அவன் அவள் unlimited



ரஜினியை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது?

கோகுலவாச நவநீதன்

ஆண்கள் உதடுகளாலும், பெண்கள் கண்ணீராலும் பொய் சொல்கிறார்கள்!
- நஸ்ஸிம் நிகோலஸ் தலேப்

‘‘என் பக்கத்து வீட்டு பால்கனி ஃபிகரை நீ பார்க்கணுமே... அய்யோ, செம அழகு மச்சான்!’’ - இந்த டைப்பில் பல ஃபீலிங்குகளை நாம் கேட்டிருப்போம். அதை நம்பி, என்னென்னவோ எதிர்பார்ப்புகளோடு ஒரு சுபயோக சுபதினத்தில், அந்த நண்பன் வீட்டுக்கே போய் அந்த பால்கனி ஃபிகரை நோட்டம் விட்டால், ‘‘ப்பா... யார்ரா இது? பேய் மாதிரி?’’ என எகிறத் தோன்றும். தவறு அவன்மேல் இல்லை. அவன் கண்ணுக்கு அவள் அழகுதான். ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் அழகு உண்டு. அந்த அழகு, உலகில் யாரையாவது நிச்சயம் கவர்ந்து இழுத்து விடும். ஆனால் சில பேரின் அழகு மட்டும் எல்லோரையும் இழுக்கிறதே... அது எப்படி?

‘அழகுங்கறது பாக்குற பார்வையிலதான் இருக்கு’, ‘கிளியோபாட்ராவை ஆன்டனியின் கண்களால் பார்க்க வேண்டும்’ என்றெல்லாம் பேசுகிறோம்.
ஆனால், எந்தக் கண்ணால் பார்த்தாலும் எம்.ஜி.ஆர் அழகனாகத் தெரிந்தாரே... எப்படி? இப்போதும் ரஜினி காந்த், ஐஸ்வர்யா ராய் போன்றவர்களை கிட்டத்தட்ட எல்லோருக்கும் பிடிக்கிறதே... அது ஏன்? நம்மாலும் அவர்களைப் போல் ஆக முடியுமா?

 ‘‘கருத்து வேறுபாடு இன்றி, எல்லோருக்கும் பிடித்த அழகு என்பது மனிதத் தோற்றங்கள் அல்ல. இயற்கைக் காட்சிகள்தான்’’ - நண்பரும் மானுடவியலாளருமான ஒருவர், இப்படியொரு லீட் கொடுத்தார். ஆக, இயற்கை எனும் அழகிலிருந்தே துவங்குவோம். பொதுவாக ‘இயற்கை’ என்று நாம் எதைக் குறிப்பிடுகிறோம்? நாம் கவிதைகளில் வர்ணிக்கும் அளவுக்கு அந்த இயற்கை அவ்ளோ அழகா என்ன? சென்னைப் பல்கலைக்கழகத்தின் உளவியல்துறைப் பேராசிரியர் சுவாமிநாதனிடம் கேட்டோம்...

‘‘தனக்கொரு காரியம் ஆகவேண்டியிருந்தால்தான் மனிதன் எதையுமே போற்றுவான். இயற்கையையும் அவன் சும்மா வர்ணிக்கவில்லை. வறண்ட பாலைவனமும் இயற்கைதான். ஆனாலும், பச்சைப் பசேலென்ற சூழலும், நீர்நிலை, அருவி போன்றவையும்தான் நம்மைப் பொறுத்தவரை அழகான இயற்கைக் காட்சிகள். காரணம், இவை மனிதனுக்கு உணவு தருகின்றன. மனிதன் உள்ளிட்ட பாலூட்டி விலங்குகள் இதைப் பார்க்கும்போது, ‘அப்பாடா... ரொம்பக் காலத்துக்கு இங்கே சாப்பாட்டுப் பஞ்சம் இல்லை’ என்ற நிம்மதி பிறக்கிறது. இந்த நிம்மதியைத்தான் நாம் அழகு என்கிறோம்’’ என்றார் அவர். உலகில் பெரும்பாலான உளவியலாளர்களின் கருத்தும் இதுதான்.

சரி, இப்போது மனிதர்களின் அழகுக்கு வருவோம். இயற்கைக்கு அடுத்து அனைவரும் அழகென்று ஒப்புக்கொள்வது ஐஸ்வர்யா ராயைத்தான். அப்படி அவரிடம் என்ன இருக்கிறது? கறுப்புதான்... கண்டக்டர்தான்... ஆனாலும் ரஜினி உலகத்தையே கவர்கிறாரே எப்படி? இதற்கு அறிவியலாளர்கள் தரும் ஒரே பதில்... சிம்மட்ரிக் (symmetric). அட, ஆமாங்க! நம்ம கலாசாரத்தில் சிம்ம முகம் என்றால்தான் பெருமை. ஆனால், உலகெங்கும் இந்த சிம்மட்ரிக் முகத்துக்குத்தான் கெத்து என்கிறது சயின்ஸ்.

அது என்ன சிம்மட்ரிக் முகம்?
இதையும் சுவாமி
நாதனே விளக்கினார்...

‘‘மனித மனம் பொதுவாகவே காட்சிகளில் இருக்கும் ஒழுங்கை ரசிக்கக் கூடியது. ஒழுங்கு மாறாமல் வரிசையாகச் செல்லும் எறும்பைக் கூட நாம் ரசிப்போம். ஒவ்வொரு பொருளிலுமே அந்த ஒழுங்கு உண்டு. உதாரணத்துக்கு இங்கே பாருங்கள்... இந்த வடிவங்களில் உங்களுக்கு எதைப் பிடித்திருக்கிறது? என் சாய்ஸ் இதில் சதுரம்தான். சிலருக்கு செவ்வகத்தையும் முக்கோணத்தையும் பிடிக்கலாம். இந்த வடிவங்கள் அனைத்திலுமே ஓர் ஒழுங்கு உள்ளது. ஆனால், கடைசி வடிவத்தை உலகின் பெரும்பாலான மக்களுக்குப் பிடிக்காது. காரணம், அதில் ஒழுங்கு இல்லை. இதே மாதிரிதான் மனித முகமும்.

ஒருவரின் முகத்தை நீள வாக்கில் சம பங்காக கோடு போட்டுப் பிரியுங்கள் (அட, போட்டோவில்தாங்க!). அதில், இடது பக்கம் போலவே வலது பக்கமும் அமைத்திருந்தால் அது சிம்மட்ரிக் முகம். ஏன் பிடிக்கிறதென்று தெரியாமலே இப்படிப்பட்ட முகங்களை நமக்குப் பிடிக்கும். ஒருவேளை இடப்பக்கக் கண்ணை விட வலப்பக்கக் கண் கொஞ்சம் பெரியது, உதடும் வலப்பக்கம் கொஞ்சம் நீளம் என்று வித்தியாசங்கள் இருந்தால், அது அதிகம் பேர் விரும்பாத முகங்களாக இருக்கும். இதில் ஆண் முகம், பெண் முகம் என்ற பேதம் இல்லை. சில பேர் கறுப்பாக இருந்தாலும் களையாக இருப்பதாகச் சொல்வோம் அல்லவா? அந்தக் ‘களை’, பெரும்பாலும் இந்த சிம்மட்ரிக்கைத்தான் குறிக்கும்!’’ என்றார் அவர்.

இந்த சிம்மட்ரிக் முகத்தை அடையாளம் காண சிம்பிளான வழி, ஒருவரின் போட்டோவை பாதியாக வெட்டி அதை முகம் பார்க்கும் கண்ணாடியில் வைத்துப் பார்ப்பதுதான். கண்ணாடியின் பிரதிபலிப்பால் முழுமையாக்கப்படும் அந்தப் படம், ஒரிஜினல் முகம் போலவே இருந்தால், போட்டோவில் இருப்பவர் சிம்மட்ரிக் முகத்துக்காரர். என்றைக்காவது ஒருநாள், அவர் அனைவரும் வியக்கும்படி ஓர் உயரத்துக்குப் போகவும் பிரபலமாகவும் சான்ஸ் அதிகம். ஒருவேளை, கண்ணாடியில் அவரை விட அழகாக வேறொரு உருவம் தெரிந்தால், அவர் சிம்மட்ரிக் வரம் பெறாத சராசரி என முடிவு கட்டிக் கொள்ளலாம்.

ஓகே... முகத்தில் ஓர் ஒழுங்கை - அதாங்க, இந்த சிம்மட்ரிக் இலக்கணத்தை - ஏன் நாம் எதிர்பார்க்கிறோம்? ‘‘இதற்கும் இனப்பெருக்கம்தான் காரணம்’’ என்கிறார்கள் லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்களான லிட்டில் மற்றும் ஜோன்ஸ்.

‘‘இயற்கை நம் எல்லோருக்குமே வலப்பக்கம் - இடப்பக்கம் ஒரே மாதிரியுள்ள சிம்மட்ரிக் முகத்தைத்தான் தர விரும்புகிறது. ஆனால், கருவறையில் இருக்கும்போது தாக்கும் வேண்டாத தொற்றுகள்தான் நம் முகத்தை மாற்றிவிடுகின்றன. அந்தத் தொற்றுகளை எதிர்த்து நின்று வெற்றியடையும் கருவே சிம்மட்ரிக் முகத்தைத் தக்க வைக்கிறது. ஆக, ஒரு பெண்ணைப் பொறுத்த வரையில் சிம்மட்ரிக் முகம் கொண்ட ஆண்தான் ஆரோக்கியமானவன். ஆணுக்கும் இதே ஃபீலிங்தான்’’ என்கிறார்கள் அவர்கள்.

ஒரு அழகான பெண்ணை ‘சிலையே’ என்றும் ‘ஓவியமே’ என்றும் வர்ணிப்பது நம் பாரம்பரியப் பழக்கம். அதன் பின்னால் இருப்பதும் இந்த சிம்மட்ரிக் சைக்காலஜியே. மனித உருவாக்கங்களான சிலையும் ஓவியமும் சிம்மட்ரிக் இலக்கணங்களின்படி வடிக்கப்படுபவை.
ஸோ, கவிஞர்கள் கவனத்துக்கு...

இனிமேல் ‘சிம்மட்ரிக் முகமே!’ என்று நம் வர்ணனையை தாராளமாக மாற்றிக்கொள்ளலாம். சரி... இந்த அழகு டாபிக் அப்படியே இருக்கட்டும். +2, பத்தாம் வகுப்பு என இது ரிசல்ட் சீஸன். வழக்கம் போல ‘மாணவன் முதலிடம்...’, ‘மாணவிகள் அதிகம் சாதித்தனர்’ எனப் ‘பிரித்து மேய’ நாம் ரெடி. அடிப்படையில், ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளை இயங்கும் விதமே வேறு வேறு என்கிறார்கள் உளவியலாளர்கள். அப்படியிருக்க, மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஒரே சிலபஸ், ஒரே தேர்வென்பது சரியா?

நிஜமாகவே நம்ம சூப்பர் ஸ்டாருக்கு சிம்மட்ரிக் முகமா? இதோ நம் போட்டோ ஷாப் ஆராய்ச்சி...

தலைவரை ‘ரங்கா’வுலயும் புடிக்குது... இப்ப ‘லிங்கா’வுலயும் புடிக்குது. அதுக்கு இதுதான் காரணமோ!

(தேடுவோம்...)