நிறுத்தி கோர்த்துக் கட்டும்போது அவமானத்தில் குன்றிப் போகின்றன அந்தக் காளைகள்.

உடலெங்கும் வீரத் தழும்புகளோடு நெஞ்சு நிமிர்த்தித் திரிந்த வீரர்கள் மனசொடிந்து நிற்கிறார்கள். பிள்ளையைப் போல மாடுகளை வளர்த்த மனிதர்கள் அம்மாடுகளை அடிமாட்டுச் சந்தையில் விற்றுவிட்டு கண்கலங்கி திரும்புகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை, தென் தமிழகத்தின் இயல்பைக் குலைத்து விட்டது. இந்தத் தடையின் பின்னணியில் பலமான வெளிநாட்டுக் கைகள் இருப்பதாக செய்திகள் கசிவதுதான் உச்சபட்ச அதிர்ச்சி.

‘‘ஜல்லிக்கட் டுக்கு எதிராகப் பேசும் எவருக்கும் அதன் தாத்பரியமும், பாரம்பரியமும் தெரியாது. பொலிகாளைகளை ஜல்லிக்கட்டுக்காக மட்டும் எவரும் வளர்ப்பதில்லை. வருடத்தில் நான்கைந்து ஜல்லிக்கட்டுகளில் காளை பங்கேற்கும். மற்றபடி அது இனவிருத்திக்காகவே பயன்படும். இக்காளைகளுக்குப் பிறக்கும் பசுக்கள் திடகாத்திரமாக இருக்கும். நிறைய பால் கறக்கும். ஜல்லிக்கட்டு காளைகள் மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடையவை’’ என ஆரம்பிக்கிறார் தமிழக வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு நல பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் பேராசிரியர் அம்பலத்தரசு.

‘‘ஜல்லிக்கட்டை தடை செய்தவுடன் காளைகளை அடிமாட்டுச் சந்தைக்கு கொண்டு போய் விட்டார்கள். பார்க்கும்போது ரத்தக்கண்ணீர் வருகிறது. 1 லட்சம், 2 லட்ச ரூபாய் விலை போகும் மாடுகளை வெட்டுக்காக 5 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். சாதாரணமாக ஜல்லிக்கட்டுக் காளை 400 முதல் 500 கிலோ எடையிருக்கும். மாட்டைப் பிடிப்பவன் 50 முதல் 60 கிலோ எடையிருப்பான். அவனிடம் எந்த ஆயுதமும் இருக்காது.

அவனால் மாட்டை என்ன கொடுமைப்படுத்த முடியும்? மாட்டைக் கடிக்கக் கூடாது. கொம்பைத் தொடக் கூடாது. வேறெந்த வகையிலும் தொந்தரவு தரக்கூடாது என்பதெல்லாம் ஜல்லிக்கட்டின் இயல்பான விதிகள். அதை மீறுபவர்களை ஊரில் பிடித்து கட்டி வைத்து விடுவோம். இந்த விளையாட்டைப் பற்றி தெரிந்தவர்களிடம் கருத்துக் கேட்டு, தகுந்த விதிமுறைகளை வகுத்து முறைப்படுத்த வேண்டுமே ஒழிய, காலங்காலமாக நடந்து வரும் ஒரு வீரக்கலையை முடக்கக்கூடாது. ஜல்லிக்கட்டை முடக்கியவர்கள், குதிரை ரேஸை முடக்கவில்லை. அது மேல்தட்டு மக்களின் விளையாட்டு.

தமிழக அரசின் உதவியோடு மீண்டும் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். தமிழகத்தில் சுமார் 70 ஆயிரம் ஜல்லிக்கட்டு காளைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் ஓட்டிப் போய் பிராணிகள் நல வாரியத்திடம் ஒப்படைத்து பராமரிக்கச் சொல்லப் போகிறோம். அதற்காக தமிழகம் முழுதுமுள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்களைத் திரட்டி வருகிறோம்’’ என்கிற அம்பலத்தரசு, ‘‘ஜல்லிக்கட்டைத் தடைசெய்ததன் பின்னணியில் இந்திய பொருளாதாரத்தை சிதைக்கும் ஒரு வெளிநாட்டு சதி இருக்கிறது’’ என அதிர்ச்சி தருகிறார்.

‘‘தமிழகத்தின் விவசாயம் கால்நடைகளை நம்பியே நடக்கிறது. திட்டமிட்டு இந்திய விவசாயத்தை காலி செய்து, பாரம்பரிய மாட்டு ரகங்களை அழித்து இந்திய உணவுச் சந்தையை மொத்தமாக ஆட்கொள்ளத் துடிக்கிறார்கள். நம் மாட்டு ரகங்களை கொண்டு சென்று கலப்பு இனங்களை உருவாக்கி இந்தியாவுக்குள் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். மிஞ்சியிருப்பது பொலிகாளை ரகங்கள்தான். இவற்றின் மூலம் இனப்பெருக்கமாகும் பசுக்கள் நீண்ட ஆயுள் கொண்டவையாக இருக்கின்றன.

இவற்றை அழித்து விட்டால் ஒட்டுமொத்த நாட்டு மாடு ரகமும் அழிந்து போகும். பிறகு சுவிட்சர்லாந்திலிருந்தும், நார்வேயிலிருந்தும் கலப்பு மாடுகளை இறக்குமதி செய்யலாம். தீவனச் சந்தை, பால் சந்தைகளையும் கைப்பற்றி விடலாம். அதற்கான தொடக்கம்தான் ஜல்லிக்கட்டுத் தடை. இதை நான் ஆதாரமின்றி சொல்லவில்லை. நான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தை நாடியபோது நார்வே மற்றும் சுவிட்சர்லாந்திலிருந்து எனக்கு நிறைய போன் அழைப்புகள் வந்தன. ‘ஏன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்கிறீர்கள்’ என்று கேட்டதோடு மிரட்டவும் செய்தார்கள். இதன் பின்னணியையெல்லாம் ஆராய வேண்டும்’’ என்கிறார் அவர்.

தேசிய கால்நடை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரும், விலங்குகள் நல ஆர்வலருமான கௌஹர் அஜீஸ், ‘‘இதில் வெளிநாட்டுக் கை இருப்பது உண்மைதான்’’ என்கிறார். ‘‘நான் கால்நடை ஆணையத்தில் உறுப்பினராக இருந்தபோதே அதற்குள் வெளிநாட்டு ஆட்கள் ஊடுருவ முயற்சித்தார்கள். நாங்கள் கடுமையாக எதிர்த்ததால் அப்போது அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை. இப்போது அவர்கள் சர்வ சுதந்திரமாக செயல்படுகிறார்கள். ஜல்லிக்கட்டு என்பது நம் உள்நாட்டு விவகாரம். இங்கு பல நூறு விலங்குகள் நல ஆர்வலர்கள் இருக்கிறோம். ஜல்லிக்கட்டை கண்காணிக்க நாங்கள் போதும். வெளிநாட்டு அமைப்புகள் இதில் ஏன் ஆர்வம் காட்டவேண்டும்? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் நிறைய வெளிநாட்டவர்கள் கோர்ட்டுக்கு வந்தார்கள். இவர்கள் எல்லாம் யார்? எந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வந்தார்கள்..?

வெளிநாட்டு சக்திகளுக்கு ஆதரவாகவே மத்திய அரசின் நடவடிக்கையும் இருந்தது. காளைமாடு வீட்டு விலங்கா, வனவிலங்கா என்றுகூட தெரியாதவர்கள்தான் முடிவெடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். நாங்கள் கண்காணித்தவரை ஜல்லிக்கட்டில் எந்த வன்முறையும் இல்லை. அது தடை செய்ய வேண்டிய விளையாட்டும் அல்ல. தடை செய்யும் முன்பாக ஒரு சர்வே நடத்தி ஆய்வு செய்திருக்க வேண்டும். பர்கூர், வெச்சூர், ரெட்சிந்தி என்று காலங்காலமாக நாம் வளர்த்து வந்த நாட்டு மாடுகள் எல்லாம் அழிந்து விட்டன. வெச்சூர் ரக மாட்டை கொண்டுபோய் கலப்பு செய்து ஜெர்ஸி மாடாக்கி நம்மிடமே விற்கிறார்கள். இப்போது மிஞ்சியிருக்கும் மாட்டினங்களையும் அழிக்க முனைகிறார்கள். ஜல்லிக்கட்டு தடை அதற்கான ஆரம்பம்தான்...’’ என்கிறார் கௌஹர் அஜீஸ்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறார் விலங்குகள் நல ஆர்வலரும், விலங்குகள் நடத்தை வல்லுனருமான டாக்டர் ஜெரால்ட்.

‘‘ஜல்லிக்கட்டை வீர விளையாட்டு என்பதும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதும் மிகவும் அபத்தமானது. 100 கிலோ உள்ள மனிதர் 100  கிலோ உள்ள இன்னொரு மனிதருடன் மோதினால் அது வீரம். காளை மாட்டுடன் மோதுவது எப்படி வீரத்தின் அடையாளம் ஆகும்..? மேலும் ஜல்லிக்கட்டு தமிழகத்தின் ஒரு பகுதி சார்ந்த விளையாட்டுதானே தவிர, ஒட்டுமொத்த தமிழர்களின் வீரக்கலை இல்லை. ஜல்லிக்கட்டை தடை செய்ததில் வெளிநாட்டு சதி இருப்பதாகச் சொல்வது மலினமான அரசியல். உலகம் முழுவதும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டை எதிர்க்கிறார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் ஆர்வம் காட்டியிருக்கலாம்’’ என்கிறார் அவர்.

ஜல்லிக்கட்டு வீரரும், ஜல்லிக்கட்டு காளைகளுக்குப் பயிற்சி அளிப்பவருமான முடக்கத்தான் மணி, ஜல்லிக்கட்டை எதிர்க்கும் விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு ஒரு சில கேள்விகளை முன்வைக்கிறார். ‘‘ஜல்லிக்கட்டுங்கிறது வருஷத்துல ஒரு நாளு... மத்த நாளெல்லாம் பொலிகாளைக்கு ராஜ வாழ்க்கை. எங்கூட்டு பிள்ளைகளைக் கூட அப்பிடி கவனிக்க மாட்டோம். மாட்டை வதைக்கிறோம்னு குத்தம் சொல்றியளே... உங்க ஊர்ல துள்ளத் துடிக்க ஆட்டையும் மாட்டையும் பன்றியையும் வெட்டிக் கூறு போட்டு விக்கிறாங்களே... அந்தக் கொடுமையெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலையா? மாட்டை வதைக்கக் கூடாது... ஆனா கொல்லலாமா? என்னய்யா உங்க நியாயம்?’’

வெச்சூர் ரக மாட்டைக் கொண்டுபோய் கலப்பு செய்து ஜெர்ஸி மாடாக்கி நம்மிடமே விற்கிறார்கள். இப்போது மிஞ்சியிருக்கும் மாட்டினங்களையும் அழிக்க முனைகிறார்கள். ஜல்லிக்கட்டு தடை அதற்கான ஆரம்பம்தான்!

- வெ.நீலகண்டன்