சகுனியின் தாயம்



கே.என்.சிவராமன்

‘‘சுமப்பதில் வருத்தமில்லை. பாரமாக இல்லாததால் சுமையாகவும் தெரியவில்லை. இப்படியே வருவதற்கு ஒப்புதல் என்றால் வழியைச் சொல்லுங்கள். எந்தப் பக்கம் செல்ல வேண்டும்?’’
இளமாறனின் குரலில் பதற்றமில்லை.

ஆனால், தமிழர்களுக்கே உரிய நகைச்சுவை, வாக்கியங்கள் முழுக்க பொங்கி வழிந்தது. இதை யவன ராணியும் உணர்ந்திருக்க வேண்டும். நிதானமாக அவன் தோளிலிருந்து இறங்கியவள், தன் குறுவாளின் நுனியை மட்டும் அவன் கழுத்திலிருந்து விலக்காமல் நின்றாள்.

‘‘இவ்வளவு விரைவில் சுயநினைவு அடைவேன் என்று எதிர்பார்த்திருக்க மாட்டாய்...’’
‘‘ஒரு சின்ன திருத்தம்...’’
‘‘என்ன?’’

‘‘இவ்வளவு விரைவு என்பது தவறு. இதைவிட விரைவு என்
பதுதான் சரி...’’
‘‘அதாவது முன்னரே நான் மயக்கம் தெளிந்திருக்க வேண்டும் என்கிறாய்...’’
‘‘இல்லை...’’

‘‘இல்லையா?’’
‘‘ஆம் ராணி. மயக்கம் அடைந்தால்தானே அது தெளிய வேண்டும்...’’
‘‘புரியவில்லையே...’’

‘‘இதில் புரிவதற்கு என்ன இருக்கிறது? மூலிகை தைலத்தை உங்கள் நாசிக்கு அருகில் கொண்டு சென்றபோதே அதை நீங்கள் சுவாசிக்கவில்லை என்பதை உணர்ந்தேன். மூச்சை கட்டுப்படுத்தும் வித்தை தமிழர்களுக்கு மட்டுமே உரியதா என்ன? தவிர உங்கள் சருமமும் நீங்கள் மயக்கமடையவில்லை என்பதை உணர்த்தியது...’’
‘‘சருமமா?’’

‘‘ஆம் ராணி. பொன்னிறமாக பளபளக்கும் உங்கள் இடுப்புப் பிரதேசத்தில் என் கரங்கள் பட்ட போது சட்டென்று அது சுருங்கியது. அங்கிருந்த பூனை ரோமங்கள் சிலிர்த்து எழுந்தன...’’
‘‘ம்...’’

‘‘சற்றே என் கரங்கள் மேல் பக்கம் நகர்ந்திருந்தால் காவிரியிலேயே என்னைப் பிணமாக்கி இருப்பீர்கள்...’’
‘‘அதனால்தான் எச்சரிக்கையாக நடந்து கொண்டாயா?’’

‘‘இந்த ஒரு கூற்றின் வழியாக ஒட்டுமொத்தமாக தமிழர்களை அவமதிக்கிறீர்கள்...’’
‘‘அப்படியென்ன அவமதித்துவிட்டேன்..?’’

‘‘உரிமை இல்லாத எந்தப் பொருளையும் தமிழன் சொந்தம் கொண்டாட மாட்டான்...’’
‘‘சோழனும், சேரனும் கூட தமிழர்கள்தானே?’’

யவன ராணி என்ன சொல்ல வருகிறாள் என்பது இளமாறனுக்கு புரிந்தது. கொற்கை துறைமுகம் பாண்டியர்களுக்கு சொந்தமானது. அதை அபகரிக்க சோழனும், சேரனும் வேளிர்களுடன் இணைந்து திட்டமிடுவதை சுட்டிக் காட்டுகிறாள். இதற்கு என்ன மறுமொழி அளிக்க முடியும்?
‘‘ஏன் அமைதியாகிவிட்டாய் இளமாறா? பதில் கிடைக்கவில்லையா... அல்லது, சொல்ல விருப்பமில்லையா?’’
‘‘......’’
‘‘கைக்கு எட்டும் தொலைவில் இருக்கும் எந்தவொரு பொருளையும் அபகரிக்கத்தான் ஒவ்வொரு மனிதனும் முயற்சிக்கிறான். அது சாத்தியமில்லை என்று உணரும்போது தன் கோழைத்தனத்துக்கு அறிவார்ந்த விளக்கம் அளித்து தன்னைத் தானே சமாதானப்
படுத்திக் கொள்கிறான்...’’

‘‘ராணி...’’
‘‘உலக வரலாறுகள் அனைத்துமே பெண்களை அபகரிப்பதில் இருந்துதான் எழுதப்படுகின்றன. நாடுகளுக்கு இடையிலான ஒவ்வொரு போருக்குப் பின்னாலும் ஒரு பெண்ணின் உடல் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆதிக்கம் என்பதே பெண்களை ஆள்வது தான். இந்த உலக நியதிக்கு
தமிழன் மட்டும் விதிவிலக்கா என்ன?’’

‘‘அப்படியானால் காவிரியின் அடி ஆழத்தில் நீந்தும்போதே நீங்கள் குறுவாளை என் கழுத்தில் பதித்து தப்பித்திருக்கலாமே?’’
‘‘அப்படிச் செய்தால் அந்த வெற்றியை காவிரிக்
கரையில் இருந்த சோழன் தனதாக்கிக் கொண்டிருப்பான்...’’

வியப்புடன் ராணியை ஏறிட்டான் இளமாறன். அவளது கம்பீரம் அவனை அசர வைத்தது என்றால், அவளது தெளிவு அவனை மிரட்சியடையச் செய்தது. பாண்டிய நாட்டின் உண்மையான எதிரி... சோழனோ, சேரனோ, அல்லது வேளிர்களோ அல்ல. யவன ராணிதான் என்பதை அந்த கணத்தில் பூரணமாக உணர்ந்தான்.
‘‘சரி, முன்னோக்கி நட...’’ யவன ராணி கட்டளையிட்டாள்.

‘‘சுரங்கத்தின் திருப்பத்தில் சேர மன்னர் நமக்காக காத்திருக்கிறார். அவரிடம் என்னை நீங்கள் ஒப்படைத்தால், என்னை சிறை செய்த பெருமையை அவர் தட்டிச் செல்ல மாட்டாரா?’’
சட்டென்று சத்தம் எழுப்பாமல் ராணி சிரித்துவிட்டாள். ‘‘சேரன் அங்கிருப்பது உனக்கு எப்படித் தெரியும்?’’

‘‘மிளிரமணிகளின் ஒளி அவரை அடையாளம் காட்டிவிட்டது...’’ என்றபடி தன் ஆள்காட்டி விரலினால் சுரங்கத்தின் திருப்பத்தில் விழுந்திருந்த பச்சை ஒளியை காட்டினான்.
யவன ராணி புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்தாள். தோளைக் குலுக்கியபடி இளமாறன் தொடர்தான்.

‘‘இந்த மிளிரமணிகளும் தமிழர்களுக்கே உரியதுதான். குறிப்பாக கொங்கு நாட்டில் மட்டுமே கிடைக்கும் அபூர்வமான கல் இது. கொற்கை முத்துக்களுக்கு அடுத்தபடியாக உங்கள் நாட்டினர் அதிகம் வாங்குவது இதைத்தான். இதனால் யவன நாட்டின் செல்வங்களே குறைவதாக உங்கள் நாட்டு அமைச்சர் வருத்தப்பட்டிருக்கிறார்.

 மாணிக்கம், மரகதம், கோமேதகம் என வெவ்வேறு பெயர்கள் இதற்கு இருந்தாலும் ‘ரத்தினம்’ என்றே சுருக்கமாக அழைக்கப்படுகிறது. கண்ணகியின் காற்சிலம்பில் இருந்த மாணிக்கப்பரல் கூட இதன் ஒருவகைதான். இந்த கற்களால் செதுக்கப்பட்ட சிலைகளுக்கு எல்லா காலத்திலும் மதிப்பு உண்டு. யவன வணிகர்கள் இந்தக் கற்களை வாங்குவதற்காகவே பவளங்களையும், தங்க நாணயங்களையும் மூட்டை மூட்டையாக கொண்டு வருகிறார்கள். இந்த கற்களின் வணிகத்துக்காக உருவானதுதான் நாகப்பட்டினத்திலிருந்து வஞ்சி துறைமுகம் வரையிலான ராஜகேசரி பெருவழிப் பாதை. சேர நாட்டின் உயிர்நாடியே இந்த மிளிரமணிகளை ஏற்றுமதி செய்வதில்தான் அடங்கியிருக்கிறது. அதை பறைசாற்றும் விதமாக சேர மன்னர் அணிந்திருக்கும் பச்சைக் கல், இப்பொழுது அவர் அங்கு மறைந்திருப்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறது...’’

‘‘அப்படியானால் பாண்டியனை வீழ்த்திவிட்டு சேர நாட்டையும் கைப்பற்ற வேண்டும் என்கிறாய்?’’
‘‘அந்த திட்டத்துடன்தானே புகாருக்கே வந்திருக்கிறீர்கள்...’’ என்று சொன்ன இளமாறன், கணத்துக்கும் குறைவான நேரத்தில் செயல்பட்டான். குனிந்து குறுவாளின் நுனியிலிருந்து விலகியவன், சட்டென்று அவள் கையை முறுக்கினான். குறுவாளை பறித்தான்.

‘‘கைக்கு எட்டும் தொலைவில் அல்ல, கைக்குள் அடங்கிய நிலையில்தான் ராணி இப்பொழுது நீங்கள் இருக்கிறீர்கள். உங்களை சொந்தமாக்கிக் கொள்ளவா, அல்லது கோழையைப் போல் தப்பித்து செல்ல விட்டுவிட்டு பிறகு ‘தமிழனின் நாகரிகம் அது இது’ என்று ஏதேதோ விளக்கம் சொல்லி என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்ளவா?’’

கேட்ட இளமாறன், முன்பு போலவே அவளைத் தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டான். சேர மன்னர் இருக்கும் திசையை நோக்கி நடந்தபடியே ‘‘உங்களை சொந்தமாக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டேன். நீங்கள் சொன்னது நிஜம்தான் ராணி. யுத்தங்கள் அனைத்தும் பெண்களை அபகரிப்பதில் இருந்துதான் தொடங்குகின்றன...’’ என்றான்.
ராணி புன்னகைத்தபடியே நிமிர்ந்தாள். சுரங்கத்தின் கூரை அவள் பார்வையில் தட்டுப்பட்டது. கண்களை சுருக்கியவள், சட்டென மலர்ந்தாள். கைகளை உயர்த்தியவள், கூர்மையான ஒரு பாறைக்குள் கைவிட்டுத் திருகினாள்.

அடுத்த கணம், எதிர்திசையிலிருந்து பத்து வேல்கள் இளமாறனின் மார்பை குறிபார்த்து வந்தன.
யந்திர பொறிகளைக் கையாள்வதில் ராணி தலைசிறந்தவள் என்பதையும், காவிரிக்குள் இருக்கும் இந்த சுரங்கத்தை வடிவமைத்தது கூட யவனர்கள்தான் என்பதையும் அப்பொழுதுதான் இளமாறன் உணர்ந்தான். 

ஆனால், அதற்குள் காலம் கடந்து விட்டது...
‘‘எஜமானே... உங்களுக்கு சாமி நம்பிக்கை இருக்கா?’’
மகேஷ் யோசித்தான். ‘‘என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே வேதாளம்...’’
‘‘சரி, உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?’’
‘‘அம்மாவை...’’

‘‘அப்ப அவங்களை மனசுக்குள்ள வணங்குங்க...’’
‘‘எதுக்காக வேதாளம்?’’
‘‘ஏன்னா, இப்ப உங்களை அணு மாதிரி ரொம்பச் சின்னதா மாத்தப் போறேன். அதுக்கு பெரியவங்களோட ஆசீர்வாதம் வேணும்...’’
‘‘ஹையா... இதைத்தான் ‘அனிமா’ன்னு சொல்றோமா?’’
‘‘ஆமா எஜமான்...’’

‘‘அப்ப சரி...’’ கண்களை மூடிய மகேஷ், சத்தம் போட்டு பிரார்த்தனை செய்தான். ‘‘அம்மா... நான் ராஜகுமாரியை மீட்கணும். அலாவுதீனுக்கு சாப விமோசனம் தரணும். சூனியக்கார பாட்டியையும், மந்திரவாதி தாத்தாவையும் ஜெயிக்கணும். இதெல்லாம் நடக்கணும்னா வேதாளம் மூலமா எல்லா மந்திர வித்தைகளையும் நான் கத்துக்கணும். அதுக்கு உன்னோட ஆசீர்வாதம் வேணும். உன் சொல் பேச்சை நான் கேட்கறதில்லை.

ஹோம் ஒர்க் சரியா பண்றதில்லை. ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கறதில்லை. இதெல்லாம் தப்புத்தான். இனிமே அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். உன் பேச்சைக் கேட்கறேன். நீ நில்லுன்னா நிக்கறேன். உட்காருன்னா உட்கார்றேன். இதுவரைக்கும் நான் செஞ்ச தப்பை எல்லாம் மனசுல வைச்சு என்னை திட்டாதேம்மா. உன்னோட பிளஸ்ஸிங் எனக்கு வேணும்...’’ மனமுருக பிரார்த்தனை செய்தவன், ‘‘நான் ரெடி வேதாளம்...’’ என்றான்.

‘‘ஓகே எஜமான். இப்ப நான் சொல்றதை அப்படியே திருப்பிச் சொல்லுங்க...’’
‘‘சொல்லு வேதாளம்...’’
வேதாளம் மந்திரங்களைச் சொன்னது.
ஆனால் -அதை திருப்பிச் சொல்லத்தான் மகேஷால் முடியவில்லை. 

இந்த சமயத்துக்காகவே காத்திருந்த ஸ்பைடர் மேன், தன் வலது கை மணிக்கட்டை அவனை நோக்கி திருப்பினான். அங்கிருந்து புறப்பட்ட சிலந்தி சட்டென்று பாய்ந்து மகேஷின் வாயை மூடியது. அதுவும் எந்த மந்திரங்களை சொல்வதற்காக தன் வாயைத் திறந்தானோ, அந்த நிலையிலேயே, திறந்தவாக்கிலேயே அவன் வாயை தைத்தது.
இதனால் மந்திரங்களையும் அவனால் சொல்ல முடியவில்லை. வாயையும் மூட முடியவில்லை.

‘‘வசமா மாட்டிக்கிட்ட மகேஷ்...’’ என்று சிரித்த ஸ்பைடர் மேன், குகைக்குள் பறந்தான். அங்கும் இங்கும் தாவினான். இவனது மணிக்கட்டில் இருந்து புறப்பட்ட சிலந்தியில் மகேஷின் வாய் மூடியிருந்ததால், இவன் போகும் இடமெல்லாம் அவனும் சென்றான்.

தங்கள் தலைக்கு மேலே கூரைக்கு பதில் சிலந்தி வலைதான் இருக்கிறது என்பதை அப்பொழுதுதான் மகேஷ் கண்டான். அந்த சிலந்தி வலையும், இரும்பு வலையை போல் கெட்டியாக இருந்தது. கைகளால் அதை கிழிக்க முடியவில்லை. ஸ்பைடர் மேனுக்கு சமமாக அவனும் அங்கும் இங்கும் பறந்ததால், சிலந்தி வலை முற்றிலுமாக அவனை சுற்றியது. மூடியது.
வசமாக சிக்கிவிட்டோம். சிலந்தியாலான ஜெயிலில் மாட்டிக் கொண்டோம் என்பதை தாமதமாகத்தான் உணர்ந்தான். பரிதாபமாக தரையில் நின்று கொண்டிருந்த வேதாளத்தை பார்த்தான்.
‘‘எதுக்கும் கவலைப்படாதீங்க எஜமான். நான் இருக்கேன். எப்படியும் உங்களை காப்பாத்திடுவேன்...’’ சத்தம் போட்டு சொன்ன வேதாளம், தன் வலது கையை உயர்த்தியது. ராக்கெட் போல் மேல் நோக்கி சீற முயன்றது. முடியவில்லை.

காரணம், ‘‘ஸ்டாப் இட். அசையாம அப்படியே நில்லு...’’ என்று ஒலித்த குரல்தான்.
யாரென்று வேதாளம் திரும்பிப் பார்த்தது. அந்தரத்தில் சிலந்திக்குள் சிக்கியிருந்த மகேஷும் குரல் வந்த திசையை பார்த்தான். இருவரும் ஒருசேர அதிர்ந்தார்கள்.
அங்கே ஹாரி பார்ட்டர் நின்றிருந்தான். மறைவிடத்தை விட்டு வெளியே வந்தவன் தன் இடுப்பில் கை வைத்தபடி வேதாளத்தை முறைத்தான்.
‘‘மகேஷை நீ காப்பாத்தக் கூடாது...’’
‘‘இதை சொல்ல நீ யாரு?’’

‘‘ம்... உங்க அப்பா...’’
‘‘ஏய்...’’
‘‘சும்மா கத்தாத வேதாளம். உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். அமைதியா இரு...’’
‘‘மீறினா..?’’
‘‘சாம்பலாகிடுவே...’’
‘‘என்ன... மிரட்டறியா?’’

‘‘இல்லை. நிஜத்தை சொன்னேன். இங்க பாரு...’’ சொன்ன ஹாரி பார்ட்டர் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு பொருளை எடுத்தான். ‘‘இதை உன்மேல தூக்கிப் போட்டுடுவேன். பரவாயில்லையா?’’
அந்தப் பொருளை பார்த்ததுமே வேதாளம் பெட்டிப் பாம்பாக அடங்கியது. ‘‘என்னை மன்னிச்சிடு மகேஷ். உன்னை காப்பாத்தற நிலைல நான் இல்லை. இனி நீயேதான் ஸ்பைடர் மேன் கிட்டேந்து தப்பிக்கணும்...’’

‘ஏன்...’ என்று கேட்பது போல் தன் கைகளால் சிலந்தி வலையை மகேஷ் தட்டினான். ‘‘ஏன்னா, இந்தப் பொருளுக்கு முன்னாடி யாராலயும் எதுவும் பண்ண முடியாது...’’ சொன்ன வேதாளம் அந்தப் பொருளின் முன்னால் மண்டியிட்டது. வணங்கியது. முணுமுணுத்தது. ‘‘சகுனியின் தாயத்தை எதிர்க்கிற சக்தி, பகவான் கிருஷ்ணருக்கே கிடையாதே...’’

‘‘அந்த இடத்துலயே அவங்க ரெண்டு பேரையும் நீங்க கையும் களவுமா பிடிச்சிருக்கணும்...’’ வால்டர் ஏகாம்பரம் படபடத்தார். ‘‘ரங்கராஜனையும், தேன்மொழியையும் நீங்க தப்பிக்க விட்டிருக்கக் கூடாது...’’ ஸ்காட் வில்லியம்ஸ் குஷன் நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்தான். கார்ப்பரேட் அலுவலகத்துக்குரிய சாமுத்ரிகா லட்சணத்துடன் அவன் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது. ‘‘அவங்களை பிடிக்கிறதால ஒரு பயனும் இல்லை...’’

‘‘அப்ப அவங்க வெளில இருக்கிறதால மட்டும் ஏதாவது லாபமிருக்கா?’’
‘‘நிறைய இருக்கு...’’ தன் சேரை பின்னுக்கு இழுத்தபடி எழுந்தவன், அவரை நோக்கி குனிந்தான். ‘‘ஒண்ணு தெரியுமா? இன்னி தேதில உலகத்துல எந்த நாட்டுலயும் கம்யூனிஸ்ட்டுகளால புரட்சி பண்ணி ஆட்சியை அமைக்க முடியாது. சொல்லப் போனா அவங்க சுதந்திரமா வெளில நடமாடறது தான் கார்ப்பரேட்டுகளுக்கு லாபம்...’’
‘‘என்ன சொல்றீங்க?’’

‘‘ட்ரூத். உண்மை. இதுக்கு உதாரணம் இருக்கு...’’ 
‘‘யாரு?’’
‘‘சந்தனக் கடத்தல் வீரப்பன்!’’

‘‘நம்ம கோவிந்து அந்த மீனாகிட்ட மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கப் போறானாம்...’’
‘‘என்னது..?’’
‘‘ஆமா... அவ இவனுக்குக் கொஞ்ச மார்க்தானே போட்டிருந்தா!’’

‘‘என்னப்பா... சாப்பாட்டுல கல் கிடக்குதே!’’
‘‘அது உங்க ராசிக்கேத்த கல் சார்... செலக்ட் பண்ணித்தான் போட்டிருக்கோம்!’’

‘‘ஏன் போலீஸ்காரங்க எல்லாம் கையில டிபன் கேரியர்களை வச்சிக்கிட்டு நிற்கறாங்க..?’’
‘‘இரண்டு அடுக்கு, மூன்று அடுக்குப் பாதுகாப்புன்னு கேள்விப்பட்டதில்ல..?’’
- சுப.தனபாலன்,
முத்துப்பேட்டை.

(தொடரும்)