பேசும் சித்திரங்கள்



தமிழ் ஸ்டுடியோ அருண்

உலகமயமாக்கலின்உள்குத்து... 19ம் நூற்றாண்டில் தொழில்புரட்சி யின் விளைவாக, பிரமாண்ட தொழிற்சாலைகள் உருவானபோது, பல மேற்கத்திய நாடுகள் வல்லரசு ஆகின. இப்படி வளர்ந்த நாடுகள், இந்தியா போன்ற மற்ற நாடுகளின் இயற்கை வளங்களையும், மனித வளத்தையும் சுரண்டி, தங்களுடைய நாட்டை வளப்படுத்திக் கொண்டன. ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளின் ஆயிரக்கணக்கான மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். அந்த அடிமைத்தளை விடுபட, வலிகள் மிகுந்த போராட்டம் தேவையாக இருந்தது.

இப்படியான அடிமைப்படுத்துதலின் நவீன வடிவமே ‘உலகமயமாக்கல்’. தேசமின்றி அடிமைகளாகச் சென்ற நிலை மாறி, இப்போது உலகம் முழுவதும் ‘பொருளாதாரம் தேடிச் செல்லும் அகதிகளின்’ எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ‘‘ஒரு நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வறுமையைப் போக்க முடியவில்லை என்றால், அந்த நாடு கடைபிடிக்கும் ஜனநாயகத்தால் என்ன பயன்’’ என்று நெல்சன் மண்டேலா எழுப்பிய கேள்வி முக்கியமானது. வளர்ந்து வரும் நாடுகளில் அடிமைகளையும், அகதி களையும் உருவாக்கி, அதன் மூலம் தங்கள் தேசத்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ளும் வேட்கையில் தீவிரமாக இருக்கின்றன வளர்ந்த நாடுகள்.

உலகமயமாக்கல் பற்றியும், அதன் எதிர்விளைவுகள் பற்றியும் தொடர்ச்சியான படைப்புகள் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை. ஆயினும், ஆங்காங்கே சில படைப்புகள் வெளியாகி ‘மக்களின் சிந்தனை மரபு ஒன்றும் தேய்ந்துபோய் விடவில்லை’ என்பதை உணர்த்திக்கொண்டிருக்கின்றன. உலகமயமாக்கலின் விளைவுகளை மிக நேர்த்தியான காட்சி வடிவில் பதிவு செய்திருக்கும் குறும்படம் ‘ஆழத்தாக்கம்’. இதன் இயக்குனர் பைசல்.

கிராமத்தின் பசுமை வயல்வெளி, எழில் கொஞ்சும் நீர்நிலை, தென்னந்தோப்புகள் என பல இயற்கை வளங்களுக்கு மத்தியில் இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். சிறுவர்களுக்கே உரித்தான, பல விளையாட்டுகளை உற்சாகமாக இருவரும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து, ஒரு குளத்தின் எதிரெதிர் முனைகளில் இருவரும் உட்கார்ந்தபடி, சிறிய தேங்காயை தூக்கிப் போட்டு விளையாடுகிறார்கள். விளையாட்டின் இடையே, திடீரென அந்த சிறிய தேங்காய் குளத்தில் விழுந்து விடுகிறது.

அருகில் அமர்ந்திருக்கும் இன்னொரு சிறுவன், தன்னிடம் இருக்கும் இரண்டு ரூபாய் நாணயத்தைக் கொடுத்து விளையாடச் சொல்கிறான். இரண்டு ரூபாய் நாணயத்தையும் தேங்காய் போலவே அந்த சிறுவர்கள் தூக்கிப் போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்பாராத விதமாக, அந்த இரண்டு ரூபாய் நாணயமும் குளத்தில் விழுந்துவிடுகிறது. அது தங்களுடைய பணம் இல்லையென்பதால், இரண்டு சிறுவர்களும் குளத்தில் விழுந்து அந்த நாணயத்தைத் தேடுகிறார்கள். என்ன கிடைத்தது என்பதை பல சித்தாந்தங்களோடும், குறியீடுகளோடும் சொல்லி யிருக்கும் குறும்படம்தான் ‘ஆழத்தாக்கம்’.

கலை என்பது, எல்லாக் காலங்களிலும் மக்களுக்கு அவர்களின் சுயத்தை அறிய வைக்க முயற்சிக்கும். வாழ்தலின் உன்னதத்தை உணர்த்திக்கொண்டே இருக்கும். மக்களின் புரிதல் அளவுகோலை சார்ந்து, கலை அவ்வப்போது தன்னுடைய வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். குறியீடுகளால் ஒன்றைப் புரிய வைப்பது, நவீனத்துவம், பின் நவீனத்துவம், இன்னும் பல கோட்பாடுகள் என எல்லாமும் மக்களுக்கு மிக அருகில் சென்று அவர்களை மேம்படுத்துவதற்காகவே உருவாயின.

இத்தகைய கலை வடிவங்களைக் கொண்டு, ஆழ் மனக் கசடுகளை அகற்றலாம். அதோடு மட்டுமின்றி, அவர்களின் தேவையை உணர்த்துவதும், மறுக்கப்படும் தேவைகளுக்காக போராடும் உணர்வைத் தூண்டுவதும் கலையின் இன்னொரு பரிமாணம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. உலகமயமாக்கலின் விளைவுகளை பக்கம் பக்கமாகப் பேசி புரிய வைப்பதை விடவும், இப்படி சில நிமிடக் காட்சிகளாக பதிவு செய்யும்போது, அது எளிய மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொள்ளும். உலகமயமாக்கலின் விளைவுதான் தன்னுடைய படைப்பு என்று முடிவு செய்ததும், அதனை மினிமலிசம் என்கிற கோட்பாட்டின் கீழ் கொண்டு வந்து, கலை வடிவமாக மக்களிடையே கொண்டு சேர்த்திருக்கிறார் ‘ஆழத்தாக்கம்’ குறும்படத்தின் இயக்குனர் பைசல்.

இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய சூழலில், மேற்கத்திய நாடுகளில் ‘மினிமலிசம்’ என்கிற கோட்பாட்டு இயக்கம் தோன்றியது. படைப்புகளை, அதன் மையத் தன்மை சிதையாமலும், அதிகளவு தேவையில்லாத புறக்கூறுகளைப் பயன்படுத்தாமலும் படைப்பின் மையச் சரடை பார்வையாளனுக்கு உணர்த்த வேண்டும். ராபர்ட் ப்ரெசன் இயக்கத்தில் வெளியான ‘பிக்பாக் கெட்’, இப்படியான மினிமலிசம் இயக்கத்தைச் சேர்ந்த திரைப்படமாகும்.

தமிழில் இந்த மினிமலிசம் கோட்பாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படைப்புகளில் முக்கியமானது இந்தக் குறும்படம். படத்தில் எந்த இடத்திலும் ஒரு வரி வசனம் கூட இல்லை. காட்சிகள் மூலமும், பின்னணியில் ஒலிக்கும் ஒலியின் மூலமும் தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருப்பார் இயக்குனர். படத்தின் ஆரம்பக் காட்சிகளில், பின்னணியில் பலவிதமான பறவைகளின் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும்.

இயற்கையோடு இயைந்து வாழ்தல் என்பதன் குறியீடாகவே இந்தப் பின்னணி ஒலி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டாவது பாதியில், அதாவது குளத்திலிருந்து அந்நிய நிறுவனங்களின் பொருட்களை, சிறுவர்கள் குப்பைகளாக எடுத்து வெளியே வீசிக்கொண்டிருப்பார்கள். அடுத்த ஷாட்டில், இந்தியாவின் வரைபடத்தை க்ளோஸ்அப்பில் காட்டுவார்கள். பின்னணியில் காக்கைகளின் இரைச்சல் ஒலி மட்டுமே கேட்கும். காக்கைகளின் இரைச்சல், மரண ஓலமாக பாவிக்கப்படும் ஒன்று.

காக்கைகள் எப்போதும், சக காக்கை ஒன்று இறந்துவிட்டாலோ, அல்லது வேறு ஏதாவது இறந்த உயிரினத்தைப் பார்த்தாலோ இப்படித்தான் அலறும். இந்தியா, அந்நிய தேசங்களின் வியாபார பாய்ச்சலில் தன் சுயத்தை இழந்துவிட்டது என்பதை மிகச் சாதாரண, ஆனால் வலுவான கட்டமைப்புகளோடு இயக்குனர் இந்தப் பின்னணி ஒலியின் மூலம் உணர்த்தியிருப்பார்.

இந்தக் குறும்படத்தில் முக்கியமான காட்சி ஒன்றிருக்கிறது... இரண்டு ரூபாய் நாணயம் குளத்தில் விழுந்துவிட, அதற்கடுத்து தான் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை, சிறுவர்கள் குளத்தில் மூழ்கி வெளியே எடுத்துப்போடுவார்கள். இந்திய நாணயம், இந்தியப் பொருளாதாரத்தின் குறியீடு. பாரத தேசத்தின் பொருளாதாரம் மூழ்கிக்கொண்டிருக்க, அதன் சமாதியில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கின்றன.

படம்: ஆழத்தாக்கம் இயக்கம்: பைசல் நேரம்: 10.48 நிமிடங்கள்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: தேம்பாவணி எலியாசு பார்க்க: www.youtube.com/watch?v=HOdsJ_1SI28-feature=youtube

தேசமின்றி அடிமைகளாகச் சென்ற நிலை மாறி, இப்போது உலகம் முழுவதும் ‘பொருளாதாரம் தேடிச் செல்லும் அகதிகளின்’ எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

ஆகச் சிறந்த மருந்து!

‘சோழ நாடு சோறுடைத்து’ என்பார்கள். ஆனால் இந்த சோழநாட்டுப் பிரஜைகள், நிகழ்காலத்தில் பெரும்பாலும், பொருளாதார அகதிகளாக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்ற வண்ணம் இருக்கிறார்கள். எல்லா வளமும் அமையப்பெற்ற ஒரு தேசத்தில் பொருளாதார அகதிகள் உருவாவது என்பது மிகப் பெரிய சாபக்கேடு. இந்த தார்மீகக் கோபமே, பைசலை இந்தப் படத்தை எடுக்கத் தூண்டியிருக்கிறது. பெரிய பொருளாதார பின்புலம் இல்லாததால், நண்பர்களிடம் பணம் திரட்டியும், சொந்தப் பணத்தை செலவு செய்தும் குறும்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

நெய்வேலி புத்தகக் காட்சி, சென்னை ரோட்ராக்ட் அமைப்பினர் நடத்திய குறும்படப் போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று இந்தக் குறும்படம் பரிசுகளை வென்றிருக்கிறது. நாகர்கோவில் மாவட்டத்தில் சென்ட்ரிங் வேலை செய்துகொண்டே தொடர்ச்சியாக குறும்படங்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார் பைசல். படைப்பாளியின் வலிக்கு அங்கீகாரம் மட்டுமே ஆகச்சிறந்த மருந்து என்பதை யார்தான் மறுக்க முடியும்!

(சித்திரங்கள் பேசும்...)