யாமிருக்க பயமே!



பேய்ப்படம்தான்... வரிசையாக மனிதர்கள் இறக்கும் வழக்கமான திகில் ப்ளஸ் மர்மம் இதிலும் உண்டு. ஆனால், ஒவ்வொரு சாவிலும் பார்வையாளர்கள் பகபகவென சிரிக்கிறார்கள். இப்படியொரு வெரைட்டி ட்ரீட்டில் வித்தியாசம் காட்டியிருக்கிறது ‘யாமிருக்க பயமே!’லேகியம் லெவலில் ஏமாற்றிக் கொண்டிருக்கும் கிருஷ்ணாவுக்கு அதனாலேயே பிரபல ரவுடியோடு பகை. லிவிங் டுகெதர் காதலியான ரூபா மஞ்சரியோடு எங்கடா ஓடலாம் என யோசிக்கும் அவருக்கு,

அப்பாவின் சொத்தாக வந்து சேருகிறது அந்த எஸ்டேட் பங்களா. யெஸ், நினைத்தபடியே அதுதான் பேய் பங்களா. அதை தங்கும் விடுதியாக்கி பணம் பார்க்கும் அவர்களின் ஆவல் நிறைவேறியதா? பங்களாவை யார் வாங்கினாலும், அடுத்த பௌர்ணமிக்குள் அந்த ஓனரை பலி வாங்கி விடும் பேயிடமிருந்து தப்பினார்களா? இதுதான் மீதிக்கதை.

போஸ்டரைப் பார்த்து ஏதோ திகில் திரைக்கதை என யூகித்துப் போனால், கிச்சுகிச்சு மூட்டுகிறது கிருஷ்ணா அண்ட் கோ. பங்களாவின் பாதுகாவலர்களாக கருணாவும் அவர் தங்கை ஓவியாவும் சேர்ந்து கொள்ள, அந்த நால்வர் படை பேயோடு விளையாடி, உறவாடி, மல்லுக்கட்டி ஆட்டம் போடுகிறது. லிவிங் டுகெதர் வாழ்க்கை, தங்கையை வைத்து பங்களா ஓனரை வளைக்கும் திட்டம் எனப் படம் முழுக்க கலாசார எல்லைகளை கண்டபடி தாண்டிக் குதித்திருக்கிறார்கள்.

‘நான் உன் ஒரிஜினல் அப்பா’ எனக் கடிதம் வந்ததும், சுவரில் போட்டோவாக தொங்கும் தன் சர்டிபிகேட் அப்பாவைப் பார்த்து, ‘இந்தாளுக்கு நான் பொறந்திருக்க மாட்டேன்னு அப்பவே நினைச்சேன்’ என கிருஷ்ணா சொல்வது அந்த அதகளத்தின் உச்சம்.

இரட்டை அர்த்த வசனங்களும் கொஞ்சம் தூக்கல். ‘நான் நடிச்ச பிட்டுப் படத்தை நீங்கல்லாம் பார்த்தது ஓகே... ஸ்மிதா எப்படிப் பார்த்தா?’ எனக் கருணா கேட்கும்போது, தியேட்டரில் வரிசை பேதமின்றி க்ளாப்ஸ். பயமுறுத்தும் இடங்களில் எல்லாம் சிரிக்க வைத்துவிட்டு, ‘வாடா வாடா பன்னி மூஞ்சி வாயா’ என்ற ஜாலி வாக்கியத்தை வைத்து திகிலூட்டியிருப்பது நன்று. கட்டக் கடைசியில் வந்து போனாலும் ‘பிரதர் மயில்சாமி’, பிரமாதம்.

ஓவியாவை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தவில்லை என்பது ஆறுதல். ஆனாலும், ஓவியா - ரூபா சக்களத்தி சண்டையே அடிக்கடி வருவது கொஞ்சம் திகட்டல். பேயால் இறந்த ஓனர்கள் லிஸ்ட்டில் கிருஷ்ணாவின் அப்பா மட்டும் இடம்பெறாமல், இயற்கையாய் இறந்தது எப்படி? இயக்குனர் டிகே, ஒட்டுமொத்தத் திரைக்கதையால் நம்மை ஈர்க்கிறார். ஆனால், காட்சிகளைப் படமாக்கும் நேர்த்தி சுமார் ரகம். குறிப்பாக, ஆரம்பக் காட்சிகளில் எல்லா கேரக்டர்களிடமும் டயலாக் டெலிவரியில் செம செயற்கைத்தனம். அதனாலேயே முதல் பத்து நிமிடம் கடுப்பேற்றுகிறது.

வேண்டிய இடத்தில் திகில் காட்டுவது... காமெடி பண்ணும்போது கமுக்கமாவது என ராமியின் கேமரா விளையாடி இருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் வழக்கம் போல் வாவ்! பாடல்கள் எதுவும் பளீரென்று ஈர்க்கவில்லை. எனினும் குறை சொல்ல முடியாத பின்னணியில் பாஸ் பண்ணிவிட்டார் இசையமைப்பாளர் பிரசாத். ஆகாவென அள்ளிக் கொள்ளவில்லை என்றாலும் ‘அட!’ போட வைத்துவிட்டது ‘யாமிருக்க பயமே!’

-குங்குமம் விமர்சனக் குழு