வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்



சந்தானம் நிலம் விற்கப் போன இடத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு, அதோடு ஊரின் பெரிய தனிக்காட்டு ராஜாவின் அகந்தையை அழித்து அவர் பெண்ணையும் கைப் பிடித்து வருவது தான் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. தெலுங்கில் செம ரகளையாய், கல்லா கட்டிய ‘மரியாதை ராமண்ணா’வை இவ்வளவு நாள் கழித்து, தமிழ்ப்படுத்தி இருக்கிறார்கள்.

சென்னையில் கேன் வாட்டரை டப்பா சைக்கிளில் கொண்டு போய் கடைக்குக் கடை விநியோகம் செய்பவர் சந்தானம். தனக்கு சொந்த ஊரில் கொஞ்சம் நிலம் இருப்பதாக சித்தப்பா மூலம் அறிந்து, அடுத்த நிமிடமே அங்கு பறக்கிறார். ஏற்கனவே அவர் குடும்பத்தையே பழிவாங்க நினைக்கும் குடும்பத்தின் சூது அறியாமல், அங்கேயே போய் மாட்டிக் கொள்கிறார். கூடவே, ரயிலில் வந்த அந்த வீட்டுப் பெண்ணின் சிநேகம் தொடர்கிறது. வீட்டில் ரத்தம் பார்க்கக் கூடாது(!) என்ற சென்டிமென்ட்டில் தப்பிப் பிழைக்கும் சந்தானம்,

கடைசி வரை தப்பித்தாரா என்பதுதான் பரபர க்ளைமாக்ஸ்.கொஞ்சமும் தமிழ்ச் சூழலுக்கு பொருந்தி வராத கதையாக இருந்தாலும், எடுத்துக் கொண்டு வெளுத்துக் கட்டியதில் இருக்கிறது சந்தானத்தின் கெத்து! புது ஹீரோ ‘லுக்’கில் செழிப்பாய் இருப்பதில் ஆகட்டும், ஓடும் ரயிலில் ‘ராஜகுமாரன் அண்ட் கோ’வை கலாய்த்து சலம்புவது ஆகட்டும், எப்போதும் மாறாதது ஆண் மனசு என அங்கங்கே கருத்துக்கணிப்பு கேட்டு கலக்குவதில் ஆகட்டும்...

சந்தானம் அட்டகாசம். அதிலும் ஹீரோயினை முதன்முதலாக பார்த்து சொக்கிப் போய் கொடுக்கும் காதல் ரீயாக்ஷன், நச் பாஸ்! ஆனால், வீட்டிற்குள் உங்களை அடைத்து வைத்த பிறகு, என்ன செய்வதென அறியாமல் நீங்கள் திணறுவது மாதிரியே நாங்களும் திணற வேண்டியிருக்கிறது. சந்தானத்தின் டிரேட் மார்க் அலப்பறைகளை ஹீரோ ஸ்தானத்திற்காக அவர் கைவிட நேர்கிறது. எப்படிப் பார்த்தாலும் ‘காமெடி ஃபில்லராக’ இருந்த சந்தானத்திற்கு இது அடுத்த கட்டம்தான். ஆனால், சென்டிமென்ட் வகையறா ரீயாக்ஷன்களில் இன்னும் மைல்ஸ் டு கோ சந்தானம்!

அறிமுக நாயகி அஸ்னா சவேரி சில கோணங்களில் திணற அடிக்கிறார். பல கோணங்களில் பதற்றப்பட வைக்கிறார். ஆனால், நடிப்பைப் பொறுத்தவரை இன்வால்வ்மென்ட் ஒவ்வொரு ஃப்ரேமிலும் வெளிப்படை. ரயிலில் சந்தானத்தை பார்த்த அதே துடிப்பு வீட்டிலும் தொடர்கிறது. கடைசியில் துடிக்கும் க்ளைமாக்ஸில் கதறி அழுது, புலம்பி பட்டையைக் கிளப்பிவிட்டார்.கொஞ்ச நேரமே வந்தாலும் சிரிசிரி மேளா நடத்துகிறார் ‘விடிவி’ கணேஷ். தம்பியின் நினைவு நாளிலேயே பையனுக்கு நிச்சயதார்த்தம் நடத்தத் துடிக்கும் அவசரம், தப்பிக்க நினைக்கும் சந்தானத்தின் ஐடியாக்களை பிடித்துக் கொண்டு சிக்ஸர் அடிப்பது என நல்ல ரகளை! எப்படியோ சந்தானம்-கணேஷ் காமெடி கெமிஸ்டரி... பம்பர் லாட்டரி!

பின்னணியில் பதறும் இசை, பாடல்களில் மட்டும் ஏனோ வசப்பட மறுக்கிறது. இந்த இடத்தில் தெலுங்கு பதிப்பின் பிரமாத பாடல்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே முடியவில்லை. துள்ளலும் வேடிக்கையும் பழிவாங்கும் படலமுமாக பயணித்து முடியும் க்ளைமாக்ஸ்... அது எதிர்பார்க்கும் சூழலுக்கு ஏற்ப ரிச்சர்ட் நாதனும், சக்தியும் கேமராவில் பின்னி எடுக்கிறார்கள்.
சரி... ஆசைப்பட்டது நடந்துவிட்டது. வாங்க சந்தானம், தொடர்ந்து ரகளை பண்ணி, சிரிக்க வச்சு, எல்லாரையும் கலாய்க்கலாம்!

- குங்குமம் விமர்சனக் குழு