கவிதைக்காரர்கள் வீதி




இழப்பு

உதிரும் இலை
இனி பேச முடியாது
மரத்திடம்!

பயணம்

காற்றே அறியும்
உதிரும் இலை
பயணப்படும் திசை

நகரம்

‘‘கதவு சாத்தியிருக்கிறதே’’
என்றேன்,
‘‘வெளியே போயிருக்கிறார்கள்’’
என்றான்!
மீண்டும்
‘‘கதவு சாத்தியிருக்கிறதே’’
என்றேன்,
‘‘உள்ளேயிருக்கிறார்கள்’’
என்றான்...

வணிகம்

உறவுகள் அழைத்தால்கூட
‘வாடிக்கையாளர்’ என்றே
சொல்கிறது செல்போன்

கனவு

மாட்டின் கனவு,
மனிதன் மூச்சிரைக்க
வண்டி இழுப்பதாய்!

அது...

உன்னைக் கிள்ளி
நான் அழுவேன்,
காதல்!

ஈரம்

அழாதே...
அழாமலும் இருக்காதே...
ஈரமானது வாழ்வு!

வராதவர்

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு
நடந்த கோயில் கலவரத்தில்
காணாமல் போனவர்தான்,
அதன்பின்
திருவிழாக்களுக்குக்கூட
வருவதில்லை கடவுள்!

விகடபாரதி