பட்ஜெட் ஸ்பாட் மேகமலை..!



சம்மர் எஸ்கேப்

தேயிலை, காப்பி, ஏலக்காய் தோட்டங்கள் நாசியை நிறைக்க, கடல் மட்டத்திலிருந்து 6,500 அடி உயரத்தில் சிலிர்க்க வைக்கும் ஜில் அனுபவத்துக்கு சரியான ஸ்பாட் மேகமலை. பெயருக்கேற்றபடி மேகங்கள் தவழும் அதிகாலைப் பொழுது, டூயட் பாட்டின் பின்னணி போல தேயிலை பறிப்பவர்களின் வரிசை நடை. அவ்வப்போது பார்க்க நேர்கிற யானைக் கூட்டங்கள் என கலக்கல் பேக்கேஜ் இது. என்னென்ன பார்க்கலாம்?

ஹைவேவிஸ்: சின்னமனூரிலிருந்து மேகமலையைத் தாண்டி 32வது கிலோ மீட்டரில் இருக்கிறது ஹைவேவிஸ் மலைப்பகுதி. இதனை தலைமையாகக் கொண்டு மணலாறு, மேல் மணலாறு, வெண்ணியாறு, மகராஜன் மெட்டு, இரவங்கலாறு என இயற்கை அழகு குவியல்களைக் கொண்ட மலை கிராமங்கள் இருக்கின்றன. வருடத்தில் 8 மாதங்கள் வரை இங்கு மழை பெய்யும். இந்தத் தண்ணீரைத் தேக்கி வைக்க ஐந்து அணைகள் அழகாக உருவாக்கப்பட்டுள்ளன. அணைகளை இணைக்கும்விதமாக சுரங்கப்பாதைகள் இருப்பதும் இங்கு ஸ்பெஷல்! 

சுருளி அருவி: பறவைப் பார்வையில் இருந்து பார்த்தால் மேகமலையின் மறுபக்கமே சுருளி அருவி தெரியும். ஆனால் மலையைச் சுற்றி 45 கி.மீ சுற்றிச் செல்ல வேண்டும். 150 அடி உயரத்தில் இருந்து வெள்ளி உருகி வழிவது போல் கொட்டும் இந்த சுருளி தீர்த்தத்திற்கு தூவானம் அணையிலிருந்து விசேஷ நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
கம்பம் பள்ளத்தாக்கு: தென்னிந்தியாவின் மிகப் பசுமையான பள்ளத்தாக்கு என சும்மாவா சொன்னார்கள். அழகு ததும்பும் திராட்சைத் தோட்டங்களும் இந்தப் பகுதியின் ஸ்பெஷல். மேகமலையில் இருந்து 47 கி.மீ தூரத்தில் உள்ளது இந்த இயற்கைப் பொக்கிஷம்.

எப்படிப் போவது?


தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து 33 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மேகமலை. வழியில் இயற்கைக் காட்சிகள் அதிகம். சின்னமனூரிலிருந்து அரசு பஸ்சில் மேகமலை செல்லக் கட்டணம், ரூ.20. ஹைவேவிஸிற்கு 28 ரூபாயும், ஹைவேவிஸ் வழியாக 7 வது மலைக்கிராமமான இரவங்கலாறு வரை செல்ல 35 ரூபாயும்தான் பஸ் கட்டணம்.

எவ்வளவு செலவாகும்?


சுற்றுலாப் பயணிகள் தங்க ஹைவேவிஸ் பேரூராட்சியிலிருந்து 10 அறைகள் கட்டப்பட்டு தங்கும் விடுதியாக இருக்கிறது. ஒரு அறைக்கு ஒரு நாள் வாடகை ரூ.1,000. ஹைவேவிஸில் தங்கியபடி மேகமலையையும் அதைச் சுற்றிய மலைக்கிராமங்களையும் மற்ற இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம். ஆனால் வாகன வசதி செய்து கொள்ள வேண்டும். செலவுகளைப் பொறுத்தவரை மேகமலை, நிஜமான பட்ஜெட் சுற்றுலா ஸ்பாட்தான்!

கட்டுரை, படங்கள்: குமரவேலு