நடைவெளிப் பயணம்



காதல் முக்கோணம்‘‘உண்மையான ஆற்றலை எதுவும் அணை போட முடியாது...’’
சாதாரணமாக சிரானோவுடன் யாரும் வம்பு வைத்துக்கொள்வதில்லை. ஆனால் ஒரு புதுக்குரல் கேட்டது... ‘‘உன் மூக்கைத் தவிர!’’
கொட்டகை திடீரென்று நிசப்தம் ஆயிற்று.

‘‘ஆற்றல் இயல்பில் இருந்தால்தான் அதைப் பேணி வளர்க்க முடியும்...’’
‘‘உன் மூக்கைப் போல...’’நாடகக் கொட்டகை கிடுகிடுவென்று காலியாயிற்று. சில நிமிடங்களுக்கு முன்புதான் நாடகத்தின் கதாநாயகனை, அவனுடைய மோசமான நடிப்பு காரணமாக சிரானோ துரத்தி அடித்திருந்தான். சிரானோவின் மூக்கை ஒருவன் உற்றுப் பார்த்தான் என்று சிரானோ அவனோடு கத்திச் சண்டை போட்டான். சண்டையிடும்போதே உரக்க ஒரு கவிதையை இயற்றினான். கவிதை முடியும்போது அவனைக் காயப்படுத்தி கீழே தள்ளியிருந்தான். காயமுற்றவனை அவன் நண்பர்கள் ஒரு வார்த்தை பேசாமல் தூக்கிச் சென்றார்கள். இதெல்லாம் தெரியாத இந்தப் புது இளைஞன் சிரானோவைச் சீண்டுகிறான்!

சிரானோ அந்த இளைஞனிடம் சொல்கிறான்... ‘‘உனக்கு நல்ல துணிச்சல். கூட்டத்தின் நடுவிலிருந்து நன்றாகவே இளக்காரம் செய்கிறாய். அதோடு நீ அதிர்ஷ்டக்காரன்!’’
‘‘என்னைத் தெரியுமா? நான் புதிதாக ராணுவத்தில் சேர்ந்திருக்கிறேன்...’’
‘‘நீ கிரிஸ்சியான்தானே?’’

‘‘ஆமாம், என்னை மன்னித்து விடுங்கள். நான் எப்படி அதிர்ஷ்டக்காரன்?’’
‘‘என் உறவுக்காரப் பெண் ரொக்ஸான், உன் நினைவாகவே இருக்கிறாள்.’’
‘‘நான் அவளைப் பார்க்க வேண்டுமே...’’

‘‘அது அவ்வளவு எளிதில்லை. முதலில் ஒரு கடிதம் எழுது!’’
‘‘கடிதமா? எனக்கு நான்கு வார்த்தை கோர்வையாகச் சொல்லக் கூடத் தெரியாதே!’’
அந்த இளைஞன் சரியான மக்கு என்று சிரானோவுக்கு தெரிந்து விடுகிறது. அவனுடைய நீளமான மூக்கு காரணமாக, அவன் உயிரே வைத்திருக்கும் ரொக்ஸானிடம் அவன் காதலைத் தெரிவிக்க முடியவில்லை. அவளோ இந்த மடையனை நேசிக்கிறாள்!

கிரிஸ்சியான் எழுதுவது போல சிரானோ ஒரு கடிதம் எழுதித் தருகிறான். ஒர் இரவு அவள் வீட்டு பால்கனி அருகே கிரிஸ்சியானை வரச் சொல்கிறாள். ‘‘நீயும் வா... நீயும் வா...’’ என்று கிரிஸ்சியான் சிரானோவிடம் கெஞ்சுகிறான். ரொக்ஸான் அவளுக்கு வந்த கடிதத்தில் இருந்த கவித்துவத்தினால் கவரப்பட்டிருந்தாள். ஆனால் நேரில் கிரிஸ்சியான் திரும்பத் திரும்ப ‘‘நான் காதலிக்கிறேன்... நான் காதலிக்கிறேன்...’’ என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்லவில்லை. அவன் கடிதத்தில் இருந்த கவித்துவம் ஏதும் பேச்சில் இல்லை. அரையிருட்டுச் சூழலில், அவனைத் தள்ளிவிட்டு சிரானோ தன்னுடைய காதலைப் பொழிகிறான். ரொக்ஸான் அவனைக் கிரிஸ்சியான் என்று நினைத்து மோதிரம் மாற்றிக் கொள்ளத் தயாராகிறாள்.

ஆனால் சிரானோ, கிரிஸ்சியான் இருவரும் உடனே போருக்குக் கிளம்ப வேண்டி வருகிறது. யுத்தகளத்திலிருந்து கிரிஸ்சியான் எழுதுவது போலவே சிரானோ தினம் ரொக்ஸானுக்குக் கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதங்களைப் படித்து ரொக்ஸான் போர்க்களத்திற்கே வந்து விடுகிறாள்! கிரிஸ்சியானுக்கு மூளை மந்தம்தான். ஆனால் முதலிலிருந்தே அவன் எழுத வேண்டிய கடிதங்களையும் அவன் பொழிய வேண்டிய கவிதைகளையும் சிரானோ செய்ததைப் புரிந்து கொள்கிறான். உடனே எதிரி குண்டு படும்படியாக முன்னணிக்குச் செல்கிறான்; இறக்கிறான். அவன் நினைவாக ரொக்ஸான் ஒரு கன்னி மாடத்தில் புகுகிறாள்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை சரியாக ஐந்து மணிக்கு சிரானோ அவளைப் பார்த்து ஒரு வாரச் செய்தியை அவள் சிரிக்கச் சிரிக்கச் சொல்வான். பதினான்கு ஆண்டுகளில் ஒரு வாரம்கூட தவறியதில்லை. ஒரு வேளை உணவு கூட ஒழுங்காகக் கிடைக்காத ஏழ்மைக்குத் தள்ளப்படுகிறான். சிரானோவை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது. அவன் எதிரி ஒருவன் ஆள் வைத்துப் பின்னாலிருந்து ஓர் உருட்டுக்கட்டையால் சிரானோ மண்டையில் அடிக்க வைக்கிறான். சிரானோ எழுந்தாலே மரணம். ஆனால் அன்று வெள்ளிக்கிழமை!

சரியாக மாலை ஐந்து மணிக்குக் கன்னி மாடத்தில் சிரானோ! அவன் இரு தோழர்கள் துடிக்கிறார்கள். ஆனால் ஒன்றுமே ஆகாதது போல சிரானோ ரொக்ஸானிடம் பேசுகிறான். ‘‘கிரிஸ்சியான் எழுதிய கடைசிக் கடிதம் எங்கே?’’ என்று கேட்கிறான். ரொக்ஸான் அதைச் சுருட்டிக் கழுத்தில் தாயத்தாக அணிந்திருக்கிறாள். அக்கடிதத்தை சிரானோ உரக்கப் படிக்கிறான். அவன் அதைப் பார்க்கவே வேண்டியதில்லை. அவன்தானே அதைப் புனைந்தவன். ரொக்ஸானுக்குச் சந்தேகம் வருகிறது. மேலும் அந்தக் குரல் அவள் பால்கனியிலிருந்து கேட்டது. அவள் புரிந்து கொண்டுவிடுகிறாள். ‘‘நான் காதலித்தது உன் கவிதையையல்லவா? அதாவது உன்னை! ஆனால் நீ எனக்காக எல்லாவற்றையும் இழந்து விட்டாயே...’’

‘‘நான் காதலில் தோற்று விட்டேன். இப்போது சாவிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். கையில் கத்தியோடு உயிரை விட வேண்டியவனை, எவனோ விறகு கொண்டு மண்டையைப் பிளந்து விட்டான்!’’சோர்ந்து உட்கார்ந்திருந்த சிரானோ எழுந்து நின்று கத்தியை உருவுகிறான். ‘‘நான் சாவோடு வாட் சண்டை புரிகிறேன்.’’ காற்றை வெட்டுகிறான், குத்துகிறான், அப்படியே கீழே விழுகிறான், பிணமாக.  

‘சிரானோ டி பெர்ஜுராக்’, எட்மண்ட் ரொஸ்டாண்ட் என்ற பிரெஞ்ச் நாடகாசிரியர் எழுதி முதன்முதலாக 1897ம் ஆண்டு மேடையேற்றப்பட்டது. இதை பெர்னார்ட் ஷா போன்றோர் கேலி செய்தார்கள். மிகையுணர்ச்சி. ஆனால் நடிகர்கள் இந்த வேடத்தைப் பெற ஏங்கினார்கள். ‘ஹாம்லெட்’டுக்கு அடுத்தபடியாக மிகவும் விரும்பப்படும் வேடம் சிரானோ என்றாகிவிட்டது. இது நூலாக வெளிவந்து, இன்று வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வந்து விட்டன. ‘சிரானோ’ ஒரு கவிதை நாடகம். நிஜமாகவே ஒரு சிரானோ பதினேழாம் நூற்றாண்டில் பிரான்சில் இருந்திருக்கிறான். அவன் அப்போதே சந்திரப் பயணம் பற்றி நூல் எழுதியிருக்கிறான். அவனுடைய மூக்கு பற்றித் தெரியவில்லை. ஆனால் வீரம், கவிதை, கத்திச்சண்டை, இலக்கிய ரசனை எல்லாவற்றிலும் முதல் வரிசையில் இருப்பவன்.

ஆங்கிலத்தில் அட்லாண்டிக்கின் இரு புறங்களிலும் நாடகமாகப் பெரும் வெற்றி அடைந்தாலும், இது 1952 வரை திரைப்படமாக எடுக்கப்படவில்லை. அப்போது கூட மிகக்  குறைந்த செலவில் எடுக்கப்பட்டது. படம் பெரிதாக ஓடாது போனாலும், சிரானோவாக நடித்த ஜோசி ஃபெரருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. சென்னையில் அண்ணா சிலை இருக்கும் இடத்திற்கு எதிரே முன்பு இருந்த நியூ எல்பின்ஸ்டனில் மூன்றே நாட்கள் ஓடியது. சிரானோவைச் சற்று தாராளமாகப் பணம் செலவழித்து பிரெஞ்ச் மொழியில் எடுத்தார்கள். படத்திற்கு அமோக வரவேற்பு, ஏராளமான விருதுகள்.
இந்திய மொழிகளில் இந்தக் காதல் முக்கோணம் நிறைய வந்து விட்டது. ஷா போன்றவர்கள் என்ன சொன்னால் என்ன... சிரானோ என்றும் இருப்பான் என்று தெரிகிறது, நாடகத்திலும் நிஜ வாழ்விலும்!

அவன் கடிதத்தில் இருந்த கவித்துவம் ஏதும் பேச்சில் இல்லை. அரையிருட்டுச் சூழலில், அவனைத் தள்ளி விட்டு சிரானோ தன்னுடைய காதலைப் பொழிகிறான்.

படிக்க...

‘சிரானோ டி பெர்ஜுராக்’ நாடகத்துக்கு, எனக்குத் தெரிந்து இரு ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஒன்று, கவிதை நடையில் பிரையன் ஹூக்கர் மொழிபெயர்த்தது. அது மிகப் பெரிய சாதனை புரிந்திருக்கிறது. மேடைக்கும் ஹாலிவுட் படத்திற்கும் இந்த மொழிபெயர்ப்பைத்தான் பயன்படுத்தியிருந்தார்கள். இன்னொரு மொழிபெயர்ப்பு உரைநடையில். இருபதாம் நூற்றாண்டு வரை இந்தியர்களுக்கு அன்னிய மொழி என்றால் ஆங்கிலம் மட்டும்தான்.

ஆதலால் சம்பந்த முதலியார் பல ஷேக்ஸ்பியர் நாடகங்களை ஆதாரமாகக் கொண்டு தமிழ் நாடகம் படைத்தாலும், சிரானோ அவர் கவனத்துக்கு வந்ததாகத் தெரியவில்லை. சந்திரபாபுவுக்கு சிரானோ வேடத்தில் ஆசை. ஆனால் மூன்றே நாட்கள் ஓடிய ஆங்கிலப் படத்தை நம்பி எந்தத் தயாரிப்பாளர் முன்வருவார்?
நாடகத்தில் பெரு வெற்றி அடைந்த எல்லா படைப்புகளுக்கும் திரையில் அதே வரவேற்பு கிடைப்பதில்லை. பல உதாரணங்களில் ஒன்று... ‘ராஜராஜ சோழன்’.

(பாதை நீளும்...)