தெவிட்டாத தென்மலை!



சம்மர் எஸ்கேப்

தென் தமிழ்நாட்டிலிருந்து கேரளா செல்லும் செங்கோட்டை சாலை வழியாக மலையாள பூமிக்குள் நுழைந்தால் 31வது கிலோ மீட்டரில் தென்படுவது தென்மலை. ‘தென்மலையிலிருந்து எடுக்கும் தேனும் தெவிட்டாது. தென்மலைக்கு செல்லும் பயணமும் சலிக்காது’ என்கின்றனர் இங்குள்ள மக்கள்.

கேரளாவுக்கே குடிநீர் வழங்கும் கல்லடா ஆறு, குழத்துப்புழா, ஆரியங்காவு, கழுதுருட்டி, உமையாறு, பரப்பாறு என பலவாறாகப் பிறந்து, அணைக்கட்டி(லி)ல் இணைந்து, ஒரே ஆறாக வெளியேறுகிறது. அந்தக் கல்லடா அணைக்குச் சென்றால், இந்தியாவிலேயே முதன்முதலில் திட்டமிடப்பட்ட தென்மலை சுற்றுச்சூழல் சுற்றுலா மையத்தை அடையலாம்.

என்னென்னபார்க்கலாம்?

நடனமாடும் நீரூற்று: இது சுற்றுலா மையத்தின் பின்புறமே அமைந்துள்ளது. இங்கு பி.என்.ஏ எனும் தொழில்நுட்பத்தில் தண்ணீர் வண்ணமயமாக நர்த்தன மிடுவது கொள்ளை அழகு. தென்னிந்தியாவிலேயே பெங்களூருவிலும் இங்கும்தான் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.மான் பூங்கா: சுற்றுலா மையத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது. புள்ளி மான்களும் சாம்பார் மான்களும் அதிகம் துள்ளுகின்றன.

ஓய்வு மண்டலம்: கல்லடா அணைக்கட்டின் இரு பக்கவாட்டில் ஒன்றுதான் இந்த ஓய்வு மண்டலம். வனத்துக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் சிற்பத் தோட்டம் இந்த மண்டலத்தின் சிறப்பு. இங்கு டிரெக்கிங் செல்லலாம். சாகச மண்டலம்: அணைக்கட்டின் இன்னொரு பகுதி இது. இங்கே இரும்பு படிக்கட்டுகளில் ஏறி, பழைய செங்கோட்டை - திருவனந்தபுரம் சாலையை அடைவது சிலிர்ப்பூட்டும் அனுபவம். பசுமையான நீண்ட பள்ளத்தாக்கை 15 மீட்டர் உயரத்தில் இரும்பு கேபிளில் கடக்கும்போது மயிர்க்கூச்செறிகிறது. இங்குள்ள குளத்தில் படகு சவாரி செய்யலாம்.

லுக் அவுட்: இதையெல்லாம் தாண்டி ஒரு கி.மீ போனால் வருகிறது ‘லுக் அவுட்’. ஒரு சிறிய அணைக்கட்டு, அதிலிருந்து சிலந்தியாகப் பிரியும் கால்வாய்கள் என இந்த இடம் உங்களைக் கவர்ந்து போகும். பாலாறு: செங்கோட்டையிலிருந்து தென்மலைக்கு செல்லும் வழியில்தான் 300 அடி உயரத்திலிருந்து விழும் பாலாறு உள்ளது. இங்கு செல்ல உள்ளூர் நிர்வாகத்தினர் ரூ.7 மட்டும் வசூலிக்கின்றனர். அதையடுத்து அமைந்துள்ளது பிரிட்டிஷ் காலத்து 13 கண் பாலம். இலைமேல் கம்பளிப் பூச்சியாக இதன் மேல் நெளிந்து செல்லும் ரயில் அழகைக் கீழிருந்து பார்த்து ரசிக்கலாம்.
எப்படிப் போவது?

செங்கோட்டையிலிருந்து தென்மலைக்கு 25 ரூபாய்தான் பஸ் கட்டணம். தென்காசியில் இருந்தும் தென்மலைக்கு அடிக்கடி பஸ் உள்ளது. கூடுதலாக ரூ.10 கட்டணம். காரில் சென்றால் இடையில் உள்ள இடங்களையும் பார்க்கலாம். சிறு, சிறு பஸ் சர்வீஸ்கள் இருப்பதால் கார் கூட அநாவசியம்தான்.
எவ்வளவு செலவாகும்?

சாகச மண்டலங்களுக்கு செல்ல தலா ரூ.30ம், மான் பூங்கா, சிறுவர் பூங்காக்களுக்கு செல்ல ரூ.20ம், நீரூற்று நடனத்துக்கு ரூ.30ம் வசூலிக்கின்றனர். பெரியவர்களுக்கு ரூ.590ம், சிறியவர்களுக்கு ரூ.490ம் கொடுத்தால் மதிய உணவு, சிற்றுண்டியுடன் அனைத்து இடங்களையும் சுற்றிக் காட்டுகின்றனர்; அனைத்து சாகச நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம். கேரள சுற்றுலாத் துறையின் தங்குமிடங்கள் இங்கு உள்ளன.

- ஐ.கோபால்சாமி
படங்கள்: கண்ணன்