எங்கேயோ பார்த்த முகம்
காமெடி சங்கர் Feeling Proud!
‘‘போன முறை போண்டா மணியைப் பார்த்தீங்களாம்ல... அப்புறம் நம்ம மனோகரைப் பாருங்க; பெஞ்சமின், கிங்காங், ‘அம்பானி’ சங்கர், இவங்களையும் பேட்டி எடுங்க சார்...’’ - ஒவ்வொரு பேட்டியின்போதும் அடுத்தவரை ரெகமெண்ட் செய்யும் குணம் காமெடி நடிகர்களுக்கே உரியது.

போட்டி, பொறாமை இல்லாம நம்பர் கொடுத்து பேசச் செய்யும் பெருந்தன்மை அது. ‘‘ஜெயம் ரவி சாரோட ஷூட்டிங்ல இருக்கேன். அடுத்த வாரம் சென்னை வந்திடுவேன்... கூப்பிடுறேன் சார்!’’ என்ற சங்கர், சொன்னதைச் செய்தார்.
விருகம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் சாலையில், சின்னதாக ஒரு பாலம். அதிலிருந்து இடதுபுறம் திரும்பினால், ஒன்றரை கி.மீ தூரத்திற்குப் பின் கண்ணில் பட்டது ‘அம்பானி’ சங்கரின் வீடு. ‘‘ஒரிஜினல் அம்பானி வீடு பார்த்திருக்கீங்களா பாஸ்?’’ என நாம் வாட்ஸ்அப்பில் வந்ததைக் காண்பிக்க... விழிகள் விரிகிறது மனிதருக்கு.
‘‘நம்ம ஃப்ரெண்ட் குடியிருந்த வீடு சார். எனக்குக் கல்யாணம் ஆன பிறகு, அவரு இதைக் கொடுத்துட்டு மாடியில குடி போயிட்டார். சாலிகிராமம், கோடம்பாக்கம்னு எல்லாமே இங்கிருந்து பக்கம்!’’ - தங்கள் இருப்பிடப் பெருமை சொல்லி தம்பதி சமேதமாக வரவேற்கிறார்கள்.
‘‘மதுரை - திருமங்கலம் எனக்கு சொந்த ஊர். அப்பா சோடா கம்பெனியில வேலை பார்த்தாங்க. பத்தாங் கிளாஸுக்கு அப்புறம் டி.டி.பியில டிப்ளமோ முடிச்சேன். ஸ்கூல் டிராமால எல்லாம் நடிச்சிருக்கேன். ‘சினிமாவில் நடிக்கப் போ... வடிவேலு அண்ணன் மாதிரி நீயும் வந்துரலாம்’னு பசங்க உசுப்பேத்தினாங்க.
அப்போ, ‘சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை’ன்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்து எழுதிப் போட்டேன். நேர்ல வரச் சொல்லி லெட்டர் வந்துச்சு. அப்பாவும் நானும் சென்னைக்கு வந்து, அந்த ஆபீஸைத் தேடிப் பிடிச்சிப் பார்த்தா, அது வெறும் உப்புமா கம்பெனி. ‘முன்பணமா ஐந்நூறு வெட்டுங்க... ஷூட்டிங் எப்போன்னு லெட்டர் போடுறோம்’னாங்க.
‘வந்தது வந்துட்டோம்... வள்ளுவர் கோட்டம் பக்கத்துல நம்ம ஊர்க்காரர் ஒருத்தர் இருக்கார். அவரைப் போய்ப் பார்த்துட்டுக் கிளம்பலாம்’னு அப்பா கூட்டிட்டுப் போனார். அப்ப கண்ல பட்டுச்சு பாக்யராஜ் சார் ஆபீஸ். நாங்க போனது நல்ல நேரம்... நாய் குட்டி போட்டிருந்ததுன்னு அதைப் பார்க்க பாக்யராஜ் சாரே வெளிய வந்து நின்னுட்டிருந்தார். நேரா போய் வாய்ப்பு கேட்டேன். ‘சினிமாவுல அவ்வளவு ஈஸியாவெல்லாம் சான்ஸ் கிடைச்சிடாது தம்பி. நீ டி.டி.பி. முடிச்சிருக்கே...
நம்ம பத்திரிகையில வேலை பார்த்துட்டு, ஆபீஸ்லயே தங்கிக்கோ’ன்னு எனக்கு அடைக்கலம் தந்தார். அங்கேயே இருந்தபடி வாய்ப்பு வருமான்னு வாசலையே பார்த்துக்கிட்டு தவம் கிடந்தேன்! அந்தப் பொறுமை வீண் போகல. ஒரு தடவை பாக்யா ஆபீஸுக்கு வந்த லிங்குசாமி சார் கிட்ட நடிக்க சான்ஸ் கேட்டேன்.
பெரிய மனசு அவருக்கு... ‘ஜி’ படத்துல எனக்கு வாய்ப்பு கொடுத்தார். எடுத்ததுமே அஜித் சார், த்ரிஷா காம்பினேஷன். ஷூட்டிங் பிரேக் அப்போ, குட்டிப் பையனாச்சேன்னு என் பக்கம் த்ரிஷா நின்னு பேசிட்டிருந்தாங்க. உடனே லிங்குசாமி சார், ‘த்ரிஷா... அவருக்கு உங்க வயசுதான் ஆகுது’ன்னு கலாய்ச்சு விட்டுட்டார். ‘நானும் க்யூட் பாய்னு நினைச்சேனே...’ன்னு அஜித் சாரும் கூடவே கலாய்க்க, அன்னிக்கு ஸ்பாட்ல என்னை வச்சு செம காமெடி. இதுதான் நம்ம ப்ளஸ்னு அப்ப புரிஞ்சுது!
‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘குசேலன்’னு வடிவேலு அண்ணன் கூட மட்டும் 5 படங்கள். ஆனா, அதுல ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ காமெடிதான் பீக். அரை நாள்தான் ஷூட்டிங் நடந்திருக்கும். டயலாக், மாடுலேஷன்னு வடிவேலு அண்ணன் சொல்லிக் கொடுத்ததை அப்படியே பண்ணினேன். அது செம ரீச். அதுக்கு அப்புறம் முப்பது படங்கள் பண்ணிட்டேன். அந்த காமெடியைத்தான் இன்னும் சொல்றாங்க. என் மனைவிக்குக்கூட பிடிச்ச காமெடி அதான்.
விவேக் சாரோட 3 படங்கள் நடிச்சிருக்கேன். கருணாஸ் சாரோட ‘அம்பாசமுத்திரம் அம்பானி’யில படம் முழுக்க வருவேன். அந்தப் படம் பண்ணின பிறகுதான், ‘அம்பானி’ சங்கர்னு பேரு வந்துச்சு. அம்புட்டு பெரிய பணக்காரரு... நம்ம பேர்ல அவரு பேரைச் சேர்த்துச் சொல்றாங்கன்னா பெருமைதானே. அந்த பேருக்கு ஒரு பவர் இருந்தா நாமளும் பெரிய வீடு கட்டுவோம் சார்.
இப்பவும் பாக்யராஜ் சார் என்னைப் பத்தி பெருமையா பேசுவார். இருக்கும்போது அந்த அளவு உண்மையா உழைச்சிருக்கேன். 2012 ஜூன் 10ல கல்யாணம் ஆச்சு. மனைவி மோனிகா
நந்தினிக்கும் திருமங்கலம்தான். 2013 ஜூன் 11 அன்னிக்கு பொண்ணு பொறந்தா.
பேரு ஹரிணி. பெரிய பிசினஸ்மேன் இல்ல... காசு காசுன்னு அலையிற ஜென்மம் இல்ல... பொழைப்பைத்தான் பார்க்கறோம். ஆனாலும், பொண்ணு பொறந்தப்ப கூட இருந்து பார்த்துக்க முடியல. அன்னிக்கு வெளியூர் ஷூட்டிங். நம்ம வேலை இப்படித்தான்னு வொய்ஃபும் புரிஞ்சிக்கிறாங்க. இப்போ ஆறு படங்களுக்கு மேல நடிச்சிட்டிருக்கேன். அதுல நாலு படங்கள்ல ஹீரோவுக்கு ஃப்ரெண்டா நல்ல ரோல் கிடைச்சிருக்கு. என் இன்ஸ்பிரேஷனே வடிவேலு அண்ணன்தான். அவரை மாதிரி ஆகணும்.
காமெடியில மட்டுமில்லாம சென்டிமென்ட், குணச்சித்திர கேரக்டர்கள்லயும் பெயரெடுக்கணும்னு விரும்புறேன். காமெடியன்னா வயசு தெரியக் கூடாது. ஹீரோக்கள் மாறி மாறி வந்தாங்க... எல்லார் கூடவும் கவுண்டமணி சார் ஃப்ரெண்டா நடிச்சார் இல்லையா? அப்படி இருக்கணும். இயற்கையாவே எனக்கு வளர்ச்சி ஸ்லோதான்.
பார்த்தா என் வயசைச் சொல்ல முடியாது. சினிமாவிலும் அதே மாதிரி ஸ்லோவா வளர்ந்தா போதும். ஆனா வளரணும்... அதுதான் முக்கியம்!’’அந்தப் படம் பண்ணின பிறகுதான், ‘அம்பானி’ சங்கர்னு பேரு வந்துச்சு. அம்புட்டு பெரிய பணக்காரரு... நம்ம பேர்ல அவரு பேரைச் சேர்த்துச் சொல்றாங்கன்னா பெருமைதானே!
மை.பாரதிராஜா
படங்கள்: ஆர்.சந்திரசேகர்