கணக்கு



‘‘இந்த வருஷம் முதல் முறையா, நம்ம வீட்டு மாமரத்தில் கொத்துக் கொத்தா பூ பூத்துக் குலுங்குது. அவசரப்பட்டு, இளசா காய்களைப் பறிக்காம, நல்ல பருவத்துல பறிக்கணும். வியாபாரிகிட்ட அதை பழக் காயா வித்தா குறைஞ்சது ரெண்டாயிரம் ரூபாயாவது பார்க்கலாம்!’’ - கனிமொழி, தன் கணவன் இளங்கோவிடம் யோசனை சொன்னாள். இரண்டு நாட்கள் மனைவி வெளியூர் சென்றிருந்தபோது, மரத்தில் காய்த்து தொங்கிய மாவடுக்களை பறித்து ஐந்நூறு ரூபாய்க்கு விற்றுவிட்டான் இளங்கோ.

வீட்டினுள் நுழைந்ததும், பிரசவித்த பெண் போல் களைத்துப் போய் நின்ற மரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள் கனிமொழி. ‘‘ரெண்டாயிரம் வர வேண்டிய இடத்தில், வெறும் ஐந்நூறு ரூபாய்க்கு வித்தது முட்டாள்தனம்தானே..?’’ - கணவனை பார்த்து கேலியும், கோபமுமாகக் கேட்டாள். ‘‘காய்ச்ச மரம் கல்லடி படும்னு கேள்விபட்டதில்லையா? அந்த மாமரம் சரியா நம்ம வீட்டு வாசல்ல இருக்கு. ரோட்டுல போறவங்க வர்றவங்க பார்வையெல்லாம் படும். சின்னப்பசங்க கல்லை வீசுவாங்க. அது நம்ம வீட்டு கண்ணாடி ஜன்னல்ல பட்டுதுன்னா, அதை ரிப்பேர் செய்ய குறைஞ்சது மூவாயிரம் ஆகும். அதனாலதான், இப்பவே பறிச்சுட்டேன்.’’ இளங்கோவின் கூட்டல் கழித்தல் கணக்கு சரியென்று புரிந்துகொண்டாள் கனிமொழி.                        
எஸ்.ராமன்