மனித வாழ்க்கையில் துன்பம் என்பது இருந்துகொண்டே இருக்கிறது!



வசந்தபாலன்

‘‘எனக்கு இயக்குநர் கே.விஸ்வநாத்தைப் பிடிக்கும். ‘சங்கராபரணம்’, ‘சலங்கை ஒலி’ என கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அதன் பூரண அழகோடும், தெளிவோடும், நேர்த்தியாக எடுத்து வைத்தவர். எப்படியாவது கலைஞர்களின் வாழ்க்கையை நாமும் பதிவு செய்ய வேண்டும் என்பது விருப்பமாக மாறிவிட்டது. ஒருமுறை ஜெயமோகனோடு ஒரு இரவு பேசிக் கழிக்க நேர்ந்தது.

அவர் பேச்சு அவ்வை சண்முகத்தின் நாடக வாழ்க்கை பற்றியிருந்தது. அதிலிருந்த ரத்தமும் சதையுமான பதிவுகள்தான் என்னை ‘காவியத்தலைவ’னுக்குக் கொண்டு சென்றன’’ - நினைப்பதை நிதானமாகப் பகிர்கிறார் இயக்குநர் வசந்தபாலன். நமக்கு வசந்தபாலனைப் புரிந்துகொள்வதில் எந்த சிரமமுமில்லை. பாலனின் பார்வை சமூகம், வாழ்க்கை, மனித இயல்புகள், மன நுட்பங்கள் என ஆழங்களில் விரிவதுதான்.


‘‘சில காட்சிகளைப் பார்க்கும்போதே, ‘காவியத்தலைவன்’ வேறொரு தளத்தில் இயங்குவது புரிகிறது. எப்படியிருந்தது அதன் தயாரிப்பு?’’‘‘நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை சொல்லணும் என பிரியப்பட்டது உண்மைதான். அதற்கான முயற்சிகள் கைகூட சிரமப்பட வேண்டியிருந்தது. உண்மைத்தன்மைக்கும், சம்பவங்களுக்கும், கதைக்கோர்வைக்கும் நிறைய மெனக்கெட்டேன். ஏராளமான தரவுகளைக் கைக்கொள்ள நேரம் பிடித்தது.

கிட்டப்பா, கே.பி.சுந்தராம் பாளின் குறிப்புகள் சுவாரஸ்யம் மிகுந்தவை. ஆனால், அதை எடுத்துக்கொள்ள தயக்கம் இருந்தது. அவர்கள் ஏற்கனவே பிரபலமானவர்கள். அவர்களின் வாழ்க்கையை சொல்லப் போய், சிறிது பிசகினாலும் அசிங்கமாகிவிடும். படத்தின் மொத்தத் தன்மையும் வேறு மாதிரியாகிவிடும். அதனால் படித்தறிந்த, கேட்டறிந்ததை வைத்து புதிதாக ஒரு ஸ்கிரிப்ட் எழுதினேன். அதை வசனத்துக்காக ஜெயமோகனிடம் ஒப்படைத்தபோது, ‘உங்களது அருமையான ஸ்கிரிப்ட்டில் எனது வசனங்கள் மிளிரும்’ என்றார். எனக்கு அதுவே போதுமானதாக இருந்தது.
இதில் ஒருபோதும் நாடகக்காரர்களின் வாழ்க்கையை தரம் குறைந்ததாக சித்தரிக்கவில்லை. நாடகங்களில் ஒரு ராத்திரி முழுக்க கத்தி, கூப்பாடு போட்டு, வசனம் பேசி, ஆடிப் பாடுகிறவர்களின் வாழ்க்கையில் சொல்ல நிறைய இருந்தது.

அவர்கள் நம்மை மகிழ்வித்ததற்குக் கீழே... அடிமட்டத்தில்... அங்கு தீராத துக்கம் இருந்தது. அவர்களுக்குள்ளும், அவர்கள் வாழ்க்கையிலும் பொறாமை, ஏமாற்று, வஞ்சனை, தவறுகள் என கறுத்த பக்கங்கள் இருந்தன. நான் நியாயத்தின் பக்கமாக செயல்பட்டேன். தர்மம் வெல்லும் என்ற மாதிரியான எளிய நியாயமல்ல அது. அபூர்வமாக சுடர் விடும் ஒளியையும், மனசாட்சியின் வாக்குமூலத்தையும் பதிவு செய்திருக்கிறேன். வித்தியாசப்பட்ட நல்ல சினிமாவை நம்புகிறவர்களுக்கு, வேண்டுபவர்களுக்கு ‘காவியத்தலைவன்’ வரப்பிரசாதம். தெரிந்தோ தெரியாமலோ மாற்று சினிமாவின் பாதையில் போய்க்கொண்டு இருப்பது எனக்கு சந்தோஷமளிக்கவே செய்கிறது.’’

‘‘சித்தார்த், பிரிதிவிராஜ் வேடங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன...’’‘‘கிட்டப்பாவின் சின்ன வயது போட்டோ ஒன்றைப் பார்த்தபோது, அதில் சித்தார்த்தின் முகச்சாயல் தெரிந்தது. அவர் தமிழுக்குக் கிடைத்திருக்கிற அக்கறையுள்ள கலைஞன். அவர் கதையைக் கேட்டபோது உற்சாகத்தோடு முன்வந்தார். பிரிதிவிராஜ் கொஞ்சமும் யோசிக்காமல் ‘சரி’யென் றார். இதற்கு இளையராஜா அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால்தான் மிகச்சரியாக இருக்கும் என நினைத்தேன்.

ரஹ்மான் இதற்கு இசையமைக்க முன்வந்தால் பெரும் எழுச்சி இருக்கும் என நினைத்துபோது, சித்தார்த் தானே அந்த முயற்சியைத் தொடங்கினார். சொல்லும்போதே கதை ரஹ்மானுக்குப் பிடித்திருந்தது அவரது முகபாவத்தில் தெரிந்தது. ‘இரண்டு வாரங்கள் கழித்து சொல்கிறேன்’ என்றவர், சீக்கிரம் சித்தார்த் செல்லுக்கு ‘கிட்டப்பா ரெடி’ என எஸ்.எம்.எஸ் செய்தார். கதைத்தன்மைக்கு மிகவும் பொருத்தமான டியூன்கள். வேறு சினிமாக்களுக்கு பயன்படுத்தவே இயலாத பிரத்யேகமான பாடல்கள். ‘சங்கமம்’ படத்திற்குப் பிறகு இது மாதிரி அவர் செய்ததேயில்லை. ழுழு பாய்ச்சலோடும், உயர்ந்த தளத்திலும் வந்திருக்கிறது. ரஹ்மானைக் கொண்டாடுகிறார்கள் என்றால் அது சும்மா இல்லை.

பிரிதிவிராஜ் ஏராளமான திறமைகளை புதைத்து வைத்திருக்கிற மனுஷன். சித்தார்த், பிரிதிவி இரண்டு பேருக்கும் ஸ்கிரிப்ட் தெரியும், காட்சி நுணுக்கம் புரியும், டயலாக் கூட எழுத முடியும். எவ்வளவு தூரம் அழுத்தம் கொடுக்கலாம்னு தெரிஞ்சவங்க... இதுக்கு மேலே நாசர், பொன்வண்ணன், சிங்கம்புலி, தம்பி ராமய்யா எல்லாருமே டைரக்ஷன் தெரிஞ்சவங்க. இவங்களை ஏமாத்தவே முடியாது. நீங்கள் இந்த ஸ்டில்களை பார்க்கும்போது கிடைக்கும் மனச்சித்திரத்தை விட, பல மடங்கு செறிவுள்ளதா இருக்கும் இந்த சினிமா. கதையம்சம் நிறைந்த தெளிவான வாழ்க்கையின் பதிவிற்கு தயாராக இருக்க நான் தமிழ்மக்களை அழைக்கிறேன்...’’

‘‘நீங்கள் ஹீரோயின்களை வெறும் கவர்ச்சிக்காக பயன்படுத்துவதில்லை...’’‘‘இதிலும் அதே நடைமுறைதான். ராம் கோபால் வர்மாவின் ‘சத்யா 2’ டிரெய்லர் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. அதன் ஹீரோயின் அனய்காவைத் தேடிப் பார்த்தபோது, அவரை எவ்வழியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடைசியில் ராம்கோபால் வர்மாவின் அலைபேசிக்கு என்னைப் பற்றி சிறு குறிப்பு சொல்லிவிட்டு, அனய்காவின் எண்ணைக் கேட்டு எஸ்.எம்.எஸ் செய்தேன்.

அடுத்த 10 நிமிஷத்தில் பதில் வந்தது... ‘நாளை அனய்கா உங்களோடு பேசுவாள்’. அனய்கா அதே போல பேசிவிட்டு, ஷூட்டிங் வந்து சேர்ந்தார். வேதிகாவே என் படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அவரே சில போட்டோக்களை கதைத் தன்மையோடு எடுத்து அனுப்பி வைத்தார். மிகவும் பொருத்தமாக இருந்தது. இவர்கள் என் கதைக்கு நியாயம் செய்திருக்கிறார்கள் என நம்பகமாகச் சொல்வேன்!’’‘‘ஒரு படத்தை எடுக்க எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?’’

‘‘நான் எப்பவும் அடர்த்தியாக கதை சொல்றதை விரும்புவேன். ஒரு சினிமா உங்களை எமோஷனலாக தொட வேண்டும். ‘வெயில்’ படத்தில் 20 வருஷம் கழிச்சு வீட்டுக்குத் திரும்பியவனின் வலி அவ்வளவு பெரிசா இருந்தது. எத்தனை பேர் கலர்ஃபுல்லாக லைஃப்பை பார்க்கிறாங்க? மனித வாழ்க்கையில் துன்பம்ங்கிறது இருந்துக்கிட்டே இருக்கிறது... ஏதோ ரெண்டு பர்சென்ட் சந்தோஷமா இருக்கிறதை கணக்கில் சேர்க்கக் கூடாது. என்னைப் பொறுத்தவரை புதுசா, நேர்மையா, விறுவிறுப்பா, ஏமாற்றம் இல்லாமல், பொய் இல்லாமல் படம் செய்யணும்னு நினைக்கிகீறேன்!’’

- நா.கதிர்வேலன்