எஞ்சினியரிங்... எந்தக் கல்லூரி நல்ல கல்லூரி?



இந்தியாவில் அதிக பொறியாளர்களை உருவாக்கும் மாநிலங்களில் தமிழகத்துக்கு 2வது இடம். (முதல் இடம் ஆந்திராவுக்கு!) தற்போதைய நிலவரப்படி 570 கல்லூரிகள்... சுமார் 2 லட்சம் இடங்கள். இந்த ஆண்டு இன்னும் அதிகமாகலாம். எஞ்சினியரிங் சீட் கிடைக்குமா என்ற கவலையே தேவையில்லை. ஆனால் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகள் பற்றி ஏகப்பட்ட புகார்கள்... போதிய உள்கட்டமைப்பு வசதியில்லை; தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இல்லை;

நவீன உபகரணங்கள் இல்லை; பிராக்டிகல் வகுப்புக்கான ஏற்பாடுகள் இல்லை; வளாகத் தேர்வுகள் நடப்பதே இல்லை; இப்படி ஏகப்பட்ட ‘இல்லை’கள். இம்மாதிரியான கல்லூரிகளில் புத்தகத்தைத் தாண்டி வேறெதையும் கற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. வெறும் பாடப் புத்தகங்களை மட்டுமே படித்து, செயல்திறன் அற்று வரும் மாணவர்கள்தான் வேலையில் பின்தங்கி நிற்கிறார்கள். என்றால், நல்ல கல்லூரிகளை எப்படி அடையாளம் காண்பது?

அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் பிரிவு செயலாளர் ரேமண்ட் உத்தரியராஜ் இதற்குப் பதில் சொல்கிறார்... ‘‘முதலில் நீங்கள் விரும்பும் கல்லூரியின் தேர்ச்சி விகிதத்தை சோதிக்க வேண்டும். அதில் திருப்தி ஏற்பட்டால், நேரடியாக கல்லூரிக்குச் சென்று ‘போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றனவா’ என்று பார்க்க வேண்டும். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்று விசாரிக்க வேண்டும்.

 படிப்பு, பாடப் புத்தகங்கள் தவிர ‘எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி’ இருக்கிறதா என்று விசாரியுங்கள். பழைய மாணவர்கள், தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள்தான் உங்களுக்கு சோர்ஸ். நல்ல நூலகம் இருக்க வேண்டும். உலகளாவிய தொழில்நுட்ப மேகசின்கள் கிடைக்க வேண்டும். வளாகத் தேர்வுகள் நடக்கின்றனவா; எந்தெந்த நிறுவனங்கள் ஆளெடுக்க வருகின்றன; ஆண்டுக்கு எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லாம் ஓகே என்றால் தாராளமாகத் தேர்வு செய்யலாம்’’ என்கிறார் அவர்.அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில், 2013ம் ஆண்டு ரேங்க் அடிப்படையில் கல்லூரிகளில் கிடைத்த இட நிலவரங்களை பட்டியலிட்டு உள்ளார்கள். அதை உத்தேசமாக வைத்து, ஒரு பட்டியல் தயார் செய்யலாம். நீங்கள் விரும்பும் 5 கல்லூரிகள்; 3 படிப்புகள். கவுன்சிலிங் ஹாலில் நீங்கள் விரும்பும் படிப்போ, கல்லூரியோ கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அப்போது அடுத்த சாய்ஸ் உங்களிடம் தயாராக இருக்க வேண்டும்.

நீங்கள் விரும்பும் கல்லூரி எத்தனை ஆண்டுகளாக இயங்குகிறது; அங்கு முதுநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றனவா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். முதுநிலைப் படிப்புகள் உள்ள கல்லூரியில் ஓரளவுக்கு வசதிகள் இருக்கும். ஆங்கிலம், ஜெர்மன் போன்ற வேலைவாய்ப்புக்கு உதவும் மொழிகள், பர்சனாலிட்டி டெவலப்மென்ட் பயிற்சிகள் வழங்கப்படுகின்றனவா என்று கேளுங்கள். இதெல்லாம் நல்ல கல்லூரிக்கான கூடுதல் தகுதிகள். 

சரி... கல்லூரியை முடிவு செய்தாயிற்று! கவுன்சிலிங்கில் கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?அதற்கு வழிகாட்டுகிறார், அண்ணா பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுகள் மற்றும் சேர்க்கைப் பிரிவு முன்னாள் இயக்குனர் ப.வே.நவநீதகிருஷ்ணன்.‘‘கொஞ்சம் திட்டமிடல் இருந்தால், குழப்பமின்றி கவுன்சிலிங் நடைமுறைகளை முடிக்கலாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு 2 மணி நேரம் முன்பாகவே மையத்துக்குச் சென்று விடுங்கள். சென்றதும், அங்குள்ள வங்கி கவுன்டரில் டெபாசிட் பணத்தைக் கட்ட வேண்டும்.

டெபாசிட் தொகை, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 5000 ரூபாய். எஸ்.சி/எஸ்.டி/எஸ்.சி.ஏ. பிரிவு மாணவர்களுக்கு 1000 ரூபாய். இந்தப் பணம் படிப்புக் கட்டணத்தில் கழிக்கப்படும். இந்த டெபாசிட்டை பணமாகவும் செலுத்தலாம் ‘Secretary, TNEA2014’ என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க டி.டியாகவும் எடுத்து வரலாம். பணம் கட்டியதும் கவுன்சிலிங் படிவம் தருவார்கள்.

கவுன்சிலிங் மையத் தின் ஒரு பகுதியில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு கல்லூரிகளின் இட நிலவரம் அப்டேட் ஆகிக்கொண்டிருக்கும். அங்கு அமர்ந்து இடநிலவரங்களைக் கண்காணிக்கலாம். உரிய நேரத்தில் மைக் மூலமாக மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். மாணவருடன் கூடுதலாக ஒருவர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படு வார். அறிவிப்பு அறையின் முகப்பில் உங்கள் வருகை பதிவு செய்யப்படும். பிறகு பிரமாண்டமான ஒரு அறையில் அமர வைக்கப்படுவீர்கள்.

அங்கு கவுன்சிலிங் நடைமுறைகள் உங்களுக்கு விளக்கப்படும். சான்றிதழ்களை எந்த வரிசையில் அடுக்க வேண்டும் என்று சொல்லித் தருவார்கள். பின் அங்கிருந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் அறைக்கு அனுப்பப்படுவார்கள்.

 அங்கே நவீன கருவிகள் மூலம் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பரிசோதிக்கப்படும். பிறகு, கவுன்சிலிங் அரங்கத்துக்கு அனுப்பப்படுவீர்கள். அங்கே கம்ப்யூட்டரின் முன்னால் உங்களுக்கு உதவி செய்ய ஒருவர் காத்திருப்பார். உங்கள் விருப்பப்படி கல்லூரியையும், படிப்பையும் தேர்வு செய்து தருவார். பிறகு மாணவர் மட்டும் முதல் தளத்தில் உள்ள அலுவலகத்துக்குச் சென்று கல்லூரி சேர்க்கை ஆணையைப் பெற்றுக்கொள்ளலாம்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் கவுன்சிலிங்கில் பங்கேற்க இயலாதவர்கள் மற்றொரு நாளில் பங்கேற்கலாம். ஆனால் அப்போது உள்ள காலி இடங்களின் அடிப்படையில் மட்டுமே அவர்கள் கல்லூரியையும், படிப்பையும் தேர்வுசெய்ய முடியும்’’ என்கிறார் நவநீதகிருஷ்ணன். சரி... அடுத்த வாரம் கலை, அறிவியல் படிப்புகளுக்கான வாய்ப்புகள் பற்றி அலசுவோம்.

எச்சரிக்கை

* கவுன்சிலிங்கில் பங்கேற்க வெளியூர்களிலிருந்து வருவோரைக் குறிவைத்து ஏராளமான இடைத்தரகர்கள் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெருங்களத்தூர், கத்திபாரா, கோயம்பேடு பகுதியில் வந்திறங்கும் பெற்றோரை குறிப்பிட்ட கல்லூரி பற்றிப் பேசி ‘பிரெய்ன் வாஷ்’ செய்து, வாகனத்திலேயே அந்தக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று, உபசரித்து, சாப்பாடு போட்டு கவுன்சிலிங் மையத்துக்கும் அழைத்துச் சென்று தகுதியற்ற கல்லூரியில் தள்ளி விடுவார்கள். ஒரு மாணவனுக்கு இவ்வளவு என்ற அடிப்படையில் இடைத்
தரகர்களுக்கு கமிஷனாம். அடையாளம் தெரியாதவர்கள் அணுகிப் பேசினால் தவிர்த்து விடுங்கள்.

* சில கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சியளித்து தங்கள் கல்லூரி வளாகங்களிலும், வெளிப்புறங்களிலும் நிறுத்தியிருப்பார்கள். நீங்கள் பார்வையிடப் போகும்போது அந்தக் கல்லூரியைப் பற்றி ‘ஆஹா... ஓஹோ...’ என்பார்கள். நம்பி விடாதீர்கள். கல்லூரி விஷயத்தில் கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரித்து அறிவதே மெய்.

அதென்ன சாண்டவிச்?

கவுன்சிலிங் தொடர்பான பொதுவான சில சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் முனைவர் நவநீதகிருஷ்ணன்.
சில பாடப்பிரிவுகளுக்குப் பின்னால் ஷிஷி என்று குறிப்பிடுகிறார்களே... அது ஏன்?
Self Supporting என்பதன் சுருக்கமே ஷிஷி. பல பொறியியல் கல்லூரிகள் அரசின் உதவி பெற்றே இயங்குகின்றன. அவற்றில் சில பாடப்பிரிவுகள் மட்டும் அரசு உதவியில்லாமல் சுயநிதியில் நடத்த அனுமதிக்கப்படுவதுண்டு. ஷிஷி பிரிவில் உள்ள படிப்புகளில் சேரும் மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.

சாண்ட்விச் கோர்ஸ் என்றால் என்ன?

சாதாரணமாக பி.இ, பி.டெக் போன்ற பொறியியல் படிப்புகளின் காலம் 4 ஆண்டுகள். சில கல்லூரிகளில் சில பாடப்பிரிவுகள் ‘சாண்ட்விச் கோர்ஸ்’ என்ற பெயரில் 5 ஆண்டுகள் வழங்கப்படுகின்றன. இதில் சேரும் மாணவர்களுக்கு முற்பகலில் தொழிற்கூடங்களில் பயிற்சியும், பிற்பகலில் வகுப்பும் நடத்தப்படும்.

மரைன் எஞ்சினியரிங் படிப்பில் சேர்வதற்கான தகுதிகள் என்ன?

பிற பொறியியல் படிப்புகளுக்கான விதிமுறைகள் மரைன் எஞ்சினியரிங் படிப்புக்குப் பொருந்தாது. +2 பொதுத்தேர்வில் எல்லாப் பிரிவினருமே இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களில் 60%, ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 157 செ.மீ உயரமும் 48 கிலோ எடையும் இருக்க வேண்டும்.

- வெ.நீலகண்டன்