திட்டித் தீர்த்த பேட் பாய் கோஹ்லி



உலகக்கோப்பை கிரிக்கெட் 2015

ஆரம்ப சறுக்கல் கண்ட அணிகள் கூட மெல்ல சுதாரித்து கால் இறுதி வாய்ப்பை உயிர்ப்பிக்கும் முயற்சியில் உறுதியாக இருப்பதால், இந்த வாரத்தில் இரண்டு பிரிவுகளிலுமே சுவாரசியம் கூடியிருக்கிறது. டி வில்லியர்ஸ், வார்னர், மேக்ஸ்வெல், சங்கக்கரா அதிரடி ஆட்டம் அநியாயத்துக்கு அனல் கிளப்ப... கொதிக்கிறது கோப்பை! அளவுக்கு அதிகமாகவே அலட்டிக் கொண்டிருந்த அயர்லாந்தை அதட்டி மிரட்டி அமர வைத்தது தென் ஆப்ரிக்கா. டாப் டீம்களில் இங்கிலாந்துக்கு மட்டுமே நேரம் சரியில்லை.

இலங்கைக்கு எதிராக ஜோ ரூட் அழகாக சதமடித்து 310 ரன் இலக்கை நிர்ணயித்தபோது இங்கிலாந்து வீரர்கள் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடிந்தது. திரிமன்னே (139), சங்கக்கரா (117) அடித்து நொறுக்க, தொங்கிப் போனது இங்கிலாந்து. ‘ஆடியது போதும், மூட்டை கட்டிக் கொண்டு ஊருக்குத் திரும்புங்க. இதுக்கு மேலும் அவமானப்பட முடியாது’ என்று அந்நாட்டு மீடியாவும், ரசிகர்களும் அணியை வாருகிறார்கள்.

இலங்கை அணியின் எழுச்சி மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது. தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளுடன் கால் இறுதியில் முதல் அணியாக கால் வைத்திருக்கும் நியூசிலாந்து, எந்தக் கவலையும் இல்லாமல் சிறகடிக்கிறது. தோல்வி பற்றிய பயம் கொஞ்சமும் இல்லாமல் கடைசி வரை அடித்து ஆடும் பாசிட்டிவ் அப்ரோச் அந்த அணியின் பலம்.

கேப்டன் மெக்கல்லம் காலில் வெந்நீரைக் கொட்டிக்கொண்டுதான் களத்துக்குள் வருவார் போலிருக்கிறது. அவரது அவசரம் அடுத்து வரும் வீரர்களையும் தொற்றிக் கொள்கிறது. ‘‘விக்கெட் ஒரு பக்கம் வீழ்ந்து கொண்டிருந்தாலும், ஆட்டத்தை சீக்கிரம் முடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது நாக் அவுட் சுற்றில் ஆபத்தாகி விடும்’’ என எச்சரிக்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.

நியூசிலாந்திடம் சரணடைந்ததால் சற்று சோர்வில் இருந்த ஆஸ்திரேலியாவுக்கு, ஆப்கானிஸ்தான் ஆட்டம் புது உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. வார்னர் (178), ஸ்மித் (95), மேக்ஸ்வெல் (88) வரிசையாகக் கொட்டியதில் ஆப்கன் தலை புடைத்துப் போனது. உலகக் கோப்பையில் அதிக ஸ்கோர் (417) சாதனையும் ஆஸி. வசமானது.சராசரியாக இரண்டு ஆட்டத்துக்கு ஒரு சதம் என்ற நிலை மாறி, ஆட்டத்துக்கு ஆட்டம் சதம், 300+ ஸ்கோர் என்று ஸ்பீடு பொறி பறக்கிறது. பரிதாப நிலையில் இருந்த பாகிஸ்தான் கூட தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. 

இந்திய வீரர்கள் வாலிபால் விளையாடுவது, திராட்சை தோட்ட விசிட் என்று ரிலாக்ஸ் செய்தார்கள். ‘‘டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் போன்றவர்கள் அட்டகாச ஃபார்மில் இருக்கும்போது அவர்களைக் கட்டுப்படுத்துவது கடினம்’’ என்று கேப்டன் டோனி சொன்னது தற்காப்பு ஸ்டேட்மென்ட்டாகவே தெரிந்தது. தன்னையும் தோழி அனுஷ்கா ஷர்மாவையும் விமர்சித்து கட்டுரை வெளியிட்ட நிருபர் இவர்தான் என்று தவறாக நினைத்து விராத் கோஹ்லி காச் மூச்சென்று கத்தித் தீர்த்த சம்பவம் பெரிய பிரச்னையாகிவிட்டது.

சம்பந்தப்பட்ட நிருபர் ஐசிசி, பிசிசிஐ நிர்வாகிகளுக்கு புகார் கடிதம் அனுப்ப, இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் அட்வைஸ் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். சச்சின் மாதிரி விளையாடினால் மட்டும் போதாது; அவருடைய ஒழுக்கம், எதிரணி வீரர்களையும் மரியாதையுடன் நடத்துவது, சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாமல் சமாளிப்பது என்று கோஹ்லி கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். இந்திய இளைஞர்களின் ஃபேஷன் ஐகான் ஆக விளங்குபவர், இப்படி கீழ்த்தரமாக நடந்துகொள்வதை சகித்துக் கொள்ளவே முடியாது.

அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரியின் ஓவர் கான்பிடன்சும் கொஞ்சம் உறுத்தல். ‘‘உலகக் கோப்பைக்கு முன்பாக முத்தரப்பு தொடரில் விளையாடியது தேவையற்றது. நேரமும் ஆற்றலும் விரயமானதுதான் மிச்சம்’’ என்ற அவரது கமென்ட் சிறந்த நகைச்சுவை. அதில் ஜெயித்திருந்தால், ‘‘முத்தரப்பு தொடர் நல்ல பிரிப்பரேஷனாக இருந்தது’’ என்று சொல்லியிருப்பார். எப்படியோ, டீம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் வரை பெரிதாக பிரச்னை இருக்காது. சொதப்ப ஆரம்பித்தால்தான் சோதனை.

‘அடுத்த உலகக் கோப்பையில் நான்கு அணிகளைக் கழற்றிவிட்டு வெறும் பத்து அணிகளை மட்டும் விளையாட வைக்கலாம்’ என்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் யோசனையை சச்சின் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ‘‘இது ஜான் ஏறி முழம் சறுக்குவது போல. உலக அளவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 25 அணிகளாவது அடுத்த உலகக் கோப்பையில் ஆட வேண்டும். அதற்கான வேலையைப் பாருங்கள்’’ என்கிறார் கோப்பையின் விளம்பரத் தூதர்!

சச்சின் இருந்தவரை, ‘உலகக் கோப்பை ரன் குவிப்பில் இந்திய அணியை யாராலும் அலட்சியப்படுத்த முடியாது’ என்ற நிலையே இருந்தது. இப்போது கண்ணில் எண்ணெய் விட்டுத் தேடினாலும் டாப் 10ல் ஒரு இந்திய பேட்ஸ்மேனைக் கூட பார்க்க முடியவில்லை (வெஸ்ட் இண்டீஸ் லீக் ஆட்டத்துக்கு முன் வரை). அதிசயம் என்னவென்றால், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஷைமன் அன்வர் முதல் இடத்தில் இருப்பதுதான். இலங்கையின் 37 வயது அனுபவ வீரர் சங்கக்கரா இரண்டு சதம் விளாசி இளம் வீரர்களுக்கு சவால் விட்டிருக்கிறார். விக்கெட் வேட்டையிலும் நியூசிலாந்தின் டிம் சவுத்தீ வெகு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார். நம் அஷ்வின், ஒரே ஆறுதல்.

கடைசி கட்ட ஓவர்களில் ரன் குவிப்பதில் இந்திய அணியைத் தவிர்த்து மற்ற எல்லா அணிகளுமே சிறப்பாகச் செயல்படுகின்றன. கடைசி 10 ஓவரில் 100 ரன் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் என்பது பகல் கனவு என்றிருந்ததை சச்சின் தகர்த்தெறிந்த பிறகு, எல்லோருக்குமே நம்பிக்கை வந்திருக்கிறது. ரோகித் ஷர்மா, சேவக், கிறிஸ் கெயில் என்று பட்டியல் வளர ஆரம்பித்திருக்கிறது. ‘‘ஒரு நாள் போட்டியில் முச்சதம் அடிக்கப்பட்டால் ஆச்சரியப்படாதீர்கள்.

மெக்கல்லம், வார்னர், டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், கோரி ஆண்டர்சன் ஆட்டத்தைப் பார்க்கும்போது அதற்கான நேரம் நெருங்கிவிட்டது என்றே நினைக்கிறேன்’’ என்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க். அப்படியே அணியின் ஸ்கோர் 500ஐத் தாண்டினாலும் அதிசயப்படாதீர்கள் ஜென்டில்மென்.

பாகிஸ்தான், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராகப் பெற்ற வெற்றிகள் தற்செயல் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் டோனி அண்ட் கோவுக்கு உள்ளது. கோஹ்லி போல தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாமல் கோப்பையே குறியாக இருந்தால் சாதிக்கலாம்.

- ஷங்கர் பார்த்தசாரதி