பேசாதேகால் டாக்சி கிளம்பியது. ஏறி உட்கார்ந்திருந்த கிரியும் ஷாலுவும் உறவுக்கார வாசுவை ஒரு பிடி பிடிக்க ஆரம்பித்தார்கள்.‘‘கல்யாண வீட்டுல வந்து என்ன பேச்சு பேசறான் பார்... எங்க அம்மாவுக்கு ரொம்ப திமிராம்.

அதை அடக்கத்தான் என் தம்பிக்கு கடவுள் வேலை தராம இருக்காராம்!’’ என கிரி கொதிக்க, ‘‘எங்க அப்பா வீட்டுக்குப் போனப்பகூட, கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம என்னைப் பத்தி புகார் சொல்லியிருக்கார்’’ என மனைவி ஷாலு ஆத்திரப்பட்டாள்.பேச்சு விறுவிறுப்பாகவும் அதிரடியாகவும் போய்க் கொண்டிருந்தது.

‘‘நீங்க திட்டற அந்த வாசு அத்தனை மோசமான ஆசாமி இல்லீங்களே? நான் வேணா அவர்கிட்ட பேசிப் பார்க்கவா?’’ என்றார் டாக்சி டிரைவர் திடீரென்று. இருவரும் அதிர்ச்சியில் வாயை மூடினார்கள். இறங்கும் நேரத்தில் கிரி மெல்ல டிரைவரைக் கேட்டான்: ‘‘நிஜமாவே உங்களுக்கு வாசுவைத் தெரியுமா?’’

புன்னகை செய்தபடி டிரைவர் சொன்னார்... ‘‘எனக்கு அவரை யாருன்னே தெரியாது. டாக்சி, ஆட்டோவில் வர்ற நேரத்தில் இப்படிக் குடும்ப விவகாரங்களை உரக்க வாதிட்டுப் பேசினா அது உங்களுக்கும் கெடுதல். ஓட்டுற எங்களுக்கும் இடைஞ்சல் இல்லையா..? அதனாலதான் அப்படிச் சொன்னேன்... மன்னிச்சிடுங்க!’’   

 பம்மல் நாகராஜன்