காலம்



‘‘ஏய் உஷா... இங்க வா! இந்த ரசம், அவியலை பக்கத்து வீட்டு மேகலாகிட்ட கொடுத்துட்டு வா! அவ கர்ப்பமா இருக்கா... வாய்க்கு ருசியா வேண்டியிருக்கும். கொடுத்தா சந்தோஷமா சாப்பிடுவா’’ - அம்மா கொடுத்தனுப்பினாள்.அந்தப் பாத்திரத்தைப் பார்த்ததுமே மேகலாவுக்குப் பூரிப்பு.

‘‘வாடி உஷாக்குட்டி! அம்மா கொடுத்து அனுப்பினாங்களா?’’ என்று அகமும் முகமும் மலர வாங்கிக்கொண்டாள். உடனே ருசி பார்த்து, ‘‘பிரமாதம்’’ என்ற மேகலாவின் மகிழ்ச்சி உஷாவையும் தொற்றியது.இப்படி சிறு வயது நினைவுகளில் மூழ்கியிருந்த உஷாவுக்கு, தற்போது தன் பக்கத்து வீட்டுப் பெண் அகிலா கர்ப்பமாக இருப்பது நினைவுக்கு வந்தது. வாய்க்கு ருசியாய் இருக்குமே என மாங்காய் சாதமும் பொரித்த வடகமும் தயார் செய்து எடுத்துக்கொண்டு, அகிலா வீட்டுக் கதவைத் தட்டினாள்.லென்ஸ் வழியே பார்த்து கதவைத் திறந்தாள் அகிலா.

‘‘வாங்க! என்ன விஷயம்?’’ என்றவளிடம் பாத்திரத்தை நீட்டினாள் உஷா.
‘ஆகா... ரொம்ப தேங்க்ஸ்!’ என்று, அகமும் முகமும் மலர வரும் வார்த்தையை எதிர்பார்த்த உஷாவுக்கு சுரீர் என சுட்டது அகிலாவின் அடுத்த வார்த்தை...
‘‘ஏங்க? மீந்து போச்சா?’’    

ஆர்.உஷா